Published:Updated:

மாரடைப்பை கண்டுபிடிக்கும் கருவி... குறைந்த விலைக்குக் கிடைக்கணும்! - வடிவமைத்த மாணவரின் விருப்பம்! #VikatanExclusive

மாரடைப்பை கண்டுபிடிக்கும் கருவி... குறைந்த விலைக்குக் கிடைக்கணும்! - வடிவமைத்த மாணவரின் விருப்பம்! #VikatanExclusive
மாரடைப்பை கண்டுபிடிக்கும் கருவி... குறைந்த விலைக்குக் கிடைக்கணும்! - வடிவமைத்த மாணவரின் விருப்பம்! #VikatanExclusive

ப்போது, டெல்லியில் குடியரசுத்தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருக்கிறார் ஆகாஷ். அவரின் செல்போன் எண்ணைப் பிடிப்பதுதான் கடினமாக இருந்தது. தொடர்புகொண்டால், தயங்காமல் பேசுகிறார். பேசப் பேச, `10-ம் வகுப்புப் படிக்கும் மாணவரா இவ்வளவு தெளிவான உச்சரிப்புடன், தீர்க்கமாகப் பேசுகிறார்?’ என ஆச்சர்யமாக இருந்தது. ஆண்டுக்கு எட்டு கண்டுபிடிப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் குடியரசுத் தலைவரின் `இன்னொவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ திட்டத்துக்கு முழுக்க முழுக்கத் தகுதியானவர் என்பது பேச்சிலேயே தெரிகிறது. தேசிய அளவில் நன்மை தருகிற, புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்களால் மட்டுமே இந்தத் திட்டத்தில் இடம்பெற முடியும். அந்த வகையில் மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டுபிடிக்க ஆகாஷ் வடிவமைத்திருக்கும் கருவி, தமிழர்கள் அத்தனை பேரையும் பெருமைகொள்ள வைத்திருக்கிறது. ஆகாஷ், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்! 

டெல்லியில் இருக்கும் இரண்டு வாரங்களில், அங்கே நடக்கும் கண்காட்சியில் பொருத்தமான கண்டுபிடிப்புகளை மேம்படுத்த, சந்தைப்படுத்த குடியரசுத் தலைவரும், அவர் அலுவலகமும் கண்டுபிடிப்பாளர்களுக்கு உதவி செய்கிறார்கள். பெரிய நிறுவனங்கள், அரசுத் துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஒப்பந்தம் போடவும் இங்கே வழி பிறக்கும். இப்போது அங்கேதான் இருக்கிறார் ஆகாஷ்.

சென்னைதான் பூர்வீகம் என்றாலும், ஆகாஷ் வசிப்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில். அப்பா மனோஜ் பிசினஸ்மேன்; அம்மா சோம்லதா வீட்டு நிர்வாகி. ஆகாஷுக்கு ஒரே தம்பி... நான்காம் வகுப்புப் படிக்கிறார். ஆகாஷ், ஓசூரில் உள்ள `தி அசோக் லைலேண்ட் ஸ்கூலி’ல் 10-ம் வகுப்புப் படிக்கிறார். 

``என் தாத்தா, மாரடைப்பு வந்து இறந்துபோயிட்டார். அதுக்கு எந்தவிதமான முன் அறிகுறியும் தெரியலை. ஆனா, அவர் ஒரு சர்க்கரை நோயாளி. அது என்னை ரொம்ப பாதிச்சுது. திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்து ஆளையே கொல்லும் சைலன்ட் ஹார்ட் அட்டாக்கைக் கண்டுபிடிக்க இந்தக் கருவியை உருவாக்க அவர் மரணம்தான் காரணமா இருந்துச்சு. உண்மையில், ரெண்டுவிதமான மாரடைப்பு இருக்கு. ஒண்ணு, முன்கூட்டியே மார்பில் வலி, தோள்பட்டையில் வலினு அறிகுறிகளைக் காட்டும். சர்க்கரைநோயாளிகள், கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்குற சில நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் எதுவும் இருக்காது. ஆனா, ஹார்ட்ல பிளாக் இருக்கும். வெளியே தெரியாது. இந்த நிலையில் இருக்கறவங்க மாரடைப்பு வந்தா அதை எதிர்கொண்டே ஆகணும். அவங்களுக்கு வேற வழியே இல்லை. அறிகுறிகள் தெரிஞ்சாத்தானே மருத்துவமனையில சேர்க்கலாம், சிகிச்சை எடுத்துக்கலாம்? அவங்களுக்காகத்தான் இந்தக் கருவி!’’ என்கிறார் ஆகாஷ். 

