Published:Updated:

நினைவாற்றலில் நீங்கள் யார்... எந்திரனா... மனிதனா? #MemoryTips

நினைவாற்றலில் நீங்கள் யார்... எந்திரனா... மனிதனா? #MemoryTips
நினைவாற்றலில் நீங்கள் யார்... எந்திரனா... மனிதனா? #MemoryTips

``ஸ்பீட் ஒன் டெரா ஹெர்ட்ஸ் மெமரி ஒன் ஜிகா பைட்.’’ அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாத வாசகம். `எந்திரன்’ திரைப்படத்தில் சிட்டி சொன்ன பிரபல வசனம். இதைக் கேட்டுவிட்டு அந்த ரோபோவின் வேகத்தையும் நினைவுத்திறனின் அளவையும் கேட்டு மிரண்டு போய்ப் பார்த்துக்கொண்டிருப்பார்கள், ஆனானப்பட்ட மேதைகள். அவர்களைப் போலவே நாமும் உறைந்துபோய் பார்த்த காட்சி அது. இதற்காக மிரளத் தேவையில்லை என்பதே உண்மை. ஏனென்றால், நாம் சிட்டி ரோபோவைவிடச் சிறந்தவர்கள். அதனோடு ஒப்பிட்டால், நமது மூளையின் ஞாபகசக்தி, சிட்டியைவிட அதிகம். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!’’ என ஆரம்பித்து நினைவாற்றல் குறித்தும், ஞாபக மறதியைப் போக்கும் வழிமுறைகளையும் விளக்குகிறார் மனநல மருத்துவர், ராமானுஜம்.

ஆம்... `நமது மூளை, பீட்டா பைட் அளவுக்கான ஞாபகசக்தியைக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், நம் வாழ்நாள் முழுக்க, மொத்த ஞாபகசக்தியில் ஒரு சதவிதத்துக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறோம்’ என்கின்றன அறிவியல் ஆராய்ச்சிகள்.

நமது மூளையின் பதித்தல், தங்குதல், நினைவுகூரல் போன்ற செயல்பாடுகளைத்தான் நாம் நினைவுத்திறன் அல்லது ஞாபகசக்தி என்கிறோம். இதையும் உடனடி நினைவு, குறுகியகால நினைவு, நீண்டகால நினைவு என வகைப்படுத்தலாம்.

உடனடி நினைவு - சில வினாடிகளும், குறுகியகால நினைவு - சில நிமிடங்களும், நீண்டகால நினைவு - ஆயுள் முழுவதும்... என நம்முடன் தங்கி கூடவே வருகின்றன.

இப்படி நம்முடன் தங்கியிருக்கும் நினைவுகளை மீட்டெடுக்க முடியாத நிலையைத்தான், `ஞாபக மறதி’ என்கிறோம். இன்றைக்கு ஞாபக மறதி என்பது, நம் எல்லோரையுமே பெரிதும் ஆக்கிரமித்திருக்கும் சவாலான ஒன்று.

ஞாபக மறதியிலிருந்து விடுபட சில ஆலோசனைகள்...

* எதையும் பார்ப்பதைவிட கவனிக்க முயற்சி செய்யுங்கள். எதையும் கேட்பதைவிட உள்வாங்க முயற்சி செய்யுங்கள். எதையும் தொடுவதைவிட உணர முயற்சி செய்யுங்கள்... இந்த முயற்சிகள் உங்கள் நினைவுத்திறனை மேம்படுத்தும்.

* மூளையைச் சுறுசுறுப்பாக்க, மூச்சுப் பயிற்சி செய்யலாம். மூளையின் செயல்திறனை மேம்படுத்த, யோகப் பயிற்சிகள் கைகொடுக்கும்.

* துரித உணவுகளைத் தவிர்த்து, நல்ல உயிர்ச்சத்துக்கள் நிரம்பிய காய்கறி, பழங்களைச் சாப்பிடுங்கள்.

* ஞாபகசக்தியின் மிகப் பெரிய எதிரி பதற்றம். முடிந்த வரை பதற்றத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவதும் நினைவுத்திறனைப் பாதிக்கும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட புலன்களைப் பயன்படுத்தி, செயல்களைச் செய்வதன் மூலம் நினைவுகளை ஆழமாகப் பதிந்துகொள்ளலாம். உதாரணமாக, காதுகள் வழியே கேட்பவற்றை கற்பனைக் காட்சிகளாக ஓடவிடலாம்.

* தூக்கம் மிக அவசியம். உறங்கும்போதுதான் நமக்குள் பல வளர்சிதை மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆகவே, குறைந்தது 8 மணி நேரமாவது தூங்குவது என்பதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

* வலது மற்றும் இடது பக்க மூளை, இரண்டுமே முக்கியமானவை. முடிந்த வரை இரண்டுக்கும் வேலை கொடுங்கள். நமக்குத் தெரிந்த விஷயங்களோடு மட்டும் நின்றுவிடாமல் பல்வேறுவிதமான கலைகளையும் பழகிக்கொள்ளுங்கள்.

* மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் மூளை பாதிப்படைவதிலிருந்து தப்பிக்கலாம்.

* தொடக்கத்தில் செய்ய வேண்டிய வேலைகளை குறித்து வைத்துக்கொண்டு வேலை செய்யுங்கள். இதே பழக்கம் தொடரும்போது மறுந்துபோகிற பிரச்னை சிறிது சிறிதாக நீங்கிவிடும்.

* மொபைலில் ரிமைண்டர் ஆப் பயன்படுத்துவதன் மூலம், தங்களது வேலையை காலம் தவறாமல் செய்ய முயற்சிக்கலாம்.

* முடிந்தவரை மனஅழுத்தம், மனச்சோர்வு தருகின்ற விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.

* தினமும் 20 நிமிடங்களாவது மூளை தொடர்பான விளையாட்டில் ஈடுபடுங்கள்.

* காபி, டீ அதிகம் குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

* நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளான பாதாம், வால்நட், முட்டை, மீன் போன்றவற்றை உண்பதன் மூலம் நினைவுத்திறனை அதிகரிக்கலாம்.

 - செ.ராஜன், (மாணவப் பத்திரிகையாளர்)

.

அடுத்த கட்டுரைக்கு