Published:Updated:

உடல் எடையைக் குறைக்க 8 ஆயுர்வேத முறைகள்...! #WeightLossTips

உடல் எடையைக் குறைக்க 8 ஆயுர்வேத முறைகள்...!  #WeightLossTips
உடல் எடையைக் குறைக்க 8 ஆயுர்வேத முறைகள்...! #WeightLossTips

உடல் எடையைக் குறைக்க 8 ஆயுர்வேத முறைகள்...! #WeightLossTips

டல் எடையைக் குறைக்க பேலியோ, வீகன், மெடிட்டரேனியன் என எத்தனையோ டயட் முறைகள்..! ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்தாலும், வெயிட் லாஸ் என்பது தூர நின்று நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதுதான் ரிசல்ட்! இதற்கு முக்கியக் காரணம், பலருக்கும்

சாப்பிடும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாதது. எப்பாடுபட்டாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  ஜிம்முக்குச் சென்றாலும், இரண்டு மாதங்களில் உடல்வலி காரணமாக பலர் அந்த முயற்சியைக் கைவிட்டிருப்பார்கள். இந்த முயற்சிகளில் தோல்வியடைந்தவர்களுக்கு மிஞ்சுவதென்னவோ பண நஷ்டமும் ஏமாற்றமுமே. இதற்கு ஆயுர்வேதா மருத்துவத்தில், சிறந்த வழிமுறைகள், ஆசனங்கள், முத்ரா, மூச்சுப் பயிற்சி, மசாஜ், மாத்திரைகள், மருந்துகள் என உள்ளன. இந்த இயற்கை முறையைப் பின்பற்றினால், உடல் எடை நிச்சயம் கட்டுக்குள் வரும். அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக விளக்குகிறார்  ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.    

உணவு


மிதமான சூடுள்ள நீரில், அரை டீஸ்பூன் தேன், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் காலை வெறும் வயிற்றில் பருகிவர, உடல் எடை குறையும்.


தூக்கம்


பகலில் தூங்கினால் ஊளைச்சதை ஏற்படும். இரவில் மட்டுமே தூங்க வேண்டும். இதனால் உடல் வளர்சிதை மாற்றம் சரியாக இயங்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.


பிராணாயாமம்-மூச்சுப்பயிற்சி


தரையில் சப்பணமிட்டு, முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். வலது கை கட்டைவிரலை வைத்து வலது நாசி துவாரத்தை மூட வேண்டும். இடது துவாரம் மூலமாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். பின்னர், வலது கை மோதிர விரலையும் நடு விரலையும் வைத்து இடது நாசி துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக மூச்சை வெளியேற்றவும். இதேபோல, மூச்சை வெளியேற்றிய வலது துவாரத்தின் வழியாகவே மீண்டும் மூச்சை உள்ளே இழுக்கவும். அதனை இடது துவாரம் வழியாக வெளியேற்றவும். இப்படி 15 முறை செய்யவும். காலை எழுந்தவுடன் இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்து பழக வேண்டும். இதனால், உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். உடலில் ரத்தம் தேக்கம் அடையாமல் சீராக உடல் முழுவதும் பாயும். உடல் தசை வலுபெற்று, கொழுப்பு கரையும்.   


உத்வார்தனா (Udvartana) மசாஜ்


திரிபலாப் பொடியை முதுகு, வயிறு, மார்புப் பகுதியில், கீழிருந்து மேலாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு கரைந்து, உடல் இளைக்கும். பொலிவான தோற்றத்தைப் பெறலாம்.

சூர்ய முத்ரா


சப்பணம் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையை 15-20 நிமிடங்கள் இருக்க வேண்டும்.


யோகாசனம்

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, இரண்டு வகை ஆசனங்கள் உதவுகின்றன. அவை..


திரிகோணாசனம்

  • இரண்டு கால்களையும் அகட்டிவைக்கவும்.
  • கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருபக்கமும் நீட்டிக்கொள்ளவும்.
  • வலது கையால் வலது பாதத்தை உடலை வளைத்துத் தொடவேண்டும். அப்போது, இடது கையை செங்குத்தாக மேல் நோக்கித் தூக்க வேண்டும். இதே நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
  • பின்னர், இதேபோல இடது கையால் இடது பாதத்தைத் தொட வேண்டும். அப்போது, வலது கையை செங்குத்தாக மேல் நோக்கித் தூக்க வேண்டும்.  இதே நிலையில் 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
  • தினமும் காலையில் இந்த ஆசனத்தைச் செய்து வந்தால், இடுப்புப் பகுதியில் உள்ள ஊளைச்சதை குறையும்.

புஜங்காசனம்

  • குப்புறப் படுத்துக்கொண்டு இரு கால்களையும் அகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றி, கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • இடுப்புப் பகுதி வரை மேல் நோக்கி முடிந்த வரை உடலை வளைக்க வேண்டும். இதே நிலையில் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க வேண்டும்.
  • இந்த ஆசனத்தைச் செய்யும்போது அடிவயிற்றுத் தசைகள் மேல் நோக்கி இழுக்கப்படுகின்றன. இந்த ஆசனத்தை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்துவந்தால், அடிவயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

நவஹ குக்குலு மாத்திரை

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆயுர்வேத மருத்துவத்தால் பரிந்துரைக்கப்படுவது 'நவஹ குக்குலு' மாத்திரை.
திரிபலா, சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய், கடுக்காய், தாந்திரிக்காய், வாய்விடங்கம், கோரைக் கிழங்கு, கொடிவேலி ஆகியவற்றுடன் குக்குலு மரத்தின் பிசினைக் கலந்து தயாரிக்கப்படுவது, நவஹ குக்குலு மாத்திரை. இதனை தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிடலாம். சர்க்கரைநோய், இதய நோய்களுக்கு அலோபதி மருந்து சாப்பிடுபவர்களும் இதனைச் சாப்பிடலாம். இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படாது.

எனிமா சிகிச்சை

ஆயுர்வேத மருத்துவ முறையில் பலவகை எனிமாக்கள் உள்ளன. யார் யாருக்கு எந்தெந்த வகை எனிமா கொடுக்க வேண்டும் என மருத்துவர் முடிவுசெய்வார். மருத்துவரின் பரிந்துரையின்படிதான் குறிப்பிட்ட இடைவெளியில் எனிமா எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், மலக்குடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் சுத்தமாக வெளியேற்றப்படும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

அடுத்த கட்டுரைக்கு