Published:Updated:

காற்று மாசுபாட்டால் எந்த நாட்டில் மரணம் அதிகம்... தெரியுமா?

காற்று மாசுபாட்டால் எந்த நாட்டில் மரணம் அதிகம்... தெரியுமா?
News
காற்று மாசுபாட்டால் எந்த நாட்டில் மரணம் அதிகம்... தெரியுமா?

காற்று மாசுபாட்டால் எந்த நாட்டில் மரணம் அதிகம்... தெரியுமா?

லக அளவில் காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளாக சீனாவும், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வந்தது. சீனாவை நவீன தொழில்நுட்ப திட்டங்களில் முந்தாத இந்தியா தற்போது காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகளால் முந்தியடித்து முதலிடத்தில் இருக்கிறது. தலைவலி, தலைச்சுற்றல், கண், மூக்கு பகுதியில் எரிச்சல் என ஆரம்பித்து புற்றுநோய், ஆஸ்துமா என நீண்டு தற்போது இறப்பு வரை கொண்டு போய் நிறுத்தியுள்ளது.
காற்று மாசுபாட்டால் 2015-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 1,641 பேரும், இதே காற்று மாசுபாட்டால் 1,616 பேரும் உயிரிழந்துள்ளனர் என சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கிய அளவியல் மற்றும் மதீப்பீட்டு கழகம் அளித்த தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இப்படியொரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது, கிரீன்பீஸ் இந்தியா அமைப்பு.

    2010-ம் ஆண்டு காற்றுமாசுபாடு காரணமாக சீனாவில் நாள் ஒன்றுக்கு 1,595 பேரும், இதே ஆண்டில் இந்தியாவில் 1,432 பேரும் உயிரிழந்துள்ளனர். 1990-ல் 1,070-ஆக இருந்த உயிரிழப்பு, கடந்த 2015-ல் 1,641 ஆக அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சீனாவில் தற்போது குறைந்துள்ளது. இதற்குக் காரணம், தொழிற்சாலைகளின் உற்பத்தியைக் குறைத்தது, மக்கள் வெளியில் செல்லத் தடை விதித்தது, வெளியில் சென்றாலும் கூட மாஸ்க் அணிந்து கொண்டு வெளியில் செல்வதை கட்டாயமாக்கியது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதற்கும் ஒருபடிமேலே போய் காற்று மாசுபாட்டால் சீனா முதலிடம் என்பதால் விழிப்பு உணர்வினை ஏற்படுத்த தவறவில்லை. இந்தியாவில் காற்று மாசுபாடு பற்றி எந்த ஒரு விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தாததே இந்தியா முதலிடம் பிடித்திருப்பதற்கு காரணம். சீன மக்களின் ஒவ்வொருவரின் ஸ்மார்ட் போன்களிலும் 'ஏர் குவாலிட்ட ஆப்’கள் உள்ளன. இதன் மூலம் செல்லும் இடங்களில் காற்றின் தரத்தின் அளவை சோதனை செய்து கொண்டே இருக்கின்றனர். இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வந்த காற்று மாசுபாடு கடந்த 2015 முதல் மிகவும் மோசமடைந்துள்ளது.
             

காற்று மாசுபாடு அதிகரிக்க மக்கள்தொகைப் பெருக்கம் என்று ஒரு காரணம் சொல்லப்பட்டு வந்தாலும், மாசுபாட்டின் அளவைக் குறைக்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. உலக மக்கள் தொகையில் 90 சதவீதத்துக்கும் மேலானோர் அதிகளவு காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வாழ்ந்துவருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதி, தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகள் ஆகியவை காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிகப்பட்ட பகுதிகளாகவும் காட்டப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் அதிக காற்று மாசுபாடடைந்த 10 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் காற்று மாசுபாட்டால் பாதிப்படைந்துள்ளதால் இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்புண்டு. இந்தியாவில் 3 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் காற்றுமாசுபாடு தொடர்ந்தால் 70 லட்சம் பேர் இறக்கக்கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

        மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை ஆகியவைதான் காற்று மாசுபடுதலுக்கு மிக முக்கிய காரணம். இவைதான் நாம் சுவாசிக்கும் காற்றினை அசுத்தப்படுத்துகிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் நைட்ரஜன்கள் மற்றும் கந்தக ஆக்ஸைடுகள், வாகனங்களிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு, உலோகம் பிரித்தெடுக்கும் ஆலைகளிலிருந்து வெளிவரும் உலோகத் துகள்கள், ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை காற்றை அதிகளவில் மாசுபடுத்துகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 70 சதவீத காற்று மாசுபாடு வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படுகிறது. இந்தியாவிலேயே அதிக வாகன எண்ணிக்கையில் மூன்றாவது இடத்திலுள்ளது சென்னை. நீரையும், நிலத்தையும் மாசுபடுத்தும் சீமைக் கருவேலம் மரங்கள், யூகலிப்டஸ் ஆகிய மரக்கன்றுகளை அழித்து, அடர்ந்து வளரும் மரக்கன்றுகளை நடவேண்டும்.

     அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் வெளியிடும் நுண் துகள்கள், கார்பன் மோனாக்ஸைடு, கந்தக ஆக்ஸைடு ஆகிய விஷ வாயுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். ஈயமில்லாத பெட்ரோலை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்துதல், மரபுசாரா எரிசக்தியாகிய காற்று, சூரியஒளியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தித் தொழிற்சாலைகளை அதிகப்படுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் செய்வதோடு அரசும் கடுமையான சட்டங்கள் மூலம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே காற்று மாசுபடுதலை ஓரளவு குறைக்க முடியும். இது அனைவருக்குமே தெரிந்த வழக்கமான முறை என்றாலும் நவீன தொழில்நுட்பங்களையும், சீனாவைப் போல கடுமையான சட்டங்கள், மாற்று வழிகளை துரிதமாக மேற்கொள்வதன் மூலம் மட்டுமே எதிர்வரும் காலங்களில் காற்றில் கலக்கும் மாசுக்களை கட்டுப்படுத்த முடியும்.  


        ஒரு மனிதன் உயிர்வாழத் தேவையானது உணவு, காற்று, நீர் உணவின்றி சில நாட்கள் வாழ முடியும். குடிக்க நீரின்றி சில மணி நேரங்கள் வாழமுடியும். ஆனால் காற்றின்றி உயிர்வாழ முடியாது. சீனாவில் 3 லிட்டர் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 32 டாலாராம். இந்திய மதிப்பில் 2,100 ரூபாய். இந்த நிலை நீடித்தால் தண்ணீரை பாட்டிலில் விலை கொடுத்து வாங்கிச் செல்வதைப் போல காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை நிச்சயம் வரும். வருங்கால தலைமுறைக்கும், அதற்கடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்திருக்கும் நாம் சுத்தமான காற்றையும் விட்டுச் செல்லவேண்டும்.
 
 - இ.கார்த்திகேயன்