Published:Updated:

`ஆரோக்கியமே முன்னேற்றும்!’ - `மாத்தி யோசி’ பெண்கள் உளவியல்!

`ஆரோக்கியமே முன்னேற்றும்!’ - `மாத்தி யோசி’ பெண்கள் உளவியல்!
`ஆரோக்கியமே முன்னேற்றும்!’ - `மாத்தி யோசி’ பெண்கள் உளவியல்!

ங்கிலத்தில் ஒரு வழக்குத்தொடர் உண்டு. `Odd Man Out’... இதற்கு `கூட்டத்திலிருந்து தனித்து இருப்பவன்’, `ஒதுக்கிவைக்கப்பட்டவன்’, `தள்ளிவைக்கப்பட்டவன்’ என எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் எல்லா விஷயங்களிலும் குறைந்த முன்னுரிமை (Less priority) கொடுக்கப்படும் பெண்களைப் பார்த்துத்தான் இந்த வழக்குமொழி புழக்கத்துக்கு வந்திருக்கும் எனத் தோன்றுகிறது. 

`மார்ச் 8’, பெண் உரிமைகளுக்கான அங்கீகரிப்புத் தினமாக இருக்கிறது. உலகம் முழுதும் பெண்களை நோக்கி கவனம் திருப்பிய ஒரு தினம் என்பது பெண்ணியத்தின் மிக நீண்ட பயணத்தின் அடையாளம். இந்த நாளில் பெண்களுக்குள்ளும் ஒரு பயணம் மிக அத்தியாவசியமாகிறது. 

`தனக்கு மட்டும் சமைக்க வேண்டுமென்றால், பெண்ணுக்குப் பசிக்கவே பசிக்காது’ - இது சமீபத்தில் எழுதப்பட்ட ஓர் ஆண் நண்பரின் முகநூல் பதிவு. பெண்களின் உணவு முறை மீதான மிக ஆழமான புரிதலாகவே இதை நான் பார்க்கிறேன். 

குடும்பத்தைப் பாதுகாப்பது, கல்வி, சுய முன்னேற்றம்... எனப் பல நிலைகளில் பெண்கள் இன்று முன்னிலை கண்டிருக்கிறோம். அம்மாவின் பெயரை இனிஷியலாக வைக்கும் குழந்தைகளையும், அதை வரவேற்கும் ஆரோக்கியச் சமுதாயத்தின் அடிப்படையும்கூட நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 

குடிவழி (Descent), உறைவிடம் (Residence), சொத்துரிமை, குடும்ப நிர்வாகத்திலும் அதிகாரத்திலும் தலைமை (Authority & Succession)... என்பவை தாய்வழிச் சமூகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. அத்தகைய தாய்வழிச் சமூகத்தைப் போன்ற சமூக அமைப்பை நோக்கி இன்றைய பெண்களாகிய நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். என்றாலும், இந்த முன்னேற்றத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன் உடல் மற்றும் மனநலனை இரண்டாம் பட்சமாகவே பார்க்கிறாள். 

1872-ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து நாட்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. குடும்பம் மட்டும் அல்லாமல் தொழில்முறையாகவும் பெண்கள், ஆண்களுக்கு இணையாகவும் இன்னும் கொஞ்சம் அதிகமாகவும் உழைக்கவேண்டியிருந்தது. இதனால் பெண்களுக்கு சமைப்பதில் சிரமம் ஏற்பட்டு நேரமின்மையால் தனக்கென உணவு உட்கொள்ளும் நேரத்தைத் தவிர்க்க முனைந்தனர். இதன் விளைவால் ஊட்டச்சத்து குறைந்தது. இதை உணர்ந்த ஜூலியஸ் மாகியும் (Julius Maggi), டாக்டர் ஷுலரும் இணைந்து பெண்களுக்கான புரதச்சத்து நிறைந்த மாகி நூடுல்ஸை உருவாக்கினர் என்பது நூடுல்ஸ் வரலாற்றில் நாம் அறிந்த ஒரு பகுதி. இதுதான்... `வேகமாகச் சமைக்க, சுவையாகச் சாப்பிட’ (Fast to Cook, Good to Eat) எனும் கருப்பொருளைத் தாங்கிய வர்த்தகமுறையாக அன்று அவதரித்தது. இதன் நிறை, குறைகள் வேறு வடிவமானது என்றாலும், இந்தியாவிலும் எளிமையாக, மிக வேகமாக உட்கொள்ள முடிந்த உணவுகள் மட்டுமே பெண்களுக்காக பெண்கள் வைத்திருக்கும் உணவு கலாசாரமாக இருக்கிறது. ஆக, உலக அளவிலும் பெண்களின் உணவுப் பழக்கம் என்பது தங்கள் கடமைகளையும் அவசியத்தையும் ஒட்டியே வடிவமைக்கப்பட்டதை உணர்த்துகிறது. 

