Published:Updated:

மூட்டுவலி... வைக்கலாம் முற்றுப்புள்ளி! நலம் நல்லது–14 #DailyHealthDose

மூட்டுவலி... வைக்கலாம் முற்றுப்புள்ளி! நலம் நல்லது–14 #DailyHealthDose
மூட்டுவலி... வைக்கலாம் முற்றுப்புள்ளி! நலம் நல்லது–14 #DailyHealthDose

மூட்டுவலி இப்போது வயதானவர்களுக்கு மட்டும் வருவது இல்லை. இளைஞர்கள்கூட அதிக அளவில் மூட்டுவலி என்று மருத்துவமனைக்கு வரத் தொடங்கிவிட்டனர். இடுப்பில் வலி, கால் மூட்டில் வலி, தோள் மூட்டில் வலி, கழுத்து வலியோ… அப்படியே பரவி பின்பக்க தோள், முன்கை, முழங்கை வலி… என இளமையில் விரட்டும் மூட்டுவலி இன்று ஏராளம். இன்றைய மாடர்ன் கிச்சனால் மறந்துபோன பாரம்பர்யம், கூடிவிட்ட சொகுசு கலாசாரம், வாழ்வியல் மாற்றங்கள்தான் மூட்டுக்களை (Joints) இளமையிலேயே வலுவிழக்கச் செய்கின்றன. அவற்றின் வலுவைக் கூட்டி, நம் வாழ்வை உற்சாகத்துடன் ஓடவைக்க(!) என்ன செய்யலாம்? 

* உங்களால் நம்ப முடியுமா? ஒரு மாருதி காரைத் தாங்கும் வலு நம் ஒவ்வொரு கால் மூட்டுக்கும் உண்டு. ஆனால், அதற்கான உணவும் உழைப்பும் சீராக இருந்திருக்க வேண்டும். இளம் வயதிலிருந்தே உணவில் சரியான அளவில் கால்சியம், இரும்புச்சத்து, துணை கனிமங்கள் சேர்ந்த ஆரோக்கிய உணவுகளை அன்றாடம் சேர்ப்பதுதான் மூட்டுப் பாதுகாப்பில் தொடக்கப் புள்ளி. 

* ஒன்று முதல் ஒன்றரை வயது வரை கட்டாயமாகத் தாய்ப்பால். பிறகு ஆறிலிருந்து எட்டு வயது வரை கண்டிப்பாக தினசரி நவதானியக் கஞ்சி, கீரை சாதம், அடிக்கடி தேங்காய்ப்பால் சேர்த்த காலை உணவு, மோர், பீன்ஸ், அவரை, டபிள் பீன்ஸ், வெண்டைக்காய், கேரட் என காய்கறி கலந்த மதிய உணவு மிக மிக அவசியம். 

* குழந்தையை தினசரி இரண்டு மணி நேரம் வியர்க்க வியர்க்க விளையாட விட வேண்டும். கம்ப்யூட்டர், மொபைல் விளையாட்டு அல்ல… கில்லியோ, கிரிக்கெட்டோ நன்றாக ஓடி வியர்க்க விளையாடும் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். கிரிக்கெட்டைக் காட்டிலும், வியர்க்க வியர்க்க ஓடி, ஆடி விளையாடும் எந்த விளையாட்டும் உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்கும். மூட்டுகளை உறுதிப்படுத்தும்.  

* செல்ல தொப்பை, உடல்பருமனுடன் குழந்தை இருக்கிறானா? அவனை குடும்ப மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு போய் ஊளைச்சதை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால், அதிக உடல் எடைதான் பெரும்பாலான மூட்டுவலிக்கு முக்கியக் காரணம். 

* அதிக புளிப்பு, மூட்டுகளுக்கு நல்லதல்ல. புளி அதிகம் சேர்க்கப்படும் புளிக்குழம்பு, காரக்குழம்பு, புளியோதரை இவற்றை மூட்டுவலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. `புளி துவர் விஞ்சின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம்… கவனம்! 

* `மண் பரவு கிழங்குகளில் கருணையின்றி பிற புசியோம்’ என்று வாயுவை விலக்கி நோய் அணுகாமல் இருக்கவும் வழி சொல்கிறது சித்த மருத்துவம். எனவே, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் பொரியல் என வாயுத் தன்மையுள்ள மெனுக்களை மூட்டுவலிக்காரர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் விலக்கவேண்டியது அவசியம். 

* வலி நிவாரணிகள் பக்கம் அதிகம் போகாமல் இருக்கவேண்டியது மிக முக்கியம். பல வலி நிவாரணிகளை கண்டபடி நெடுநாட்களுக்குப் பயன்படுத்தினால், அவை நிச்சயம் சிறுநீரகத்தைப் பாதிக்கும். 

* வலி நீங்க சித்த மருத்துவத் தைலங்களைப் பயன்படுத்துவது நல்லது. 

* எண்ணெய் மசாஜ், மூட்டுவலிகளுக்கு மிகச் சிறந்தது. வலியுள்ள மூட்டு தசைப்பகுதியில் நிறைந்திருக்கும் நிண நீரை (Lymphatic Drainage) வெளியேற்ற, எண்ணெய் மசாஜ் சிகிச்சை சிறந்தது. ஆனால், சரியான, திறமையான சிகிச்சை அளிப்பவரை அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

* `ஸ்பாண்டிலோசிஸ்’ எனப்படும் கழுத்து, முதுகுப்பக்க தண்டுவட எலும்பின் மூட்டுக்கிடையிலான தட்டுகள் விலகலோ (Disc Prolapse), நகர்வோ இருப்பின் சரியான நோய்க் கணிப்பும், சிகிச்சையுடன்கூடிய உடற்பயிற்சி, பிசியோதெரப்பி, எண்ணெய் மசாஜ் மிக அவசியம். 

* தினசரி 40 நிமிட நடை. பின்னர் 15 நிமிட ஓய்வு. தொடர்ந்து 30 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சியுடன் கூடிய சூரிய வணக்கம் முதலான 4 அல்லது 5 யோகாசனங்கள், கால்சியம் நிறைந்த கீரை, புளி, வாயுப் பொருட்கள் குறைவான உணவு இவற்றுடன் கண்டிப்பாக ஒரு குவளை மோர், ஒரு கிண்ணம் பழத்துண்டு, மாலையில் 30 – 45 நிமிட நடை… போதும், மூட்டுவலி உங்களிடம் இருந்து விலகி ஓடும்.

தொகுப்பு: பாலு சத்யா