Published:Updated:

முறையற்ற மாதவிலக்குக்கு ஃபாஸ்ட் ஃபுட் ஒரு காரணமா?

முறையற்ற மாதவிலக்குக்கு ஃபாஸ்ட் ஃபுட் ஒரு காரணமா?
முறையற்ற மாதவிலக்குக்கு ஃபாஸ்ட் ஃபுட் ஒரு காரணமா?

ட்லி, தோசை, இடியாப்பம் என சாப்பிட்ட நாம் இன்று பர்க்கர், பீட்சா, நூடூல்ஸ், சாண்ட்விச், பிரெட் என மாறிக் கொண்டிருக்கிறோம். மாடர்ன் உலகில் இந்த உணவுகளை எளிதாக செய்ய முடிவதோடு, பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த உணவுகள் எல்லாம் பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என ஒருபுறம் நினைக்க வைத்தாலும், மறுபுறம் பெண்களுக்கு வேறு விதமான பிரச்னைகளை சத்தமில்லாமல் ஏற்படுத்தி வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு மாதவிலக்கு என்பது உடல் வலியோடு மனவலியையும் ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஹார்மோன்கள் மாற்றத்தால் மாதவிலக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெண்களுக்கு மார்பகங்கள் சற்று பெரிதாகத் தோன்றுதல், தலைவலி, நடு முதுகுவலி, மார்பக வீக்கம், கணுக்கால் வீக்கம், இடுப்பு வலி, மூட்டுக்களில் வலி, பசியின்மை, மலச்சிக்கல் உட்பட பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். அது போல் சிடுசிடுப்பு, கவனமின்மை, சோர்வு, மன அழுத்தம், மனநிலையில் மாற்றம், தன்னம்பிக்கையின்மை, கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுதல், தாழ்வு மனப்பான்மை, அழுகை, ஆர்வமின்மை, ஓய்வின்மை உட்பட பல்வேறு மனநல அறிகுறிகள் ஏற்படும். மாதவிலக்குக்கு பின்னர் இந்த அறிகுறிகள் தானாகவே சரியாகி உற்சாகமடைந்து விடுவார்கள். இந்த அறிகுறிகள் மூன்றில் ஒரு பெண்ணுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாறிவரும் உணவு பழக்கத்தால் இந்த அறிகுறிகள் அதிகமாவதோடு, ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்படும் அறிகுறிகள் இன்னும் விரைவாக 10 நாட்களுக்கு முன்னரே துவங்குவதாக ஆய்வுகள் அதிர வைக்கிறது.

ஃபாஸ்ட் உணவுகள் எவ்வகையில் பெண்களின் உடலிலும், மனதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியோடு சென்னை மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷிடம் பேசினோம். ‘பீட்சா, பர்க்கர், பிரெட் என பெரும்பான்மையான ஃபாஸ்ட் புட்களில் மைதாவே பிரதானம். இது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். தொடர்ந்து இவ்வகை உணவுகளை உட்கொள்ளும் போது கொழுப்புச்சத்து அதிகரித்து உடல் எடை அதிகரிக்க காராணமாகிவிடும். விளைவு மாதவிலக்கு கோளாறு, உற்சாகமின்மை, வேலை செய்ய சிரமப்படுதல் போன்ற சிரமங்கள் ஏற்படும்.  மைதா, கோதுமையில் இருக்கும் க்ளூட்டனை ஜீரணிக்க இயலாவிட்டால் அதன் காரணமாக தலைவலி, ஜீரணக்கோளாறு போன்ற ஏற்படும்.
 
இவ்வகை உணவுகளில் கலக்கப்படும் பல்வேறு உப்புகள், ருசிக்காக சேர்க்கப்படும் மசாலாக்களின் ரசாயணத் தன்மையால் ஹார்மோனல் இம்பாலன்ஸ் ஏற்படுகிறது. எனவே, இவ்வகை உணவுகளை தவிர்த்துவிட்டு, ஆரோக்கிய உணவு, நடைப்பயிற்சி, சிறுசிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணுக்குமான மாதவிலக்கு அறிகுறிகள் மாறுபடும். அவற்றை டைரியில் குறித்து வைத்துக் கொண்டு, மூலக்காரணங்களை ஆராய்ந்து சரிசெய்தாலே நம் பிரச்னைகளை குறைத்து விடலாம். அச்சமயத்தில் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றார்.

மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகளை கட்டுப்படுத்த என்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் அம்பிகா சேகர் ''காலையில இட்லி, மதியம் சாப்பாடு, மாலை சுண்டல்/கொலுக்கட்டை, வேக வைத்த வேர்க்கடலை/ மக்காச்சோளம் என

உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இளம் வயதில் விளையாட நேரம் ஒதுக்காமல் டிவி, கம்ப்யூட்டர், செல்போன் கேம்களிலேயே பொழுதை கழிக்கும் குழந்தைகளுக்கும் இந்த உணவு பொருந்தும். போதுமான நீர்ச்சத்து இல்லாத போது உப்பு அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் தலையில் நீர் கோர்த்து, தலைவலி உண்டாகும்.

மாவுச்சத்து, நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், தயிர் சாதம் போன்ற எடுக்கலாம். போதுமான தூக்கம், தளர்வான ஆடைகள், ஆரோக்கிய உணவு இருந்தாலே நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்: என்றார்.


மாதவிலக்கு முன் வரும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் உணவுகள்...

* கோதுமை, பிரவுன் ரைஸ், முழு பயறு வகைகள், பாலக்கீரை, பீன்ஸ், முந்திரிப்பருப்பு உணவுகளில் மக்னீசியம் அதிகளவில் உள்ளது. இவ்வகை உணவில் சேர்த்துக் கொண்டால் அடிவயறு வீங்கியிருப்பது போன்ற அறிகுறியை குறைக்கும்.
* விட்டமின் ‘பி’ அதிகமுள்ள நட்ஸ், வாழைப்பழம், உருளைக்கிழங்கை உணவில் அதிகளவில் எடுத்துக் கொண்டால் உடல் களைப்பு குறைக்கும்.
* உடலின் கொழுப்பு சத்துக்கு மத்திமீன், பூசணி விதைகள், வால்நட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* பொட்டாசியம் அதிகமுள்ள ஃப்ரூட் சாலட், ஆரஞ்சு, ஆப்பிள் மாலை நேரத்தில் எடுத்துக் கொண்டால் சோர்வு குறையும்.
* தண்ணீர், இளநீர், வெள்ளை பீன்ஸ், புரோக்கோலி படப்படப்பை தடுக்கும்.
* விட்டமின் ‘ஈ’ நிறைந்த அவகேடோ, மீன், பாதாம் பருப்பு மாதவிலக்கின் முன் தோன்றும் அறிகுறிகளை கட்டுப்படுத்தும்.  

- ஆர். ஜெயலெட்சுமி