Published:Updated:

முதுகுவலியை உண்டாக்கும் அந்த 10 தவறுகள்! #backpaintips

முதுகுவலியை உண்டாக்கும் அந்த 10 தவறுகள்! #backpaintips
முதுகுவலியை உண்டாக்கும் அந்த 10 தவறுகள்! #backpaintips

ன்று பல பேருக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்னை. நமது அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்றிக்கொண்டு, சில ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடித்தாலே, இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். முதுகுவலி ஏற்படக் காரணங்கள் என்னென்ன, இதனைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிதல்

பெண்கள் ஹைஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது. எனவே, ஹை ஹீல் காலணிகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

பின்பாக்கெட்டில் வைக்கப்படும் பர்ஸ்

பெரும்பாலான ஆண்கள் தங்களது பேன்ட்டின் பின்பாக்கெட்டில் மணிபர்ஸை வைக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் தண்டுவடத்தின் ஒரு பக்க டிஸ்க்குகள் அழுத்தப்பட்டு முதுகுவலி ஏற்படுகிறது.

குடல் மற்றும் இரைப்பை பிரச்னைகள்

செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் முதுகுவலி எற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க, குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.

நீண்ட நேரம் வாகனம் ஓட்டுதல்

பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவட டிஸ்க்குகளின் நெகிழ்வு த்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனாலும் முதுகுவலி ஏற்படலாம். இரு சக்கர வாகனத்தின் பின்சக்கர ஷாக் அப்ஸர்பர்கள் நன்கு செயல்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மேடு, பள்ளங்களில் பயணிக்கும்போது முதுகுத் தண்டுவட டிஸ்க் ஓரளவு பாதுகாக்கப்படும்.

புகை பிடித்தல்

புகைபிடிப்பதால், முதுகுத்தசை உறுதிக்கு உதவும் ஊட்டச்சத்துகள் அங்கு சென்று சேராமல், முதுகுத்தசை வலுவிழந்துவிடுகிறது. புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்களுக்கு நாள்பட்ட முதுகுவலி குணமாகி உள்ளது.

இறுக்கமான ஜீன்ஸ் அணிதல்

இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணிவதால், அடிமுதுகு மற்றும் புட்டத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் இல்லாமல் அடிமுதுகு வலி மற்றும் மரத்துப்போகும் உணர்வு ஏற்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

எந்தவித சத்துக்களும் இல்லாத நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட உடலில் பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்படுகிறது. குறிப்பாக, முதுகுவலி இருப்பவர்கள் வெள்ளை சர்க்கரையை கைவிட்டாலே நல்ல பலன் கிடைப்பதை அனுபவபூர்வமாக உணர முடியும்.

மனஅழுத்தம்

அலுவலக வேலை சுமை, வீட்டுப் பிரச்னைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தின் விளைவாக முதுகுவலி ஏற்படலாம். தினசரி காலை யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, முதுகுத் தண்டுவடப் பாதுகாப்புக்கான உடற்பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலமாக முதுகுவலியைப் போக்கலாம்.

குஷன் வைத்த இருக்கை, மெத்தை பயன்படுத்துதல்

அமரும்போதும் படுக்கும்போதும் தண்டுவடம் நேராக இருக்க வேண்டியது அவசியம். குஷன் மெத்தைகள் தண்டுவடத்தை வளையச்செய்யும். மேலும் அசாதாரண நிலைகளில் அமரும்போதும், படுக்கும்போதும் முதுகுவலி ஏற்படுகிறது. முதுகுவலி உள்ளவர்கள் கடினமான படுக்கையில் சிறிய தலையணை வைத்துப் படுப்பது நல்லது. அலுவலகத்தில் காற்றோட்டமான பிரம்பு, தகரம் அல்லது மர நாற்காலியில் அமர்ந்து பணிபுரியலாம்.

கால்சியம் பற்றாக்குறை

மெனோபாஸ் அடைந்த 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எலும்பு அடர்த்திக் குறைவதால், ஆஸ்ட்ரியோபொரோசிஸ் நோய் அதிகமாகத் தாக்குகிறது. இதனால் தண்டுவடம் வலுவிழக்கிறது. இவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நீண்டநேரம் நின்று, அமர்ந்து பணிபுரிவதால் முதுகுவலி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க இவர்கள், தினமும் கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

அடுத்த கட்டுரைக்கு