Published:Updated:

500 கிலோ உடல் எடையை குறைக்க இந்தியா வரும் எகிப்து பெண்!

500 கிலோ உடல் எடையை குறைக்க இந்தியா வரும் எகிப்து பெண்!
500 கிலோ உடல் எடையை குறைக்க இந்தியா வரும் எகிப்து பெண்!

500 கிலோ உடல் எடையை குறைக்க இந்தியா வரும் எகிப்து பெண்!

80 கிலோ எடையைக் குறைக்க  ஜிம்முக்குப் போவது, பேலியோ டயட் இருப்பது, ஏரோபிக்ஸ் செய்வது  எனக் கடுந்தவம் இருந்துகொண்டிருப்பவர்கள் இமான் அஹமது அப்துலாட்டியைப் பார்த்து ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள். யார் அவர் என்கிறீர்களா? 36 வயது எகிப்துக்காரரான இமான்தான்  உலகில் அதிக எடை உள்ள பெண். எடை அப்படி ஒன்றும் அதிகம் இல்லை, ஜஸ்ட் 500 கிலோதான்.   

அதிக உடற்பருமன் காரணமாக கடந்த 25 வருடங்களாக வீட்டைவிட்டு வெளியே வராத, இவர் தற்போது பல்வேறு நோய்களால் உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவர் விரைவில் உடல் கொழுப்பை நீக்கும் அறுவைசிகிச்சைக்காக மும்பை வருகிறார்.

பால்ய வயதில் யானைக்கால் வியாதியால் (Elephantiasis) பாதிக்கப்பட்ட இமானின் கை, கால்கள் வீக்கம் அடையத் தொடங்கின. ஃபிலரியல் புழுக்களால் (Filarial worm) பரவும்  ஒட்டுண்ணித் தொற்றான (Parasitic infection) இந்த நோய், பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்களின் உடலுக்குள் செல்லும். இந்தத் தொற்றின் தாக்கத்தால் நாளுக்கு நாள் இமானின் எடை கூடிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் இருந்த இடத்தில் இருந்து எழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். குளிப்பது, சாப்பிடுவது போன்ற அன்றாட வேலைகளுக்கே பெற்றோர் மற்றும்  சகோதரியின் உதவியுடன் தான் இமானின் வாழ்க்கை ஓடுகிறது. தினமும் சராசரியாக 10,000 கலோரி உணவை உட்கொள்கிறார். இவ்வாறு 13 வருடங்களாக வீட்டுப்படுக்கையிலேயே முடங்கியுள்ளார்.

இவரது அதிக எடை  அன்றாட வாழ்வில் பலத்தொல்லைகள் கொடுத்தாலும் ஒரு வகையில் இது இவருக்குச் சாதகமாகவே அமைந்தது.  உலகின் அதிக எடைகொண்ட பெண்ணாக இவர் கின்னஸ் தவிர உலகின் அனைத்து அதிக எடை சாதனைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முறியடித்துவிட்டார். கின்னஸ் புத்தகத்தில் மட்டும் இமானின் பெயர் இடம் பெறவில்லை. அதனை கலிபோர்னியா மாநிலம் சாக்ரமெண்டோவைச் சேர்ந்த பவுலின் பாட்டர் தட்டிச் சென்றார். இவர் 291 கிலோ எடைகொண்டவர். 47 வயதான இவர்தான் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அதிக உடல் எடை கொண்ட பெண். இமான் இவரைவிட 200 கிலோ அதிக எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உடல்பருமன் இப்போது இமானின் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இப்படியே போனால் இவரது சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைய நேரிடலாம். கடந்த சில வருடங்களாகவே இமானின் சகோதரி, உலகின் பல பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர்களைத் (Bariatric surgeon) தொடர்புகொண்டு தன் சகோதரியின் நிலைபற்றி கூறி, அறுவைசிகிச்சை செய்து உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்துவந்தார். இதற்காக ஆன்லைனில் விளம்பரங்கள் கொடுத்தார்.