சரி... மருத்துவத்துறையில் ஆகாஷுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

``சின்ன வயசுல இருந்தே எனக்கு மருத்துவ அறிவியல்ல ரொம்ப ஈடுபாடு. எட்டாம் கிளாஸ் படிக்கும்போது, பெங்களூர்ல இருக்குற `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ல இருக்குற லைப்ரரிக்கு அடிக்கடி போவேன். ஓசூர்ல இருந்து அங்கே போக ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, அது எனக்குப் பெருசா தெரியலை. ஏன்னா, மருத்துவப் பத்திரிகைகளை விலை கொடுத்து வாங்கிப் படிக்க அதிகச் செலவாகும். அப்பிடி நான் படிச்ச கட்டுரைகளைக் கணக்குப் போட்டா லட்சக்கணக்கான ரூபாய் செலவாகியிருக்கும் (சிரிக்கிறார்). அதே மாதிரி பல அறிவியல் கூட்டங்கள்ல போய் கலந்துக்குவேன்... கத்துக்குவேன்.’’ - இப்படிச் சொல்கிற ஆகாஷின் படிப்பு எப்படி? 

``பல பேர் பரீட்சையை நினைச்சு கவலைப்படுறாங்க. எனக்கு படிப்பு எப்பவும் கஷ்டம் கொடுத்ததே இல்லை. பல அறிவியல் கண்காட்சிகள்ல என் புராஜக்ட்களுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கேன். போன வருஷம், ஜப்பான்ல இருக்கும் `டோக்கியோ யுனிவர்சிட்டிய் ஆஃப் சயின்ஸ்’ல இருந்து என்னை கூப்பிட்டிருந்தாங்க. என்னோட ஒரு புராஜக்ட்டுக்கு அவங்க அங்கீகாரம் குடுத்திருக்காங்க. என் ஸ்கூல்லயும் நல்ல ஆதரவு தர்றாங்க. நான் வடிவமைச்சிருக்கும் இந்தக் கருவி தோலில் ஒட்டக்கூடியது (Patch). இதை கை மணிக்கட்டுலயோ, காதின் பின்புறத்துலயோ பொருத்திக்கலாம். இதுல இருந்து சின்னதா ஒரு பாசிட்டிவ் மின்சாரத் தூண்டுதல் (Electrical impulse) வெளியாகும். அது இதயத்துல இருந்து ஹார்ட் அட்டாக் வரப்போறதுக்கான எச்சரிக்கையாக வெளியாகும் எதிர்மறை (நெகட்டிவ்) புரோட்டீனை ஈர்க்கும். இதன் மூலமா,எஃப்.ஏ.பி.பி.3 புரோட்டீனின் அளவு அதிகமாக இருந்தா, உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுதுனு புரிஞ்சிக்கலாம்’’ என்கிறார் ஆகாஷ். 

ஆகாஷின் கருவி விரைவில் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. ``ஏற்கெனவே என் கருவிக்கான காப்புரிமைக்கு விண்ணப்பம் செஞ்சுட்டேன். இனி இதை விற்பனை செய்யணும். அதுக்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தொடர்புகொண்டிருக்கேன். உயிரியல் தொழில்நுட்பத் துறையோட (Department of Biotechnology) கூட்டு சேர்ந்து இந்தக் கருவியைத் தயாரிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு உதவி செஞ்சது நம் குடியரசுத் தலைவர்தான். என் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்குப் பதிலா அரசே ஏத்துக்கிட்டு, செயல்படுத்தணும்கிறது என் ஆசை. அப்போதான் வெறும் 900 ரூபாய்க்குக்கூட இது சந்தையில கிடைக்கும். அதுதான் பொதுமக்களுக்கு நன்மை தரும்’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஆகாஷ். 

ஆகாஷின் ஆசை நிறைவேறட்டும்! 

- பாலு சத்யா