Published:Updated:

அழகு பராமரிப்புக்கு அருமையான உணவுகள்! நலம் நல்லது-31 #DailyHealthDose

Vikatan Correspondent
அழகு பராமரிப்புக்கு அருமையான உணவுகள்! நலம் நல்லது-31 #DailyHealthDose
அழகு பராமரிப்புக்கு அருமையான உணவுகள்! நலம் நல்லது-31 #DailyHealthDose

`அழகு, ஆண்டவன் அளித்த சிபாரிசுக் கடிதம்’ என்று ஒரு கவிதை உண்டு. `பளிச்’ என, அழகாக இருக்க வேண்டும் என்பது இன்று எல்லோருக்குமான ஆசை. ஆனால், பலரும் `சிவப்புதான் அழகு; பகட்டுதான் பளிச்’ நினைக்கிறார்கள். மோர்க்குழம்பு நிறமும், மோனலிசா முகமும் தங்களுக்கு வாய்க்கவில்லையே என தாழ்வு மனப்பான்மையை தங்களுக்குள் வளர்ப்பது தவறு. கறுப்பு நிறத்திலும் களையாக, பளிச்சென உங்களை வைத்துக்கொள்ள உதவும் உணவும் மருந்தும் நம்மிடம் ஏராளம். நிறம் கறுப்பாக இருப்பதில் இன்னொரு மிகப்பெரிய பயனும் உள்ளது... ஆம், சிவப்பைக் காட்டிலும் கறுப்பு நிறத்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம்! 

ஆணோ பெண்ணோ, இளம் வயதில் வசீகரத்துக்காக அக்கறைப்படும் அளவுக்கு வயதான பின்னர் அதைப் பற்றி யோசிக்காமல் இருப்பதும் அழகைத் தொலைப்பதற்கு ஒரு காரணம். செல்லத் தொப்பை/சிசேரியன் தொப்பை என தன்னை அறியாமல் வளரும் தவறைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், அழகு அடுத்த வீட்டில்தான் தெரியும். `அதுதான் 40 வயசு ஆகிடுச்சே... இனி எதுக்கு சீவி சிங்காரிக்கணும்?’ என்ற அக்கறையின்மை உடல் வனப்பின் மேல் வேண்டவே வேண்டாம். ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனஅழுத்தம் மிக்க நடுத்தர வயதில்தான், துணையும் ஈர்ப்பும் அரவணைப்பும் மிகவும் தேவைப்படும். மண வாழ்க்கையில் எந்த வயதிலும் தம்பதியரிடம் அன்பு நிலைத்திருக்க, இந்தப் `பளிச்’ விஷயம் அவசியம். மேலும், தனக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தளர்ச்சியையோ, தள்ளாமையையோ தலைகாட்டவிடாமல் இருக்கவும், கண்ணாடியில் நம் உடலும் முகமும் அழகாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

அழகாக இருக்க என்ன செய்யலாம்? 

அழகு என்பது இன்ஸ்டன்ட் இடியாப்பம்போல வருவதல்ல. பளிச்சென மிளிர்வதற்காக கண்ட கண்ட அழகு க்ரீம்களால் முகத்தைப் பாடாகப் படுத்துவதும் அல்ல. முதல் நாள் இரவு சாப்பிட்ட சமோசாவுக்கும் இன்றைய உங்கள் முகச் சோர்வுக்கும் நிறையவே தொடர்பு உண்டு. முதலில் உணவுத் தேர்வில்தான் தொடங்குகிறது அழகு. 

முகத்தின் அழகுக்கு... 

* அகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். `அகம்’ என்றால், மனம் மட்டுமல்ல; வயிறும்தான். எண்ணெய்ப் பிசுக்கான முகம்கொண்டவர்கள் தினசரி சீரகத் தண்ணீர் அருந்த வேண்டும். பால் வகைகளை ஒதுக்கிவிட்டு, பழ ஆகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, பாலிஃபினால் நிறைந்த பப்பாளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், தக்காளி சேர்த்த ஜூஸ் அதனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையால், முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.  

* நிறையப் பருக்கள் (Pimples), சிறு குருக்கள் (Acnes) உள்ள முகமா? வெள்ளைப் பூசணிக்காய் (தடியங்காய்), பாசிப் பயறு சேர்த்துக் கூட்டாகச் சமைத்து, அடிக்கடி சாப்பிட்டால் போதும். கூடவே, ஆவாரம்பூ, ரோஜா இதழ்களை சமபங்கு எடுத்து, இருமடங்கு முல்தானிமட்டி மணலில் கலந்து நன்கு மாவாக பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைப் பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி, நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி, வாரத்துக்கு மூன்று நாட்கள் செய்தால், பத்தே தினங்களில் பளிச் முகம் கிடைக்கும். 

