Published:Updated:

நீங்கள் எந்த டைப் மனிதர்?

- இதயம் காக்க ஒரு கேள்வி

நீங்கள் எந்த டைப் மனிதர்?

'நெஞ்சு வலி என்று பரிசோதனைக்கு வரும் 100 பேரில், 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம். கடந்த மூன்று ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படும் 45 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து மடங்காக அதிகரித்து இருக்கிறது’ என்று அதிர்ச்சித் தகவல்களை அடுக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரி கார்டியாலஜி துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கீதா சுப்பிரமணியன். 

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஒரு நிமிடத் துடிப்பில் சுமார் 3.5 லிட்டர் ரத்தத்தை உடல் முழுவதும் பாய்ச்சுவதன் மூலம், உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் பிராண வாயுவையும் ஊட்டச் சத்துகளையும் கொடுத்துக் காப்பாற்றுகிறது இதயம்.  உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒரே வரிசையில் நீட்டி வைத்தால், அதன் நீளம் மட்டுமே சுமார் 10 லட்சம் கி.மீ. இருக்கும். இந்த ரத்த நாளங்களுக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது. உடல் எடை ஒரு கிலோ அதிகரித்தால், கூடுதலாக 30 முதல் 35 கி.மீ. தூரம் ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை இதயம் துடிக்கிறது. ஒரு மனிதன் சராசரியாக 70 ஆண்டுகள் வாழ்ந்தால், கிட்டத்தட்ட 250 கோடி முறை இதயம் துடிக்கிறது. உடலுக்குத் தேவை இல்லாத அசுத்தங்களை சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றுகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இதயத்தின் செயல்பாடுகளை சட்டை செய்யாமல் அலட்சியப்படுத்துவதன் காரணமாக, மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நீங்கள் எந்த டைப் மனிதர்?

நொடிப் பொழுதையும் வீணாக்காத ஜெட் வேக உழைப்பாளியான இதயத்தை சேதமாக்கும் முக்கியக் காரணம், உணவுப் பழக்கவழக்கம்.

நீங்கள் எந்த டைப் மனிதர்?

நம் பாரம்பரிய உணவில் இருந்து மாறி, பீட்ஸா, பர்கர் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளுக்குத் தாவி வரும் இன்றைய இளைஞர்கள், புகை, குடி போன்ற போதைக்கு அடிமையாகி உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கிறார்கள். இதனால் இளம் வயதிலேயே 'மாசிவ் அட்டாக்’ ஏற்படுகிறது.

இந்த அட்டாக் ஏற்படும் நிலையில், இதயத்துக்குச் செல்லும் கரோனரி தமனியில் ரத்தக் குழாய்கள் குறுகி அடைப்பு ஏற்படுகிறது. இதனால், ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்துபோய், ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துப் பொருட்கள் சரியாகக் கிடைக்காமல், இதயத் தசை நார் செல்கள் வலுவிழந்துவிடும். இதற்கு 'மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன்’ என்று பெயர். இதில் 60 சதவிகிதத்துக்கும் மேல் தசை நார்கள் அழிவதால் ஏற்படுவதுதான், தீவிர மாரடைப்பு நோயான மாசிவ் அட்டாக்.

இந்த அட்டாக் ஏற்படும் முன்னர், நெஞ்சு எரிச்சல், படபடப்பு, நடு முதுகில் வலி, ஏப்பம், இனம் புரியாத வியர்வை, மேல் வயிற்றில் உப்புசம் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகளை கேஸ் டிரபுள் என்று அலட்சியம் செய்வதால்தான், பெரும் ஆபத்து ஏற்படுகிறது.

மாசிவ் அட்டாக் வந்தவுடன், 30 முதல் 90 நிமிடங்களுக்குள் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டால், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் ரத்தக் குழாய்களைத் திறந்து, ரத்தம் உறைதலைத் தடுக்கலாம். 12 மணி நேரத்துக்குள் ரத்தத்தை கரையவைக்கச் செய்யும் சிகிச்சையை செய்யலாம்.

ஆங்கிலத்தில் சொல்லப்படும் Curry, Hurry, Worry என்ற அவசர, ஆடம்பர வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களை 'டைப் ஏ’ பெர்சனாலிட்டி என்று மருத்துவத்தில் அழைப்பார்கள். 'டைப் பி’ மனிதர்கள், அமைதி, நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

நீங்கள் எந்த டைப் மனிதர்?

'டைப் ஏ’ மனிதர்கள், யோகா, தியானம் செய்து தங்கள் குணநலன்களை மாற்றிக்கொள்ள வேண்டும். வயிறு முட்ட உணவு உண்டவுடன் படுக்கக் கூடாது.

குறித்த நேரத்தில் அளவோடு உண்டு, தேவையான அளவு உழைத்து, சீரான உடற்பயிற்சி மேற்கொண்டு, நிதானமான அணுகுமுறை கையாண்டு, உணவில் உப்பு - சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 10 டம்ளராவது தண்ணீர் குடிப்பதும், எட்டு மணி நேர உறக்கமும் அவசியம். கால் வயிறு தண்ணீர், அரை வயிறு உணவு, கால் வயிறு வெற்றிடம் என்று வாழ்ந்தால், திடீர் மாரடைப்பு வராது.

கம்ப்யூட்டர் முன் பணி புரிபவர்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பதால், கால் ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்துவிடும். இந்த நிலையில் அவர்கள் எழுந்து நடக்கும்போது, உறைந்த ரத்தத்தால் உருவான ரத்தக் கட்டிகள் காரணமாக, மாரடைப்பு போன்றே நொடியில் மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடக்க வேண்டும். டி.வி. மற்றும் கம்ப்யூட்டர் திரையில் இருந்து வரும்

கதிர்வீச்சு மற்றும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்களும் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

அதனால், இன்றைய இளைய தலைமுறையினர் மனம் போன போக்கில் வாழாமல், இதயத்தைக் காக்கும் வகையில் வாழ வேண்டும். ஒரு முறை இதயத்தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுவதும் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அதனால், வரும் முன் இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!'' என்றார்.

சரிதானே!

க.நாகப்பன், படம்: அ.ரஞ்சித்