Published:Updated:

உடலுக்கு உள்ளே கமாண்டோ தாக்குதல்!

கல்லீரல் புற்றுநோய் மருத்துவத்தில் புரட்சி

பிரீமியம் ஸ்டோரி
உடலுக்கு உள்ளே கமாண்டோ தாக்குதல்!

நாட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் தீவிரவாதிகளை, கமாண்டோ படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தி அழிப்பதைப்போன்று, மனிதனின் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் கல்லீரல் புற்று நோயை அழிக்கும் புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்துவிட்டது!

இது குறித்து விளக்குகிறார், சென்னை அப்போலோ புற்று நோய் சிறப்பு மருத்துவமனையின் சீனியர் கன்சல்டன்ட் டாக்டர் டி.ராஜா.

##~##

''இந்தியா உள்ளிட்ட தென் ஆசியப் பகுதிகளில் கல்லீரலில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஹைபடைடிஸ் வைரஸ் பி மற்றும் சி அதிக அளவில் உள்ளன. இதனால் ஏற்படும் கல்லீரல் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட முடியும். நோயின் பாதிப்பு அதிகம் என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால், இதற்குத் தகுதியான கல்லீரல் கிடைக்க வேண்டும், மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவும் அதிகம்.

உடலுக்கு உள்ளே கமாண்டோ தாக்குதல்!

அத்தகைய சிகிச்சை மூலம் கல்லீரல் புற்று நோயில் இருந்து பூரண நலம்பெற்றுவிடலாம். ஆனால் நோய் மிகவும் முற்றிய நிலையில், எந்த மருத்துவமும் செய்ய முடியாது. மருந்து, மாத்திரைகள் கொடுத்து மரணம் ஏற்படுவதை காலம் தாழ்த்த மட்டுமே முடியும்.

கல்லீரல் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுபவர்கள் மிகச் சிலரே. பெரும்பாலும் நோய் மிகவும் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில்தான், மருத்துவர்கள் இருப்பார்கள். முற்றிய நோய் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில், குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைந்து கதிர்வீச்சை அளிக்கும் செலக்ட்டிவ் இன்டர்னல் ரேடியேஷன் தெரபி என்ற (Selective internal radiation therapy - SIRT ) புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. தீவிரவாதிகளை கமாண்டோக்கள் உள்ளே புகுந்து தாக்கி அழிப்பதுபோன்றது இந்தப் புதிய தொழில்நுட்பம். பொதுவாகப் புற்று நோய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் இருந்துதான் கதிர்வீச்சு செலுத்தப்படும். அதனால், கதிர்வீச்சு செல்லும் பாதையில் உள்ள நல்ல திசுக்களும் பாதிக்கப்படும். ஆனால், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் அந்தப் பிரச்னை இல்லை.

உடலுக்கு உள்ளே கமாண்டோ தாக்குதல்!

இந்த சிகிச்சையில், நோயாளியின் தொடையில் உள்ள நல்ல ரத்தக் குழாய் வழியாக மைக்ரோ கதிட்டரைப் போட்டு, அதன் வழியாக மிக மெல்லிய குழாயைச் செலுத்துவோம். இதற்கு லோக்கல் அனஸ்தீஷியா கொடுத்தாலே போதும். அந்தக் குழாய் கல்லீரலுக்கு ரத்தம் செல்லும் முக்கிய ரத்தநாளம் வரை செல்லும். கிட்டத்தட்ட கல்லீரலில் புற்று நோய் தாக்கிய பகுதி வரை அது செல்லும். பின்னர், லட்சக்கணக்கான எண்ணிக்கையில் எஸ்.ஐ.ஆர். ஸ்பியர்ஸ் (SIR-Spheres) செலுத்துவோம். இந்த மைக்ரோ ஸ்பியர்ஸ் ஒவ்வொன்றும் 35 மைக்ரான் அளவுக்கு இருக்கும். இது ஈட்ரியம்-90 என்ற கதிர்வீச்சைக்கொண்டது. இவை நேரடியாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சென்று தாக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் கல்லீரலில் புற்று நோய் பாதித்த பகுதிக்கு ரத்தம் செல்வது தடுக்கப்படுவதுடன், புற்று நோயின் டி.என்.ஏ-வும் தாக்கி அழிக்கப்படும். இதனால் உடலின் மற்ற பகுதிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில் டாக்டர்கள் ஆலோசனைக்குப் பிறகு நோயாளி வீட்டுக்குத் திரும்பிவிடலாம். பழைய கதிர்வீச்சு முறைகளைக் காட்டிலும், இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் 40 மடங்கு அதிகக் கதிர்வீச்சு, புற்று நோய் செல்கள் மீது செலுத்தப்படுகிறது.

இந்த சிகிச்சை, இரண்டாம் நிலை கல்லீரல் புற்று நோயாளிகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் போதுமான அளவுக்கு புற்று நோய் பாதிக்காத பகுதி இருந்தால், இந்த சிகிச்சையைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி இருந்தால் மட்டுமே... இந்த சிகிச்சையை செய்ய முடியும். கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடு எப்படி உள்ளன, கல்லீரலுக்கு ரத்த ஓட்டம் நன்றாக உள்ளதா என்பதை எல்லாம் பரிசோதனை செய்து பார்த்த பின்னரே சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் பக்க விளைவுகள் இல்லை என்று கூற முடியாது. பக்க விளைவுகள் குறைக்கப்பட்டு உள்ளன. அதையும் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், இந்த எஸ்.ஐ.ஆர். ஸ்பியர்ஸ் சிகிச்சைக்கான கட்டணம் குறைவுதான்.

தற்போது கல்லீரல் புற்று நோய்க்கு மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இது ஒரு நல்ல ஆரம்பம். இந்த முறையை மேம்படுத்துவதன் மூலம், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆராய்ச்சிகள் நல்ல முடிவைத் தரும் பட்சத்தில், மனிதன் அனைத்து வகையிலான நோய்களில் இருந்தும் விடுபட முடியும்!'' என்றார்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிக நல்ல செய்தி!

- பா.பிரவீன்குமார்,  படம்: இரா.ஸ்ரீதர்

உடலுக்கு உள்ளே கமாண்டோ தாக்குதல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு