Published:Updated:

நலம் நல்லது-36 அரிசி சாப்பிடலாமா... கூடாதா?  #DailyHealthDose   

நலம் நல்லது-36 அரிசி சாப்பிடலாமா... கூடாதா?  #DailyHealthDose   
நலம் நல்லது-36 அரிசி சாப்பிடலாமா... கூடாதா?  #DailyHealthDose   

புறநானூறு, தொல்காப்பியம் இவற்றில் எல்லாம் பாடிச் சிறப்புப் பெற்ற அரிசி, இன்று பலருக்கும் `ஆகாத’ உணவு. `அரிசியா? ஐ டோண்ட் டேக் இட்...பா’ என இளமைப் பட்டாளம் இளக்காரம் செய்யும் பொருளாகவும் ஆகிவிட்டது. அரிசி உடல் எடையைக் கூட்டிவிடும் என்றால், இந்த 10,000 ஆண்டுகளில் வரலாறு எத்தனை குண்டர்களைச் சந்தித்திருக்க வேண்டும்? சித்தன்ன வாசல் குகை ஓவியங்களிலோ, மற்ற கோயில்களில் இருக்கும் சிற்பங்களிலோ உழைக்கும் கூட்டம் செல்லத் தொப்பையுடன் இருப்பதைப் பார்த்திருக்கிறோமா? சர்க்கரைநோய் குறித்த செய்திகள் இலக்கியத்தில் ஏராளமாக இடம்பெற்றிருக்கிறதா? பின் எப்போது வந்தது தொப்பை? 

`சில்க்கி பாலீஷ்’ போட்ட வெளுத்த அரிசியை அளவில்லாமல் சாப்பிட்டு, சதா டி.வி., கம்ப்யூட்டர் முன் அமர்ந்துகொண்டு, கனவில் மட்டுமே கடும் உடற்பயிற்சி செய்யும் கனவான்கள் தொப்பைக்குக் கண்டறிந்த காரணம் அரிசி. பிரச்னை நம் வாழ்வியலிலும் பரபரப்பிலும்தான் இருக்கிறது. அரிசியில் இல்லை. 

ஒரே பருவத்தில் விளைந்த நெல்லை தேவைக்கு ஏற்றபடி, தேவைப்படும் நபருக்கு ஏற்றபடி தயாரித்தது நம் பாரம்பரியம். அதாவது, மழலைப் பேத்திக்குக் கஞ்சி; வளரும் பிள்ளைக்குப் பச்சரிசி; வீட்டில் உள்ள பெரியோருக்குக் கைக்குத்தல் புழுங்கல்; பாட்டிக்கு அவல்; மாலைச் சிற்றுண்டிக்கு பொரி; இரவில் அரிசிக் கஞ்சி! பழம்பெரும் விஞ்ஞானி ரிச்சாரியா, ஏறத்தாழ நான்கு லட்சம் அரிசி ரகங்கள் இந்தியாவில் இருந்ததாகக் கூறுகிறார். இடைக்காலத்தில் அதிக மகசூல், வீர்ய ஒட்டு ரகம் என்ற ஓட்டத்தில் பன்னாட்டு வணிகப் பிடியில் சிக்கிக்கொண்டோம். பாரம்பரியமான `காடைகழுத்தான்’, `குள்ளக்கார்’, `குழியடிச்சான்’, `மணிச்சம்பா’ போன்ற அருமையான அரிசி ரகங்களைத் தொலைத்துவிட்டோம். இன்று, இனிஷியல் அரிசியில் ஏமாந்து நிற்கிறோம். கைக்குத்தலின் மகிமை புரியாமல், பளபள என அரிசிக்கும் பாலீஷ் போட்டு, வெளுக்கடித்துவிட்டோம். நல்லன தரும் தவிட்டை குப்பை என எறிந்துவிட்டோம். 

அரிசி... சில தகவல்கள்!