* தினமும் உடல் இயக்கத்தின்போது, ஒவ்வொரு செல்லிலும் சேரும் தனி ஆக்சிஜன் அணுக்கள், செல் அழிவை ஏற்படுத்துவதுதான் வயோதிகத்துக்குக் காரணம். தோல் சுருக்கம், நரை, திரை, மூப்பு எல்லாம் இதன் அடிப்படையில்தான் ஆரம்பிக்கின்றன. ஆன்டிஆக்சிடன்ட் சத்துள்ள உணவுகளும் மூலிகைகளும்தான் இந்தச் செல் அழிவைக் கூடியவரை தள்ளிப்போட்டு, அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடுபவை. இந்தச் சத்துக்கள் அதிகம் இருப்பது வண்ணமிகு காய், கனிகளில்தான். 

வசீகரமான தோலுக்கு... 

இன்றைக்கு பலருக்கும் வைட்டமின் மாத்திரைகளை, `சத்து மாத்திரை’ என வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. தேவையில்லாமல் வைட்டமின் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல்; அதோடு, உணவில் இருந்து உடல் உயிர்ச்சத்தை (வைட்டமின்) பிரித்தெடுக்கும் திறனையும் அது குறைத்துவிடும். அழகுக்கு சில வைட்டமின்கள் ரொம்ப அவசியம். அவற்றில் முக்கியமானவை வைட்டமின் ஏ, சி, இ, பயோடின். வைட்டமின் ஏ என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது கேரட். ஆனால், முருங்கைக்கீரை, முள்ளங்கி, வெந்தயம், பப்பாளி, ஆரஞ்சு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றிலும் பீட்டா கரோட்டின்கள் உண்டு. தோல் வறண்டு போகாமல், வனப்புடன் வசீகரமாக இருக்க, இவையெல்லாம் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், அன்னாசியில் இந்த வைட்டமின் ஏ சத்து அதிகம் கிடையாது. ஆனால், பழுத்த இனிப்பு மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. 

வனப்பான, மென்மையான தோலுக்கு... 

* வைட்டமின் சி-யும், ஏ-வும் தோல் வனப்புக்கு மிகவும் அவசியமான வைட்டமின்கள். இவற்றில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை தோலை வனப்புடன் வைத்திருக்கிறது; இளமையையும் பாதுகாக்கிறது. ஔவைப் பாட்டிக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனிதான் இன்றைய இந்திய மருத்துவ மூலிகைகளின் சூப்பர் ஸ்டார். இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து, முதுமையைப் போக்கும் மாமருந்து; நோய் எதிர்ப்பாற்றலை வழங்கிடும் அமுது. தினசரி நெல்லிக்கனியை உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிட்டால், நீடித்த ஆரோக்கியத்துடன் இளமை நிலைத்திருக்கும். நெல்லிக்கனி தவிர, முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, கொத்தமல்லிக்கீரையிலும் வைட்டமின் சி சத்து உண்டு.  

* Rice Bran Oil (அரிசி-தவிட்டு எண்ணெய்), பருத்திவிதை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய தாவர எண்ணெய்களில் வைட்டமின் இ சத்து அதிகம். தவிர, பசுங்கீரைகள், சோளம் ஆகியவற்றிலும் வைட்டமின் இ உண்டு. ஆண்மைக்குறைவு தீரவும், குழந்தையின்மை பிரச்னை நீங்கவும் வைட்டமின் இ அவசியம் என்பது அழகையும் தாண்டிய இன்னொரு செய்தி. 

அழகைத் தரும் காயகல்பம் 

`காயகல்பம்’ என்பது உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க, அந்தக் காலத்தில் தமிழ்ச் சித்தர்கள் காட்டிய உணவுப்பழக்கம், ஒழுக்க முறை, யோகப் பயிற்சிகள்தானே தவிர, எந்த ஸ்பெஷல் சிட்டுக்குருவி லேகியமும் அல்ல. அழகான உடலை அன்றைய சாதுக்கள் பெற்றிருந்ததற்கு இந்தக் காயகல்ப பயிற்சி ஒரு காரணம். அழகு நிலைத்திருக்க, ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கேற்ற உணவை, குறிப்பிட்ட மூலிகையை மருத்துவர் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து தினமும் சாப்பிடுவதும், பிராணாயாமப் பயிற்சிகளை தினமும் மேற்கொள்வதும் அவசியம்.

தொகுப்பு: பாலு சத்யா