Published:Updated:

இரைச்சல்... செல்லாக்காசாகும் செவித்திறன்! நலம் நல்லது-50 #DailyHealthDose

இரைச்சல்... செல்லாக்காசாகும் செவித்திறன்! நலம் நல்லது-50 #DailyHealthDose
இரைச்சல்... செல்லாக்காசாகும் செவித்திறன்! நலம் நல்லது-50 #DailyHealthDose

ரக்கப் பேசும் இனக் குழுக்களில் இருந்து வந்தவர்கள் நாம்! சத்தமாக வசனம் பேசுவது; காதலைக்கூட உறக்கச் சொல்வது; தேர்தல் சமயங்களில் மைக்கில் விளாசுவது; திருமணம், பண்டிகைகளில் பட்டாசு கொளுத்துவது; கோஷம் போடுவது... என நம்மிடம் சத்தங்கள் ஏராளம்! இது இருக்கட்டும். இந்தியாவில், ஒலி மாசைக் கட்டுப்படுத்த சட்டங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எழும் சிக்கல்களால் செவித்திறன் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதுதான் கவலைக்குரிய செய்தி. 

பார்வைக் குறைபாடுகளுக்காக கண்ணாடி அணிபவர்களை ஏற்றுக்கொள்கிற இந்தச் சமூகம், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களை ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்கள் தங்கள் மன உணர்வுகளை மழலை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது, சிரித்து அவமானப்படுத்துகிறோம். 

செவித்திறன் குறைபாடு... காரணங்கள்! 

* இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வெளியே தெரியும் வெளிக்காதைத் தாண்டி, நடு காது, உள் காது ஆகியவையும், ஒலியைக் கடத்தும் மிக நுண்ணிய குழலும் இருக்கின்றன. உள் காது முழுக்க நரம்பு இழைகளால் இருக்கும். இதில் எங்கு நோய்வாய்ப்பட்டாலும் செவித்திறன் குறையும் அல்லது முற்றிலுமாகப் பாதிக்கப்படும். 

* நாள்பட்ட சளி, காது-தொண்டை இணைப்புக் குழாயில் வரும் நீடித்த சளி, நடு காதில் தங்கும் சளி... என எளிதில் குணப்படுத்தக்கூடிய தொந்தரவை அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருப்பதுகூட பின்னாளில் செவித்திறனில் பாதிப்பை உண்டாக்கும். 

* காதுக்குள் ரீங்கார ஒலிபோல கேட்டுக்கொண்டே இருப்பது மினியர்ஸ் நோயாக, வெர்டிகோவுடன்கூடிய காது நோயாக இருக்கக்கூடும். இன்றைக்கு முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை இவை. 

* அம்மை முதலான வைரஸ் நோயாலும் உள் காதின் நரம்பிழைகள் பாதிக்கப்படக்கூடும். பிறப்பிலேயே வரும் `ஓட்டோஸ்கிளெரோசிஸ்’ (Otosclerosis) எனும் நோயில், சத்தம் கடத்தும் ஒலியில் அதிரவேண்டிய நுண்ணிய எலும்புகள் சரியாக அதிராததால் செவித்திறன் குறையும். இந்த இரண்டு குறைபாடுகளைக் களைய உபகரண உதவி தேவைப்படும். 

* முதுமையில் எந்தக் காரணமும் இன்றி மெள்ள மெள்ள செவித்திறன் குறைவதும் இயல்பு: இது நோய் அல்ல. 

* பெரிய உபகரணங்களைக்கொண்டு பூமியைக் குடைவது, கட்டடங்களை உடைப்பது போன்ற பணியில் ஈடுபடுபவர், விமானங்கள் இறங்கும் விமான நிலையத்துக்கு அருகே வசிப்பவர், டிஸ்கொதேயில் காது கிழியும் சத்தத்தில் ஆடும் இளைஞர்கள், அங்கு பணிபுரியும் உழைக்கும் வர்க்கத்தினர்... என இரைச்சல்களுக்கு நடுவே வாழ்பவர்களுக்கு மேற்சொன்ன எந்தக் காரணமும் இல்லாமல் செவித்திறன் பாதிக்கப்படும். 

* அதிகபட்ச சத்தத்தால் காதுக்குள் உள்ள ஸ்டீரியோசெல்லா எனும் 1,013 மைக்ரோ மீட்டர் அளவுள்ள மிக நுண்ணிய மயிரிழைகள் சிதைவதாலேயே செவித்திறன் குறைபாடு ஏற்படுகிறது. இது, உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல் பிரச்னைகளையும் உண்டாக்கும். சமயத்தில் மாரடைப்பையும் ஏற்படுத்திவிடும். 

தவிர்க்க... 

* பேனா, பென்சில், துடைப்பக் குச்சி வரை கையில் கிடைத்ததை வைத்து காது குடைவதும், சுத்தப்படுத்துகிறேன் என கடுஞ்சிரத்தையுடன் சுத்தம் செய்வதும் தவறு. காதினுள் மெழுகு போன்ற பொருள் உருவாவது நோய் அல்ல; நோய்க் கிருமிகளைத் தடுக்கத்தான் உருவாகிறது. அது அளவில் அதிகமானால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். 

* சிலர் காதில் சீழ் வந்தால், எண்ணெய் காய்ச்சி காதுக்குள்விடுவார்கள். அது ஆபத்து. சுக்குத் தைலம் போன்ற சித்த மருந்துகளை தலைக்குத் தேய்த்துக் குளித்தாலே போதும், காது சீழ் முதலான நோய்கள் தீரும். 

* அன்று, காது நோய்களுக்கும், கேட்கும்திறனை கூட்டவும் மருள், கணவாய் ஓடு, தைவேளை முதலான மூலிகை மருந்துகள் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இருந்தாலும், காதுக்குள் போடும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இன்றிப் போடுதல் கூடாது. 

* தினமும் தலைக்குக் குளிப்பது, வாரத்துக்கு இரண்டு நாள் எண்ணெய்க் குளியல் போடுவது செவித்திறன் பாதுகாக்கும் தடுப்பு முறைகள். 

காதுகளில் கவனம் செலுத்தவேண்டியது இன்றைய அவசியத் தேவை. கூடுமான வரை இரைச்சல் தவிர்ப்போம்... செவித்திறன் பாதுகாப்போம்! 

தொகுப்பு: பாலு சத்யா