Published:Updated:

தித்திக்கும் தாம்பத்தியத்துக்கு 7 உணவுகள் !

Vikatan Correspondent
தித்திக்கும் தாம்பத்தியத்துக்கு 7 உணவுகள் !
தித்திக்கும் தாம்பத்தியத்துக்கு 7 உணவுகள் !

`அமுதூற்றினை ஒத்த இதழ்களும்...’ என பாரதி தொடங்கி எத்தனையோ பேர் காதல் களிப்பில் கிறங்கிக் கிடந்த அற்புதமான காலம் ஒன்று இருந்தது. தாம்பத்தியம், ஆண்-பெண் இருபாலருக்குமே ஏற்படும் பொதுவான வேட்கை. தம்பதியரிடையே வெறுப்பு வளர்வதற்கும், பிணக்கு முற்றுவதற்கும், பிரிவு எண்ணத்தை மேலோங்கச் செய்வதற்கும் தாம்பத்தியத்துக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாலும் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணமாக  இருப்பது தாம்பத்திய உறவு வேட்கைதான்.

இல்லறம் இனிக்க, தாம்பத்திய வாழ்க்கை முழுமை பெற, இறுதி வரை தம்பதிகள் சேர்ந்து வாழ,புரிதல், உடல்நலம், மனநலம் ஆகியவை கைகொடுக்கும். இதனுடன், தாம்பத்தியம் தித்திக்க சில உணவுகளும் உதவும். புதிதாகத் திருமணம் ஆன இளைஞனைப் பார்த்து அந்தக் கால பெரிசுகள் இப்படிச் சொல்வது உண்டு... `வாரத்துக்கு மூணு தரமாச்சும் நாட்டுக்கோழிக் குழம்பு சாப்பிடுப்பா!’ அசைவம் சாப்பிடாத ஆள் என்றால், அவர்கள் பரிந்துரைப்பது, சிறிது பச்சை வெங்காயம், கைப்பிடி வேர்க்கடலை!  இவையெல்லாம் உடலுக்கு சக்தியை கொடுக்கும் என்று அவர்கள் அறிந்துவைத்திருந்தார்கள் அவற்றில் சில இங்கே... 

சிட்ரஸ் பழங்கள்... சிறப்பு!

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் மிக நல்லவை. இவை எல்லாவற்றிலுமே ஆன்டிஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை எல்லாமே நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதிலும் சிறந்தவை. 

கலக்கல் காய்ந்த மிளகாய்! 

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சாதாரணப் பண்டம். இதற்குள் இருப்பதோ அளப்பரிய ஆற்றல். இதில் இருக்கும் கேப்சாய்சின் (Capsaicin) என்கிற வேதியல் கூட்டுப் பொருள், மூளையில் உள்ள எண்டார்ஃபின்களை வெளியேற்றத் தூண்டும். அதானால் தாம்பத்திய உறவுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

இனிக்க இனிக்க... சாக்லேட்! 

காதலோடும் தாம்பத்திய உறவோடும் பல காலமாக தொடர்பு வைத்திருக்கும் இனிப்பான பொருள். சாக்லேட்டில், ட்ரிப்டோபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. அது உடலில் செரடோனின் சுரக்க உதவுகிறது. அதன் காரணமாக செக்ஸ் உணர்ச்சி தூண்டப்படுகிறது. 

பாதாம் பருப்பு... பலம்!

ஒரு காலத்தில் `வாதாம் கொட்டை’ என்று அழைக்கப்பட்ட பாதாம் பருப்பு உடலுக்குக் கிளர்ச்சி தருவது. ஊட்டச்சத்துள்ளது. துத்தநாகச் சத்து, செலினியம் மற்றும் வைட்டமின் இ பாதாமில் இருக்கின்றன. ஆரோக்கியத்துக்கு நல்லவை. முக்கியமாக இதில் இருக்கும் துத்தநாகம், தாம்பத்திய உறவு விருப்பத்தையும் உணர்வையும் தூண்டக்கூடியது. இரவில் நான்கைந்து பாதாம் கொட்டைகளைச் சாப்பிடலாம். 

அவகேடோ... அசத்தல்!

இன்றைக்கு சிறு நகரங்களில்கூட கிடைக்கிற ஒன்று. இதில், தாதுக்கள் (Minerals), கொழுப்பு (Monounsaturated Fat - இதயத்துக்கு நலம் பயக்கும் ஒன்று), வைட்டமின் பி6 இவை எல்லாம் உள்ளன. இவை, உடலுக்கு சக்தி தருபவை; தாம்பத்யத்துக்கு நல்லது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இயல்பாகவே நல்ல உணர்வுகளைத் தூண்டக்கூடியது. 

கிரீன் டீ அல்ல... ஸ்வீட் டீ!

சூடான கிரீன் டீ உடல்நலம் பேணுவது. மட்டுமல்ல, உடல் வேட்கைக்கும் உதவுவது. இதில் இருக்கும் கேட்டசின்ஸ் (Catechins) என்கிற சேர்மானம் அத்தனை வீரியமுள்ளது. இடுப்பில் சேர்ந்துள்ள கொழுப்பைக் குறைப்பது, கல்லீரலில் சேரும் கொழுப்பை சக்தியாக மாற்றுவது என பல அட்டகாசமான வேலைகளைச் செய்யும் அபூர்வமான திரவம் கிரீன் டீ. கேட்டசின்ஸ், ஃப்ரீ ரேடிக்கல்ஸை அழித்து, ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. அதோடு ரத்தக்குழாய்களில் இருக்கும் நைட்ரிக் ஆசிட்டை வெளியேற்றவும் செய்கிறது. உடலுக்கு வலு சேர்க்கும் ஸ்வீட் டீ, கிரீன் டீ. 

இஞ்சி... இனிமை! 

சமையலுக்கு மட்டும் என்று இஞ்சியை நினைக்க வேண்டாம். இது தரும் நன்மைகள் ஏராளம். தாம்பத்திய உறவை மேம்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. ஒரு வாரத்துக்கு இரண்டு, மூன்று டீஸ்பூன் இஞ்சியை சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது என்கிறது ஓர் ஆய்வு. இனி இஞ்சியை சாப்பிடும் தட்டில் இருந்து ஒதுக்கிவைக்காதீர்கள்! 

இல்லற வாழ்க்கை சிறக்க, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுங்கள்... வாழ்க்கைத்துணையிடம் அன்பு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! 

- பாலு சத்யா