Published:Updated:

பொங்கல்... இயற்கையை நேசிப்பவர்களின் விழா! நலம் நல்லது-49 #DailyHealthDose

பொங்கல்... இயற்கையை நேசிப்பவர்களின் விழா! நலம் நல்லது-49 #DailyHealthDose
பொங்கல்... இயற்கையை நேசிப்பவர்களின் விழா! நலம் நல்லது-49 #DailyHealthDose

தைப் பொங்கல் உழவுக்கும் உணவுக்கும் உள்ள உன்னதத்தை வெல்லப்பாகாக நெய் மணத்துடன் சொல்லும் தமிழர் திருநாள். பொங்கல் திருவிழா... தமிழர்களின் வாழ்வியல் பாரம்பரியத்தை நினைவுகூறும் அவசியமான பெருவிழா. அன்றைக்கு வீட்டில் சொந்தமாக சிறுகாணி நிலம் இல்லாதபோதும், அந்தப் பொங்கல் நாளில் செருக்குடன், 'உழவு என் உயிர். அதில் கிடைக்கும் உணவு உன் வாழ்வாதாரம்’ என ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வை உருவாக்கும். வீட்டு நிலை வாசலின் இரண்டு ஓரத்திலும் கட்டும் பீளைச்செடி, புளிபோட்டு விளக்கிக் கழுவி வைத்த வெங்கலப் பானை, அதில் கட்டத் தயாராக இருக்கும் மஞ்சள் கிழங்கு... என பொங்கல் திருநாளின் அடையாளங்கள் தனித்துவமானவை. முக்கியமாக, நாம் வைக்கும் பொங்கல். அதன் சிறப்புகளையும், பயன்களையும் சொல்லி மாளாது.

மகத்துவம் மிக்கப் பொங்கல்!

இந்தத் திருநாளில் தமிழரின் பல வீடுகளில் மூன்று பானையிலும், சில வீடுகளில் இருபானையிலும் பொங்குவது வழக்கம். `பால் பொங்கல்’, `சர்க்கரைப் பொங்கல்’, `வெண் பொங்கல்’ என்று சொல்வார்கள். `ரெகமென்டடு டயட்ரி அலவன்ஸ்’ (Recommended Dietary Allowance) விஷயங்கள் தெரியாத காலத்திலேயே பொங்கலிலும் இட்லியிலும் அரிசியையும் பருப்பையும் எப்படி இன்றைய `உணவுப் பிரமிடு’ சொல்லும் சரிவிகிதச் சம அளவில் சேர்த்தார்கள்? நெல்லுக்குப் பிறகு பயறுகளை விளைவித்து, மண்ணின் நைட்ரஜன் சத்தைக் குறையாமல் மீட்கும் தொழில்நுட்பத்தை யார் கற்றுத் தந்தார்கள்? தமிழர்கள், இயற்கையை எப்போதும் நேசித்தும், கவனித்தும், பாதுகாத்தும் பேணியதில் கிடைத்த அனுபவக்கோவை அது. பொங்கல் விழா இந்த நேசிப்பின், இயற்கையுடனான நெருக்கத்தின் மகிழ்வுப் பெருக்கம். 

பயன்கள்...

* வெண் பொங்கல், உணவு மட்டுமா... மருந்து! ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவில் ஊட்டம் அளித்து, எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயறையும் பயன்படுத்தலாம். 

* வெண் பொங்கலில் மிளகு சேர்க்கும்போது கவனிக்க..! தூளாக்கி விற்கப்படும் மிளகு, காரம் தரும். ஆனால், நீண்ட நாட்கள் பொடித்து வைக்கப்பட்ட மிளகும், நீண்ட நாட்கள் சேகரித்து வைக்கப்பட்ட மிளகும், தன்னுள் உள்ள மருத்துவ ஆல்கலாய்டுகளையும் நறுமணச் சத்துகளையும் இழக்க ஆரம்பித்துவிடும். குறுமிளகை அவ்வப்போது தூளாக்கிப் புதிதாகப் பயன்படுத்துவதுதான் சளியை நீக்க, இரைப்பு நோயில் மூச்சிரைப்பைக் குறைக்க, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க... எனப் பல வகைகளில் உதவிடும். 

* பொங்கலில் மஞ்சள் தூள் சேர்ப்பதும், கொஞ்சமாக நெய் சேர்ப்பதும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும். மஞ்சளின் `குர்குமின்’ சத்தை பலரும் புற்றுநோய்க்கும் தொற்றுநோய்க்கும்தான் நல்லது என நினைக்கிறார்கள். இதயத்தின் ரத்தநாளத்தில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், அதனால் அதில் கொழுப்புப் படியாமல் இருக்கவும், செல் அழிவைத் தடுக்கவும் மஞ்சள் பயன்தரக்கூடியது. 

* பொங்கல் திருநாளின் மறக்க முடியாத இனிப்பு... கரும்பு. சர்க்கரை நோயாளிகளைத் தவிர, பிறருக்கு கரும்புச் சாறு ஊட்டம் அளிக்கும் உணவு. பித்தம் நீக்கி, காமாலையில் ஏற்படும் தடாலடி ரத்த சர்க்கரைக் குறைவுக்கு, பொட்டாசியம் முதலான கனிமம் நிறைந்த கரும்புச் சாறு ஒரு மருந்தும்கூட. கரும்பை நீண்ட நாட்கள் வைத்திருந்தால், அது ஆல்கஹாலாக மெள்ள மெள்ள மாறிவிடும். 

* பொங்கல் திருநாளை ஒட்டி நாம் சுவைத்த, பின்னாளில் மறந்தும் போய்விட்ட ஓர் உணவு, பனங்கிழங்கு. நார்த்தன்மை மிக அதிகம்கொண்ட பனங்கிழங்கை, மஞ்சளும் மிளகுத் தூளும் சேர்த்து வேகவைத்து எடுத்துச் சாப்பிடுவதும் மலச்சிக்கலுக்குத் தீர்வுதரும் அருமருந்து

உழவுக்கும் உணவுக்கும் வந்தனம் சொல்லத்தான் பொங்கல் திருநாள் என்பதை, இயற்கைக்கு மரியாதை செய்வதற்குத்தான் இந்தத் திருநாள் என்பதை நினைவில் கொள்வோம்... நம் சந்ததிக்கும் சொல்லிக் கொடுப்போம்! பொங்கல் வாழ்த்துக்கள்! 

தொகுப்பு: பாலு சத்யா