மத்திய அமைச்சர் சுஷ்மா உதவி
மும்பையைச் சேர்ந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் முஃபசல் லக்டாவால் இமானின் உடற்பருமானைக் குறைக்க, அறுவைசிகிச்சை செய்யமுன்வந்தார். லக்டாவாலின் மருத்துவ நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பார்த்து, இமானின் குடும்ப உறுப்பினர்களும் அவரை மும்பைக்கு அழைத்துவந்து சிகிச்சைபெறத் தீர்மானித்தனர். இதனை அடுத்து எகிப்தில் இருந்து மும்பைக்கு வர இமான் குடும்பத்தினர் தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அவரது அதிக உடல் எடை காரணமாக அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்று கூறி, விசா மறுக்கப்பட்டது. மருத்துவர் லக்டாவால் இமானின் நிலைமையை விளக்கி, அவருக்கு உடனடியாக விசா வழங்குமாறு கூறி  இந்தியத் தூதரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிஇருந்தார். அதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் லக்டாவால்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு இமானின் அவசரநிலை குறித்து ட்வீட் செய்தார். தகவல் அறிந்த உடனே இமான் மும்பை வர சுஷ்மா ஏற்பாடுகள் செய்தார். இந்த வார இறுதியில் இமான், தனி விமானம் மூலமாக மும்பை மருத்துவமனைக்கு வரவிருக்கிறார்.  

பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை
"பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை செய்துகொள்பவர்களது, குறைந்தபட்ச பி.எம்.ஐ. அளவு 40-க்கு மேலும், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருக்க வேண்டும்.
இமானுக்கு அடுத்தடுத்து பல அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டும். இந்த அறுவைசிகிச்சைகள் மூலமாகப் படிப்படியாக அவரது உடலில் சேர்ந்துள்ள அதிகக் கொழுப்பை அகற்ற எங்கள் குழு திட்டமிட்டுள்ளது. இந்த அறுவைசிகிச்சைகள் மிகவும் சிக்கலானவை. அறுவைசிகிச்சையின்போது நுரையீரல் பாதிப்பு, தொற்று மற்றும் ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிருக்கு ஆபத்தான இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் இமான் மரணமடையவும் நேரிடலாம். இருந்தாலும் இவற்றைச்செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இமானின் உடல்நிலை இருப்பதால், எங்கள் மருத்துவக் குழு இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தயாராகி வருகிறது.

முதற்கட்டமாக இமானின் வயிற்றில் சேர்ந்துள்ள அதிகக் கொழுப்பை வெளியேற்ற ஸ்லீவ் அறுவைசிகிச்சை (Sleeve Gastrectomy) மேற்கொள்ளப்படுகிறது. இதன்முலம், அவரது அடிவயிற்றில் சேர்ந்துள்ள 40 சதவிகித கொழுப்பு அகற்றப்படுகிறது. இதனால் அவரது குடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த அறுவைசிகிச்சையின்போது வயிற்றில் உள்ள பசியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்புப்பகுதி அகற்றப்படும். இதன் விளைவாக, சுவை ஏற்படுத்தும் உணர்வு குறையும்.  இதனால் அவர் சாப்பிடும் அளவு குறையும். அறுவைசிகிச்சைக்குப்பின், உணவின் அளவு குறைவதால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் குறையும். இதனை ஈடுசெய்ய ஊட்டச்சத்து நிபுணர், கொழுப்பற்ற ஊட்டச்சத்து உணவுகளைப் பரிந்துரைப்பார்.

அடுத்தடுத்த அறுவைசிகிச்சைகளில் அவரது கை , கால்களில் உள்ள கொழுப்புகள் அகற்றப்படும்.  2017-ம் ஆண்டு, இவ்வாறான தொடர் இடைவெளியில் நான்கு முதல் ஐந்து அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இமான் 400 கிலோ எடையை இழந்துதிருப்பார்.

அதன்பிறகு உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சிகள் மூலமாக அவரால் மேலும் எடையைக் குறைக்க முடியும். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து இமான், மற்ற பெண்களைப்போல, ஒரு சராசரிப் பெண்ணாக வலம்வருவார் என்ற நம்பிக்கை எங்கள் மருத்துவக்குழுவுக்கு உள்ளது" என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர் முஃபசல் லக்டாவால்.

இமான் நலம்பெற நாமும் பிரார்த்திப்போம் !

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.


 

அடுத்த கட்டுரைக்கு