Published:Updated:

எக்ஸாம் ஃபீவர்? எதிர்கொள்வது ஈஸி! #HealthTips

MOHANAPRIYA C
எக்ஸாம் ஃபீவர்? எதிர்கொள்வது ஈஸி! #HealthTips
எக்ஸாம் ஃபீவர்? எதிர்கொள்வது ஈஸி! #HealthTips

ரவு 12:00 மணி வரைக்கும் கண்விழித்துப் படித்த பிள்ளையை, அதிகாலை 4:00 மணிக்கு அலாரம் வைத்து எழுப்புவார் அம்மா. சூடான டீயோ, உற்சாகமூட்டும் ஜூஸோ கொடுத்துவிட்டு, `என் புள்ள எப்பிடி படிக்குது பாரு...’ எனப் பெருமையாக  யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பார்.  நான்கு மணி நேர தூக்கம் என்பது உடலுக்குப் போதுமானதல்ல... கண்விழித்திருந்தாலும், புத்தகத்தை விரித்தே வைத்திருந்தாலும் ஓர் அட்சரம்கூட அந்த மாணவனின் மூளையில் ஏறாது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கும்.  ஆக, எது படிக்கச் சரியான நேரம், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எக்ஸாம் நேரத்தில் எவற்றைச் சாப்பிடுவது ஆரோக்கியம்... இப்படித் தேர்வு நேரத்தில் சரியான, பொருத்தமான வழிகாட்டல் மாணவர்களுக்கு அவசியத் தேவை. 

ஒரு வருடம் முழுக்கப் படித்த பாடங்களைத் திரும்பத் திரும்பப் படிப்பது சிலருக்கு சலிப்பாக இருக்கும்; சிலரோ, பரீட்சை நேரத்தில்தான் மொத்தத்தையும் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருப்பார்கள். வருடம் முழுக்கப் படிக்காததை, கடைசி நேரத்தில் மொத்தமாகப் படிப்பது சாத்தியமே இல்லாதது. மொத்தத்தில் அனைவரையும் பற்றிக்கொள்வது இந்த `எக்ஸாம் ஃபீவர்’ என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. பரீட்சையை எளிதாக எதிர்கொள்ளச் சில டிப்ஸ்...

கண் நலம் காக்க!

சிலர் தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்துப் படிப்பார்கள். இவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்; தினசரி இளநீர் குடிப்பது நல்லது: குளிர்ந்த, சுத்தமான நீரால் அவ்வப்போது கண்களைக் கழுவ வேண்டும்.  அதாவது, மூடிய கண்களின் மேல் தண்ணீரை அடிக்கலாம். அதுபோல், உள்ளங்கையில் தண்ணீரை ஏந்தி அதில் ஒவ்வொரு கண்ணாக வைத்து 10 முறை சிமிட்டுவது நல்லது. இதனால், கண்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். கண் சோர்வு நீங்கும்.

வைட்டமின்கள் முக்கியம்!

உடல் சோர்ந்து போகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டியது முக்கியம். தினமும் வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை அருந்தலாம். இவை மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் மீன் சாப்பிடலாம்.

கவனச் சிதறல் தவிர்!

நம்முடைய தினசரிப் பழக்கங்களால்கூட கவனச் சிதறல் ஏற்படலாம். உதாரணமாக, டி.வி பார்ப்பது, விளையாட்டு போன்றவை. பரீட்சை நெருங்குகிற நேரத்தில் இவற்றைத் தவிர்ப்பதே சிறந்தது. 

ஆரோக்கியம் அவசியம்!

தேர்வு நேரங்களின்போது, உடலுக்கு சிறு பாதிப்பு வந்தாலும், அதை அப்படியே விட்டுவிடாமல் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். `சிறிய உடல் உபாதைதானே!’ எனக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடக் கூடாது. எப்போதும், நன்கு கொதிக்கவைத்த தண்ணீரை அருந்துவது நல்லது.

பயம்... பதற்றம்... விரட்டவும்!

தேர்வு நேரங்களில் எல்லா மாணவர்களுக்குமே அதிகப்படியான பதற்றமும் பயமும் இருப்பது இயல்பு.    எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு என்று இருக்காமல் மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் சில  வழிகளைக் கையாண்டாலே இவற்றை விரட்டிவிடலாம். காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி  செய்யலாம், ஒரு சின்ன வாக் போய்விட்டு வரலாம், பூங்காவிலோ, மைதானத்திலோ ஜாகிங்கூடச்  செய்யலாம். மூளையைச் சுறுசுறுப்பாக்க உதவும் சுடோகு, எண் கணிதம் போன்ற விளையாட்டுகளை    விளையாடலாம்.

மூளைக்கு இதம் தரும் உணவுகள்!

நட்ஸ், யோகர்ட், ஆப்பிள், மஞ்சள் தூள் கலந்த பால், பூசணி விதைகள், முளைகட்டிய பயறு, புரோக்கோலி,  கீரைகள், டார்க் சாக்லேட், முட்டை, நெய் சேர்த்த சாதம் போன்றவற்றைச் சாப்பிடுவது மூளைக்கு  இதமளிக்கும்; ஃப்ரெஷ்ஷாக ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். 

தவிர்க்கவேண்டியவை...

* தேர்வு நேரத்தில் அதிகமாக யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. கவனத்தைத் திசை திருப்பும் வெற்று எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

* எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ், பலகாரங்களைச் சாப்பிடக் கூடாது. ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்  உணவுகளைத் தள்ளி வைக்கவும். 

* அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, படிக்கும் நேரத்தை நாமே ஒதுக்கிக்கொள்ளலாம். நமக்கு நாமே ஓர் அட்டவணையைத் தயார் செய்துகொண்டு அதைப் பின்பற்றி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் படிக்கலாம்.

* `நான் இன்னும் எதையுமே முழுமையாகப் படிக்கவில்லையே... எதைப் படிப்பது, எதை விடுவது?’ என்று மனம் சில நேரங்களில் குழம்பும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் குழுவாகச் சேர்ந்து படிக்கலாம்.

* செல்போன், டி.வி, வீடியோ கேம்ஸ், செல்போனில் விளையாடும் விளையாட்டுகள்... இப்படி நம் நேரத்தை வீணாகச் சாப்பிடும் அத்தனைக்கும் கறாராக `நோ’ சொல்லிவிடவும். இவை நம் கவனத்தைத் திசைதிருப்பிவிடுபவை. படிக்கவில்லையே என்கிற குற்றவுணர்ச்சிக்கும் ஆளாக்குபவை!

- ச.மோகனப்பிரியா