Published:Updated:

குறட்டைக்கு ‘குட்பை’ சொல்லலாம் ஈஸியா..! #SolutiontoSnoring

குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம். ஆனால், `அது ஒரு மயக்க நிலை; ஆரோக்கியமான தூக்கம் கிடையாது’ என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

Snoring
Snoring

‘கொர் கொர்...’ என்று காதைப் பிளக்கும் குறட்டைச் சத்தத்தில் தூக்கம் தொலைத்த அனுபவம் அனைவருக்குமே இருக்கும். மேலை நாடுகளில் குறட்டைவிடும் கணவனிடமிருந்து விவாகரத்துக் கோரும் அளவுக்கு விபரீதப் பிரச்னையாகக் குறட்டை உள்ளது. தூக்கத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் பொதுவாக, ஏழு சதவிகித ஆண்களையும், நான்கு சதவிகிதப் பெண்களையும் பாதிக்கின்றன. இந்தப் பிரச்னைகளில் குறட்டை பிரதானமானது. குறட்டைவிட்டுத் தூங்கும் மனிதர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என நினைகிறோம். ஆனால், `அது ஒரு மயக்க நிலை; ஆரோக்கியமான தூக்கம் கிடையாது’ என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

இதனால், காலையில் தலைவலி, உடல்சோர்வு, வேலையில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. `நீண்டகால அளவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணாதபோது, இதயநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்குக் காரணியாகும் பிரச்னை இது’ என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அதேபோல, முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்தக்  குறட்டை பிரச்னை, தற்போது இளம் வயதினரையும் அச்சுறுத்திவருகிறது. குறட்டை ஏன் ஏற்படுகிறது... அதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் காது - மூக்கு - தொண்டை சிகிச்சைப் பிரிவுத் தலைவர்  டாக்டர் எம்.என்.சங்கர் விளக்குகிறார்

.  

குறட்டைச் சத்தம் எப்படி ஏற்படுகிறது?

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை அடைகிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை ஏற்படுகிறது.


தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?

தூங்கும்போது தொண்டைத் தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது, மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக்காற்று செல்ல முற்படும்போது குறட்டைச் சத்தம் ஏற்படுகிறது. மேலும், மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வுநிலையில் நாக்கு சிறிது உள்வாங்கி, தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும், மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டைச் சத்தம் உருவாகிறது.


என்ன காரணம்?

குறட்டைப் பிரச்னைக்கு மரபுவழி, உடல்பருமன் ஆகியவை முக்கியக் காரணங்களாகும். அதேபோல, மூக்கடைப்பு, மூக்கு இடைச்சுவர் வளைவு, சைனஸ் தொல்லை, டான்சில் வளர்ச்சி, தைராய்டு பிரச்னை போன்றவையும் குறட்டைப் பிரச்னையை உருவாக்குகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலத்தில் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். இது தவிர, புகைபிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவது உண்டு.

சிகிச்சைகள்...

நோயாளியின் உடலில் எலெக்ட்ரோடுகளைப் பொருத்தி, அதன் மூலம் அவரது மூளை அலைச் செயல்பாடு (Brain waves), இதயத்துடிப்பு (Heart rate), மூச்சின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு போன்றவை கணக்கிடப்படுகின்றன. இதனோடு, கண்கள், கால்களின் இயக்கம் ஆகியவையும் ஆய்வுசெய்யப்படுகின்றன. இந்த ஆய்வுக்கு, `தூக்க ஆய்வு’ (Sleep study) என்று பெயர்.
இந்த ஆய்வில் மூச்சுக்காற்று ‘சீபேப்’ (CPAP- Continuous Positive Airway Pressure Ventilation) எனும் கருவி மூலம் அளக்கப்படும். இதன் முடிவுக்கு ஏற்ப மருந்து, மாத்திரை அல்லது அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதற்கான சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

குறட்டை, தூக்கக் குறைபாடு, தூக்கத்தில் நடப்பது, வாய்வழியாக மூச்சுவிடுவது போன்ற தூக்கம் தொடர்பான குறைபாடுகளுக்கு (Sleep Disorders) சிகிச்சை அளிப்பதற்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய ஆய்வுக்கூடம் (Sleep Lab) அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.  தூக்கத்தை ஆய்வு செய்வதற்கான `பாலிசோமோனோகிராபி' (Polysomnography) என்ற நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது.

குறட்டையை கட்டுப்படுத்த வழிகள்...

1.தூங்கச் செல்வதற்கு முன்னர் துரித உணவுகள்,  கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

2.சளி, மூக்கடைப்பு தொந்தரவு இருந்தால், தூங்கச் செல்வதற்கு முன்னர் சுடுநீரில் ஆவிபிடிப்பது நல்லது. இது மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள தற்காலிக அடைப்பு நீங்கி, காற்று எளிதாகச் செல்ல வழிவகுக்கும்.

3.உயரமான தலையணையை (கழுத்து வலி ஏற்படாதவாறு) தலைக்கு வைத்துப் படுப்பதன் மூலம் குறட்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

4.மல்லாந்து படுப்பதைத் தவிர்ப்பதுடன், ஒருபக்கமாக ஒருக்களித்துத் தூங்கினால் குறட்டை ஏற்படாது.

5.மது, சிகரெட் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். குடிக்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் எந்த ஒரு மருந்தும் குறட்டையைக் குறைக்க உதவாது.

6.குறட்டை பிரச்னைக்கான முக்கிய காரணமே உடல்பருமன்தான். எனவே முறையான உணவுபழக்கம், உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது, குறட்டைப் பிரச்னைக்கு நல்ல தீர்வு.


குறட்டையைத் தடுப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், அவை தற்காலிகத் தீர்வாகவே அமையும். முழுமையான தீர்வாகாது. எனவே, அவரவர் பிரச்னைக்கு ஏற்ப  எது சரியானது என்பதை மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில், முறையான சிகிச்சை எடுத்து, சரிப்படுத்துவதே சிறந்தது.
 

- ஜி.லட்சுமணன்