Published:Updated:

ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சை... தீராத சந்தேகங்கள்! #SepsisAlert

ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சை... தீராத சந்தேகங்கள்! #SepsisAlert
ஜெயலலிதாவுக்கு நடந்த சிகிச்சை... தீராத சந்தேகங்கள்! #SepsisAlert

ருவர் காய்ச்சல் என்று மருத்துவமனைக்குப் போகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு நீர்ச்சத்துக் குறைபாடு இருக்கிறது உடனே அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிறார். உடல் பரிசோதனை நடக்கிறது. நோய்த்தொற்றுக்கு அவர் ஆளாகி இருப்பது கண்டறியப்படுகிறது; அதிலும் நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகளில் நோய்த்தொற்று அதிகமாகியிருக்கிறது என்கிறார்கள்... அதற்கு சிகிச்சை. பிறகு டிரக்கியோஸ்டமி (Tracheostomy), பிசியோதெரபி என நீண்டுகொண்டே செல்கிற வைத்தியம் ஒரு கட்டத்தில் பலன் தராமல், மாரடைப்பு வந்து இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்தது இதுதான். கிட்டத்தட்ட 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவுக்கு இருந்த பிரச்னைகளில் ஒன்றாகக் கடைசியாகக் குறிப்பிட்டிருப்பது செப்சிஸ். 

டிசம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது; ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்; பா.ம.க நிறுவனர் ராமதாசும் இது தொடர்பான விளக்கம் தேவை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

முன்னாள் முதல்வரின் உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கைகள் மூலம் தெரிவித்து வந்தது. இறுதியில் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் (Sepsis) பாதிப்புக்கு இருந்ததாக சமீபத்தில் மருத்துவர்கள் குழுவின் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

இளைஞர்களோ, முதியவர்களோ பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திகொண்டவர்களை செப்சிஸ் பாதிக்கும். செப்சிஸ் என்பது உயிருக்கே உலைவைக்கக்கூடிய ஒரு மோசமான நிலை. நம் உடல் உறுப்புகளும் திசுக்களும் நோய்த்தொற்றை இருகரம் நீட்டி வரவேற்கும் நிலை என்றுகூடச் சொல்லலாம். ஜுரம், இதயத்துடிப்பு அதிகமாதல், மூச்சுவிட சிரமப்படுதல்... இவையெல்லாம் செப்சிஸுக்கான பொதுவான அறிகுறிகள். குறிப்பிட்ட இந்த நோய்த்தொற்று ஒருவரைத் தாக்கியிருக்கும்போது, இருமலுடன் கூடிய நிமோனியா காய்ச்சல், சிறுநீர்க் கழிக்கும்போது வலி, சிறுநீரகத் தொற்று இவையெல்லாம்கூட ஏற்படலாம். மிகத் தீவிரமான செப்சிஸ் நிலையில், ரத்த ஓட்டம் சீராக இருக்காது; உடல் உறுப்புகளின் செயல்பாடு குறையும். ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், ரத்த அழுத்தம் குறையும். சுருக்கமாக, செப்சிஸ் என்பது ஒரு நோய்த்தொற்று ஏற்படும்போது, நம் நோய் எதிர்ப்பு சக்தி, அதை எதிர்க்க முடியாத நிலை. 

பொதுவாக பாக்டீரியாக்களால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்றாலும், வைரஸ், நுண்ணுயிரிகளாலும் ஏற்படலாம். பிரதானமாக சிறுநீரகப் பாதை, மூளை, இரைப்பை, வயிற்றில் உள்ள உறுப்புகளில் செப்சிஸ் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு மிக பலவீனமான நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால், நோய்த்தொற்று ஏற்படும்போது செப்சிஸ் நிலை ஏற்படும். ஏதோ காலில் கல் குத்திக் காயம்படுகிறது. `தண்ணீர் படாமல் பார்த்துக்கோ... செப்டிக் ஆயிடும்’ என்று யாராவது சொல்வார்கள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும். புண் ஆறாமல் மேலும் மேலும் தீவிரமாகும் நிலை'' என்கிறார் நெஞ்சக நோய் மருத்துவர் ஜெயராம். இந்த நிலையில்தான் ஜெயலலிதா இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல். 

சந்தேகம்...

ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் குறித்து ஏகப்பட்ட யூகங்கள்... வதந்திகள்... கற்பனைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட சர்க்கரைநோய்க்கான மருந்துகள் அவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதால்தான் அவர் இறக்க நேரிட்டது என ஒரு செய்தி, வலைதளங்களில் உலவியது. ஜெயலலிதா அப்போலோவில் இருந்த நாட்களில் அவ்வப்போது, ‘அவர் நலமாக இருக்கிறார்’, ‘அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது’ என்று செய்திகள் வெளியாகினவே தவிர, அவருக்கு உடலில் இந்த நோய்த் தாக்கம் எனக் குறிப்பிட்டு ஒன்றுமே சொல்லப்படவில்லை. இப்போது தாமாகவே வந்து பத்திரிகையாளர் சந்திப்பில், சிகிச்சை அளித்த மருத்துவர் குழு `செப்சிஸ்’ என்கிற குண்டைத் தூக்கிப் போட்டிருப்பது இன்னும் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறன. ஜெயலலிதாவுக்கு செப்சிஸ் பாதிப்பு இருக்கும்பட்சத்தில் ஆரம்பத்திலேயே அதை வெளியிலே சொல்லியிருக்கலாமே..! 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்கட்டும் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழுகூட அமைக்கப்படட்டும். உண்மை எப்படியாவது வெளியாக வேண்டும். `அம்மா... அம்மா’ என்று அரற்றிக்கொண்டிருக்கும் உண்மையான அ.தி.மு.க தொண்டர்களுக்கும் மக்களுக்கும் வேண்டியதெல்லாம் இதுதான்!

- பாலு சத்யா