* புழுங்கல் கைக்குத்தல் அரிசி, குறைந்த கிளைசெமிக் தன்மை கொண்டது. ஓரிஜைனால் (Oryzinal) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் பொருளைக் கொண்டது. வைட்டமின் பி சத்து நிறைந்தது. கைக்குத்தல் புழுங்கல் அரிசியில் குறைந்த கிளைசெமிக் தன்மை இருப்பதால், அது ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (Hyper Glycemia) தடுக்கும். 

* கோதுமைக்கும் அரிசிக்கும் கலோரி கணக்கில் பெரிய வேறுபாடு இல்லை. அரிசி குளிர்ச்சி. தமிழர்களுக்கு, தமிழ் மண்ணில் வாழ்பவர்களுக்கு ஏற்றது. பிரச்னை, அளவுதானே ஒழிய, அரிசி இல்லை. அளவைக் குறைத்துப் புழுங்கல் அரிசி சாப்பிட்டாலே சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும். அரிசியை நாம் அப்படியே சாப்பிடுவது இல்லை. ஊற்றும் குழம்பு, கீரையின் மூலம் அதன் சர்க்கரை ஜீரணிக்கும் வேகத்தையும் பெருமளவுக்குக் குறைக்க முடியும். 

* பாலுக்குப் பின் கைக்குழந்தையின் முதல் உணவு அரிசிக் கஞ்சிதான். அரிசியுடன் பருப்பு (சிறு பருப்பு) சேர்த்து, பசுநெய் அல்லது தேங்காய் எண்ணெய்த் துளியுடன் தருவது குழந்தையின் எடை சீராக உயரப் பெரிதும் உதவும். 

* மெல்லிய உடல்வாகு வேண்டும் என்பதற்காக, பெண்கள் அரிசியைத் தவிர்ப்பது தவறு. அரிசியைத் தவிர்த்துவிட்டு, வெறும் கோதுமை உணவை உண்பது கர்ப்பப்பை சூட்டை அதிகரிக்கும். வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய்த் தொந்தரவுகளை அதிகரிக்கச் செய்யும். பெண்கள், தினமும் சரியான புழுங்கல் அரிசியைக் கீரை மற்றும் காய்கறிகளுடன் சாப்பிட வேண்டியது அவசியம். இன்றைக்குப் பெருகிவரும் பாலி சிஸ்டிக் ஓவரீஸ் பிரச்னையைக் கீரை சாதத்தின் லோ கிளைசெமிக் தன்மை தவிர்த்துவிடும். 

* சிவப்பரிசி அவல் ஒரு சிறப்பான உணவு. உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைச் சிற்றுண்டிக்கு அவலை அழைக்கலாம். அவல், உடல் உறுதிக்கும் ஈடில்லாதது. 

* அரிசி என்பது நெல்லரிசி மட்டும் இல்லை; வாரத்தில் மூன்று நாட்களுக்கு தினை அரிசி, கம்பரிசிச் சோறு சாப்பிடுவது சிறந்தது. சிறு தானியமான தினை, கண்ணுக்கு வலிமை தரும் பீட்டாகரோட்டின் நிறைந்தது. அதிகப் புரதம் கொண்டது. கம்பரிசி இரும்புச்சத்து நிறைந்தது. இவை, நலம் பயக்கும் செயல்படு உணவுகள்.

நம் வீட்டுச் சமையலறையும் மெள்ள மெள்ள உலகமயமாகிவருகிறது. கைக்குத்தல் அரிசி, தினை அரிசி, வரகரிசி என உணவில் அளவாகச் சேர்த்துக்கொண்டால் பன்னாட்டு உணவு வகைகளைத் தவிர்க்கலாம்; நம் பாரம்பர்யத்தைக் காக்கலாம்; நம் ஆரோக்கியத்தையும் பேணலாம். 

தொகுப்பு: பாலு சத்யா