Published:Updated:

விளக்கெண்ணெய்... விலக்கக் கூடாத எண்ணெய்! நலம் நல்லது-57 #DailyHealthDose

அந்த ஆளு ஒரு விளக்கெண்ணெய் சார்...” என்று யாராவது, யாரையாவது சொல்லக் கேட்டிருப்போம்.

விளக்கெண்ணெய்...  விலக்கக் கூடாத எண்ணெய்! நலம் நல்லது
விளக்கெண்ணெய்... விலக்கக் கூடாத எண்ணெய்! நலம் நல்லது

“அந்த ஆளு ஒரு விளக்கெண்ணெய் சார்...” என்று யாராவது, யாரையாவது சொல்லக் கேட்டிருப்போம். ஒருவரைக் குறைத்துச் சொல்வதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், விளக்கெண்ணெய் விசேஷமானது. விளக்கெண்ணெயை, ‘ஆமணக்கின் குருதி’ என்றுகூடச் சொல்லலாம். ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண் மருந்துகள்தான் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன. சுருக்கமாக, விளக்கெண்ணெய் ஒரு நலப்பொக்கிஷம்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே இந்தியரிடம் மட்டும் அல்லாமல், சீனர்களிடமும், ரோமானியர்களிடமும், கிரேக்கர்களிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறது. 

ஆமணக்கின் இலை, விதை, எண்ணெய் என அனைத்துமே மருத்துவக் குணம் நிரம்பியவை. ஆமணக்கு மற்றும் விளக்கெண்ணெயின் பலன்களைப் பார்ப்போம்... 

* ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும். 

* பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம். 

* சமீபத்திய ஆய்வுகள் ஆமணக்கு இலை, கல்லீரல் நோய்க்கு எதிராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. காமாலை, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் செயல்திறன் குறைவுக்கு ஆமணக்கு இலையின் உலர்ந்த பொடி பயனளிக்கும். 

* கீழாநெல்லி இலையுடன் ஆமணக்கு, கொழுஞ்சி இலை, கடுகு, ரோகிணி, கரிசாலையைச் சேர்த்து உலர்த்த வேண்டும். பிறகு, இதைப் பொடியாக்கி, காலையிலும் மாலையிலும் அரை டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்துவந்தால் காமாலை குணமாகும் என, சித்த மருத்துவ அனுபவங்கள் கூறுகின்றன. 

* ஆமணக்கு விதையில் இருந்து மருந்து செய்ய அந்தக் காலத்தில் அதன் பருப்பை அரைத்து, அதற்கு நான்கு மடங்கு இளநீர் அல்லது தண்ணீரைவிட்டுக் காய்ச்சுவார்கள். இப்போது பிற எண்ணெய்களைப்போல பிழிந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது. 

* நோய் குணமாக்கலில் `நிணநீர் கழிவு ஓட்டம்’ (Lymphatic drainage) மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் (Inflammation) கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்னிகரற்றச் செயலை இந்த எண்ணெய் செய்கிறது. 

* மூலிகை மருந்தறிவியலில், அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (The Food and Drung Administration - FDA)-வின் அங்கீகாரம் பெறுவது மிக கஷ்டமான காரியம். அந்தப் பெரும் அமைப்பே, `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது. 

* தென் தமிழகத்தில் பருப்பு குழைவாக வர அதனுடன் இரு துளி விளக்கெண்ணெயைவிட்டு வேகவிடுவது மரபு. ஆரோக்கியம் தரக்கூடிய உணவு எனப்படும் ஒரு ஃபங்ஷனல் ஃபுட். ஆகவே, விளக்கெண்ணெய் நம் மரபில் இருந்து வந்தது என்பதை இதன் மூலம் உணர முடியும். `விரேசனத்தால் வாதம் தாழும்’ என்கிறது சித்த மருத்துவம். நன்கு மலம் கழிந்தால் வாத நோய்களாகிய மூட்டுவலி முதல் ஆஸ்துமா வரை பயன் கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள். அதற்கு விளக்கெண்ணெய் உதவும். 

* பிரசவித்த பெண்களுக்கு மலம் எளிதில் கழிய, ஆமணக்கு எண்ணெயை 10 - 20 மி.லி வரை உடல் எடை, ஆரோக்கிய நிலையைப் பொறுத்து அளவாகக் கொடுக்கலாம். சளி, இருமல், கோழைக்கட்டு உடைய நபருக்கு 20 மி.லி விளக்கெண்ணெயில், 10 மி.லி தேன் சேர்த்துக் கொடுத்தால், மலம் கழிவதுடன் மந்த வயிற்றுடன் இருப்போருக்கு விளக்கெண்ணெயை ஓமத்தீ நீர் அல்லது சுக்குக் கஷாயத்தில் இதைக் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கி, பசி உண்டாகும். 

* சாப்பிட மறுக்கும் குழந்தை, மந்தம் உள்ள குழந்தை, அடிக்கடி வாய்ப்புண்ணுடன் உள்ள குழந்தை ஆகியோருக்கு விளக்கெண்ணெயில் செய்த மருந்துகளைத்தான் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. இருந்தாலும், சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இந்த எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது. இதன் மலமிளக்கும் தன்மையைச் சீராக அளவறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதால், விளக்கெண்ணெய் விஷயத்தில் சுயவைத்தியம் சரிவராது. 

* விளக்கெண்ணெய், புண்களை ஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டுவலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத் தைலமாகப் பயன்படுகிறது. 

மொத்தத்தில் விளக்கெண்ணெய் விலக்கக் கூடாத எண்ணெய்! 

தொகுப்பு: பாலு சத்யா