Published:Updated:

ரத்தசோகைக்கு விடைகொடுப்போம்! நலம் நல்லது–15 #DailyHealthDose

ரத்தசோகைக்கு விடைகொடுப்போம்! நலம் நல்லது–15 #DailyHealthDose
ரத்தசோகைக்கு விடைகொடுப்போம்! நலம் நல்லது–15 #DailyHealthDose

புற்றுநோய் தொடங்கி, வாய்க்குள் நுழையாத எத்தனையோ நோய்கள் வரை கவலைப்படும் நாம், அதிகம் அலட்சியமாக இருந்துவிடும் ஒரு பிரச்னை உண்டு... அது `அனீமியா’ என்று சொல்லப்படும் ரத்தசோகை! சரி... ரத்தசோகையின் அறிகுறிகள் என்னென்ன? கண்கள், நாக்கு, நகம், உள்ளங்கை இவையெல்லாம் வெளிறிப்போயிருக்கும்; படபடப்புடன் இதயம் துடிக்கும்; நடந்தால் மூச்சிரைக்கும்; ஆயாசம், சோர்வு, எதிலும் பிடிப்பில்லாத வெறுப்பு போன்றவை ரத்தசோகையின் குணங்கள். இந்த அறிகுறிகள் எல்லாமே நம் ரத்தத்தில் இரும்புச்சத்து மற்றும் சிவப்பு அணுக்கள் அதிக அளவில் குறைந்த பின்னர்தான் தெரியவரும். லேசான சோகையில், பெரும்பாலும் எந்தக் குணங்களும் தெரிவதில்லை. ரத்தசோகைக்கான காரணங்களையும் தீர்வுகளையும் பார்ப்போம்... 

* ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்குத்தான் ரத்தசோகை தொந்தரவு அதிகம் வரும் வாய்ப்பு உண்டு. மாதவிடாயின்போது ஏற்படும் இரும்புச்சத்து இழப்பு, கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் என பெண்களுக்கான பிரத்யேக செயல்பாடுகளிலேயே அதிக அளவில் இரும்புச்சத்து இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மாதவிலக்கில், அதிக ரத்தப்போக்கு அல்லது மாதவிடாயில் ரத்தமே போகாமல் இருப்பது என இரண்டுக்குமே சோகை நோய் ஒரு காரணம். மாதவிடாய்க் கோளாறுகள் பலவற்றுக்கும் சோகையே முதல் காரணம். 

* சரியான உணவு இல்லாமை, ஊட்டச்சத்து குறைந்த உணவு இவையே ரத்தசோகைக்கு மிக முக்கிய காரணங்கள். மூல நோயில் ஏற்படும் ரத்த இழப்பு, சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், வயிற்றுப் பூச்சிகள், சில புற்றுநோய்கள்... என மற்ற நோய்களாலும் ரத்தசோகை ஏற்படலாம். 

* முதலில், ரத்தசோகை இருக்கிறதா என்பதை மருத்துவர் உதவியுடன் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். ரத்தசோகையை உணவின் மூலமே சரியாக்கிவிட முடியும். அதற்கான முதல் தேர்வாக கீரை இருக்கட்டும். சிறுகீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, பசலைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை இவை அனைத்திலுமே இரும்புச்சத்து அதிகம் உண்டு. சந்தையில் கிடைக்கும் கீரைகளில் முக்கியப் பிரச்னை அதில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள்தான். வாய்ப்புள்ளவர்கள், கீரைகளை வீட்டிலேயே வளர்த்து, அன்றாடம் பறித்துப் பயன்படுத்துவது நல்லது. சமையலறைக் கழிவுகளும், இயற்கை உரங்களும், வேப்பெண்ணெய் தூவலும் உங்கள் கீரைகளைப் பாதுகாப்போடு, கூடுதல் சத்துடன் வளர்க்க உதவும். 

* எள், பனைவெல்லம் இரண்டையும் இரும்புச் சுரங்கங்கள் என்றே சொல்லலாம். இவற்றில் கிடைக்கும் இரும்புச்சத்து, நம் குழந்தைகளுக்கு அவசியமானது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே எள் உருண்டையின் மீது பிடிப்பை உருவாக்கிவிட வேண்டும். 

* கம்பு, வரகு இரண்டிலும் இரும்புச்சத்து மிக மிக அதிகம். இந்த பாரம்பர்ய தானியங்களைக்கொண்டு கம்பஞ்சோறும் வரகரிசிச் சோறும் செய்து சாப்பிடலாம். இவை மட்டுமல்ல... இந்த பாரம்பர்ய தானியங்களைக்கொண்டு புலாவ், பிரியாணி, கிச்சடி, கஞ்சி என எது வேண்டுமானாலும் செய்ய முடியும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்காவது இதுபோன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பாசிப்பயறு, தொலி உளுந்து, சிவப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய தானியங்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களும் இரும்புச்சத்தை ஜீரணிக்க உதவுபவை. 

* ரத்தசோகை உள்ளவர்கள், தினமும் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரிய நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்து, இரும்புச்சத்தை கிரகிக்க உதவும். 

* சில இரும்புச்சத்து மருந்துகள் வயிற்று எரிச்சல், குடல் புண்கள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, ரத்தசோகைக்கு சித்த மூலிகை மருந்துகளே சிறப்பானவை. 

* அனீமீயா மூலமாக அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு போன்ற பிற நோய்கள் ஏற்பட்டிருந்தால், வெறும் சத்து மாத்திரை மட்டும் போதாது; அவற்றுக்கான சிகிச்சையும் அவசியம். 

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒவ்வொருவரும் தங்கள் ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தின் அளவைப் பரிசோதனை செய்து, தெரிந்துகொள்ள வேண்டும். 

ரத்தசோகை அலட்சியப்படுத்தவேண்டிய ஒன்று அல்ல; அக்கறையோடு உடனே அலசவேண்டிய பிரச்னை! 

தொகுப்பு: பாலு சத்யா