Published:Updated:

உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, மனஅழுத்தம்... இவற்றைக் குறைக்கும் உப்பு எது?

உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, மனஅழுத்தம்... இவற்றைக்  குறைக்கும் உப்பு எது?
உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, மனஅழுத்தம்... இவற்றைக் குறைக்கும் உப்பு எது?

'உப்பிட்டவரை உள்ளளவும் நினை', 'உப்பில்லா பண்டம் குப்பையிலே'  போன்ற முதுமொழிகள் உப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துபவை. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, உணவில் உப்பைச் சேர்க்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அதிகமாக உப்பைச் சேர்ப்பதும், தவறான உப்பைச் சாப்பிடுவதும் உடல்நலத்துக்குக் கேடுதான். இதுவரை நமக்குத் தெரிந்தவை, பயன்படுத்திவந்தவை கல்லுப்பும் டேபிள்சால்டும்தான். ஆனால், இவற்றை எல்லாம்விட சத்துக்கள் நிறைந்த, நோய்கள் நெருங்காத, ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய உப்பு, இந்துப்பு.


முன்பு, சமைப்பதற்கு கல்லுப்பை பயன்படுத்திவந்தனர். ஆனால், இன்று கல்லுப்பு கரைய நேரமாகிறது என டேபிள்சால்டுக்கு மாறிவிட்டனர். இயற்கையான சத்துக்கள் நிறைந்த உப்புதான், நோய்களை நெருங்கவிடாமல் பாதுகாக்கும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் உப்புகளில் இருந்து சற்றே வித்தியாசமானதுதான், இந்துப்பு. இதன் பலன்களை விளக்குகிறார், சித்த மருத்துவர் ஹனிபா.

இந்துப்பு என்பது ராக் சால்ட் (Rock Salt).  சின்னச் சின்ன கிரிஸ்டல் அளவில் கிடைக்கும். வெள்ளை, இளச்சிவப்பு நிறத்தில் காணப்படும். 92 டிரேஸ் அத்தியாவசிய தாதுஉப்புக்களில் (Trace minerals) 84  இதில் உள்ளன. 

சாதாரண சமையல் உப்பில் கிடைக்கக்கூடிய சுவை இதிலும் கிடைக்கும். சாதாரண உப்பில் உள்ள சோடியத்தைவிட இதில் உள்ள சோடியத்தின் அளவு சிறிது குறைவுதான்.

உயர் ரத்த அழுத்த நோயாளிகள், தங்களது உணவில் இந்துப்பைச் சேர்த்துச் சாப்பிட்டுவர, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சோடியம் மற்றும் பொட்டாஷியத்தின் அளவைச் சரியாகச் சமன்படுத்தும் என்பதால், ரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறந்த உப்பு இதுவே.

ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்க இந்துப்பு பயன்படுகிறது. மேலும், வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று குணங்களைச் சமன்படுத்துகிறது.

உடல் எடை குறைக்க நினைப்போர், உணவில் இந்துப்பைச் சேர்த்துக்கொண்டால், துணை மருந்தாகச் செயல்படும். அதாவது, இறந்த கொழுப்பு செல்களை அகற்றும் பணியைச் சீராகச்செய்யும். வளர்சிதை மாற்றத்தைச் சரிசெய்யும். உணவின் மீதான ஈர்ப்பு (கிரேவிங்) உணர்வு வராமல் தடுக்கும்.

வறண்ட தொண்டை, இருமல், வீக்கம், தொண்டைப் புண், தொண்டை வலி போன்ற பிரச்னைகளுக்கு ஒரு கிளாஸ் நீரில் சிறிது இந்துப்பு போட்டு வாய் கொப்பளிக்க நிவாரணம் கிடைக்கும்.

சாதாரண உப்பைவிட கூடுதலான குளிர்ச்சித்தன்மை கொண்டது. 

கை, கால் வீக்கத்தால் மருத்துவர் உப்பு பயன்படுத்தக் கூடாது எனக் கூறினால், டாக்டரிடம் கேட்டு இந்துப்பை சிறிது மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில், இது உடலில் உப்பு சத்தை அதிகரிக்கவிடாது.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்கள் அவர்களது உணவில் இந்துப்பைச் சேர்த்துக்கொள்வது நல்லது.


மனஅழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் வராமல் தடுக்கும். 

உறுப்புகளுக்கு இடையில் உள்ள தசைகளைப் பாதுகாக்கும். 

உடலில் உள்ள பி.ஹெச் (pH) அளவைச் சமன்செய்யும்.

இந்துப்பை பயன்படுத்தி செய்யக்கூடிய மூலிகைப் பொடி: அஷ்டசூரணம்

தேவையான பொருட்கள் 

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், இந்துப்பு, பெருங்காயம் - தலா 50 கிராம்.

செய்முறை 

சுக்கு முதல் கருஞ்சீரகம் வரையிலான பொருட்களை வெயிலில் நன்கு காயவைத்துப் பொடிசெய்து மெல்லிய துணி அல்லது சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ளவும்.

இந்துப்பைத் தனியாகப் பொடி செய்துகொள்ளவும்.பெருங்காயத்தைப் போதிய அளவு நெய்யில் பொரித்து, உரலில் இடித்துப் பொடிசெய்து, அனைத்துப் பொடிகளையும் சேர்த்து, நன்றாகக் கலந்து காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் போட்டுவைக்க வேண்டும்.
காலை, மாலை என இருவேளையும் வெந்நீர் அல்லது மோரில் சிறிதளவு இந்தப் பொடி சேர்த்துக் குடிக்கலாம்.
பலன்கள் : செரிமானப் பிரச்னை, பசியின்மை, சுவை உணராமல் இருப்பது, வயிற்றுவலி, பெப்டிக் அல்சர், வயிற்றுப்போக்கு ஆகியப் பிரச்னைகளைப் போக்கும்.
 

- வெ.வித்யா காயத்ரி (மாணவப்பத்திரிகையாளர்)