Published:Updated:

காலை உணவு… தவிர்ப்பது சரியா? நலம் நல்லது-28 DailyHealthDose

காலை உணவு… தவிர்ப்பது சரியா? நலம் நல்லது-28 DailyHealthDose
காலை உணவு… தவிர்ப்பது சரியா? நலம் நல்லது-28 DailyHealthDose

தி அவசரங்களில் மூழ்கிய நம் காலைப் பொழுதுக்கு நாம் காவு கொடுத்தது… காலை உணவு! இன்றைக்கு பொறியியல் மாணவன், கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்மணி, கணவன்–குழந்தைகளை அதிகாலையில் எழுந்து கிளப்பிவிடும் இல்லத்தரசி… இவர்கள் எல்லோருமே தொலைத்தது காலை உணவை! 

இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைத் தவிர்த்தால் அமிலத்தால் சிதையத் தொடங்கும். காலை உணவைச் சாப்பிட்டு, இரைப்பையை நிரப்பாவிட்டால், முதல் நாள் இரவில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிற்று உப்புசம், தீவிரமான வயிற்றுவலி, வாந்தி, பசியின்மை, அதிக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்குச் சாப்பிட்டால் ட்ரான்ஸ்பேட் கொழுப்பும் கலோரியும் எக்குத்தப்பாக எகிறும்; அடிவயிற்றில் படிந்து பெருகும். ஆக, எப்படியாவது காலை உணவைக் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதுதான் நியதி.

எப்படிச் சாப்பிடலாம்… என்னென்ன சாப்பிடலாம்… பார்ப்போம்! 

* காலை உணவு சிறப்பான உணவாக இருப்பது நல்லது. வளரும் குழந்தைகள் உள்ள வீட்டில் தினையரிசிப் பொங்கல் செய்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, வரகரிசி உப்புமா சிறந்த மினி டிபன். இவையெல்லாம் சாதாரணமாக பொங்கல், உப்புமா செய்யத் தெரிந்தவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய சிற்றுண்டிகள். அரிசிக்குப் பதில் தினை. ரவைக்குப் பதில் வரகரிசி… அவ்வளவுதான். 

* விடிந்தும் விடியாமல், அதிகாலையிலேயே எழுந்து பணிக்குக் கிளம்புகிறவர்களா? அவர்களுக்காகவே ஒரு ரெசிப்பி உண்டு… அது, மாப்பிள்ளைச் சம்பா அவல் பிரட்டல். அடுப்படிக்குப் போகாமலேயே இதைச் செய்துவிடலாம். 

* காலையில் சுறுசுறுவென மூளை வேலை செய்ய வேண்டுமா… நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்திருக்க வேண்டுமா? அப்படியானால், காலை உணவில் பப்பாளிப் பழத்துண்டுகள், மாதுளை முத்துகள், மலை வாழைப்பழம், நிலக்கடலை, காய்ந்த திராட்சை… என இவற்றில் ஏதேனும் ஒன்றாவது இருக்க வேண்டும். 

* கேழ்வரகு இட்லி, பல தானியத் தோசை இவையெல்லாம் காலை உணவுக்கு மிக மிக நல்லவை. 

* சர்க்கரைநோய் இருப்பவர்கள், கஞ்சியாக காலை உணவைச் சாப்பிட வேண்டாம். அது, ஹைகிளைசெமிக் தன்மைகொண்டது. சிறு தானியமாக இருந்தாலும், அடை, தோசை, உப்புமா என பிற காய்கறிகளுடன் சேர்த்துச் சாப்பிடுவதுதான் சர்க்கரை ரத்தத்தில் சேர்வதை மெதுவாக்கும். 

* பல கீரைகளில், `ஆல்ஃபா அமைலோஸ் இன்ஹிபிட்டர்’ எனும் தாவரச்சத்து இருக்கிறது. இது, ரத்தத்தில் வேகமாகச் சர்க்கரை சேர்வதைத் தடுக்கும் தன்மை உள்ளது. கீரையுடன் சேர்த்து, எந்தத் தானிய உணவைச் சாப்பிட்டாலும், இந்தப் பயனைப் பெறலாம். 

* சர்க்கரை நோயாளிகள், எந்தக் காரணமாக இருந்தாலும், காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. 

* சத்து மாவுக்கஞ்சி தமிழர்களுக்கேயான பிரத்யேக ஊட்டச்சத்து உணவு. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கைக்குழந்தை, வளரும் குழந்தை அனைவருக்கும் ஏற்ற முதல் காலை உணவு இந்தக் கஞ்சிதான். 

சத்துமாவு செய்வது எப்படி? 

சிவப்புச் சம்பா அரிசி (மாப்பிள்ளை சம்பா கிடைத்தால் நல்லது), முளைகட்டி உலரவைத்த பாசிப் பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, நன்கு வறுத்த தொலியோடு கூடிய உளுந்து, நிலக்கடலை, பொட்டுக்கடலை, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினை அரிசி, கேழ்வரகு, வரகரிசி, குதிரைவாலி அரிசி… இவற்றையெல்லாம் வகைக்கு 250 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றோடு, முந்திரிப் பருப்பு 100 கிராம், தோல் சீவிய சுக்கு 50 கிராம் சேர்த்து, வறுத்து, பொடியாக்க வேண்டும். இதுதான் சத்துமாவு. தேவைப்படும்போது, இதிலிருந்து 3 – 4 டீஸ்பூன் எடுத்து, கஞ்சியாகக் காய்ச்சி, விருப்பப்பட்டால் பாலும் வெல்லமும் கலந்து சாப்பிடலாம். இதே மாவை காரம் சேர்த்து, காரக் கொழுக்கட்டையாகவும், வெல்லம் சேர்த்து மாலாடு உருண்டையாகவும் பிடிக்கலாம். கால்சியம், புரதம், நுண் கனிமங்கள் கொண்டது. சுருக்கமாக, நம் அத்தனை காலைகளையும் உற்சாகமாக்கும் வல்லமைகொண்டது. 

தொகுப்பு: பாலு சத்யா

அடுத்த கட்டுரைக்கு