மிகப் பெரிய தனியார் வங்கி ஒன்றில் பெண்களுக்கான விடுப்பு நாட்கள் குறித்து கலாந்தாய்வு நிகழ்த்தியபோது, விடுப்புக்காக பெண்கள் முன்வைக்கும் காரணங்கள் அனைத்தும் `குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை’, `கணவருக்கு ஜுரம்’... என விடுப்பைக்கூட குடும்பத்தினருக்காக மட்டுமே செலவழிப்பதாக இருந்தன. தனக்கென நோய் வரும்போது, இரண்டு வலி நிவாரணி மாத்திரைகளும், வலி போக்கும் களிம்புகளுமே போதுமானவை என கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மிக மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே அதாவது, நகர இயலாத நிலையில் மட்டுமே பெண் தனக்கான கட்டாய ஓய்வை மனம் ஒப்பாமல் எடுத்துக்கொள்கிறாள் என்கிறது இன்னொரு உளவியல். 

இது மட்டுமல்ல... ஒவ்வொரு வீட்டிலும் மிச்சமிருப்பதைச் சாப்பிடுவதில் பெண், ஓர் ஏழ்மையின் பிரதிநிதியாகவே இருக்கிறாள். `ஒரு வாய் கம்மியா சாப்பிட்டாலும் பரவாயில்லை. கொஞ்சமா சமை! உணவை வீணாக்காதே!’ என்பதுதான் பெண்களுக்கு சக பெண்களால் அறிவுறுத்தப்படும் வழக்கு. சமூகவியல் சார்ந்து இன்றளவும் பொருளின் மதிப்பறிந்து, மீதமாகும் உணவை உட்கொள்வதில் வீட்டுக்கு ஒரு சாம்பிளாக அம்மாக்கள் இருக்கிறார்கள். 

தேடி அலைந்து, காய்கறிகள் வாங்குவார்கள். ஆனால். ஃப்ரெஷ்ஷான உணவை அவர்கள் சாப்பிடுவதே இல்லை. சுவை அறிவதற்காக சமைக்கும்போது `பதம்’ பார்ப்பதோடு சரி. அனைவரின் பசியையும் ஆற்றிய பின்னர், வாணலியில் இருக்கும் மிச்சம் மீதமும், கரண்டியில் ஒட்டியுள்ள காய்கறியும்... என அவர்களின் ஊட்டச்சத்து மொத்தத்தையும் குடும்பத்தாருக்கு வழங்குவதிலேயே அவர்கள் மனம் திருப்தி அடைந்துவிடுகிறது . 

நான்கு பேர் இருக்கும் வீட்டில்கூட, மூன்று பேரைக் கணக்கில்கொண்டே காய்கறிகளும் பழங்களும், நெய், நட்ஸ் முதலான அதிக பட்ஜெட்டுள்ள உணவுப் பொருட்களும் கணக்கிடப்படுகின்றன. மீதமிருந்தால் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்ற ரீதியில்தான் பெண்கள் கிச்சனுக்குள்ளேயே நுழைகின்றனர். `அப்பாவுக்கு இது பிடிக்கும், குழந்தைகளுக்கு இது, கணவருக்கு இது...’ என்ற லிஸ்ட்டில் அவர்கள் பெயர் இறுதிவரை இணைக்கப்படாமலேயே இருக்கிறது. முந்தின நாளின் மாலையில், பிள்ளைகள் மீதம் வைத்திருந்த பிரெட்டை டோஸ்ட் செய்து, ஓரிரு வெங்காயத்தையும் தக்காளியையும் உள்ளே செருகி, தன் டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு மதிய உணவுக்கு `பை, பை’ சொல்லும் அம்மாக்களை இன்றைக்கும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

என்றைக்காவது வெளியில் சென்றால், பிடித்ததை உண்பதோடு சரி. அதிலும்கூட மிச்சம் மீதத்தை கணக்கில் வைத்துத்தான் ஆர்டர் செய்யப்படும். வீட்டில் உள்ள அத்தனைபேருக்கும் பிடித்த உணவையும், ஊட்டச்சத்தையும் நிரப்பி அனுப்பிவிட்டு, தனக்கென காலை உணவுக்குக்கூட நேரமில்லாமல் ஒரு வாழைப்பழத்தையோ அல்லது ஒரு கப் பாலையோ அருந்தும் எத்தனையோ பெண்களை தொடர்வண்டியில் நான் பார்த்திருக்கிறேன். `இது போதுமா?’ என அவர்களைக் கேட்கக்கூட ஆள் இருப்பது இல்லை. இந்தக் குறை ஊட்டச்சத்து எப்படி இத்தனை பெரிய ஓட்டத்தையும் வலுவாக்கும் என்பது எங்காவது, எப்படியாவது அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். 

இன்று 50 வயதிலேயே ஆஸ்டியோபோரோஸிஸ் எனும் எலும்பு சம்பந்தமான நோய்... 40 வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், மூட்டுத் தேய்மானம், ஹார்மோனல் இம்பேலன்ஸ்... 30-களில் ஃபைப்ராய்டு, தைராய்டு, ஒபிசிட்டி, ஸ்ட்ரெஸ்... 20 வயதில் நீர்க்கட்டிகள், மென்ஸ்ட்ருவல் டிஸ்ஆர்டர் (Menstrual disorder), குழந்தைப்பேறின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள்... 15 வயதுக்குள் பூப்படைதல்... 10 வயதில் அதிக நோய்த்தொற்று... என வாழ்க்கை முறையில் உணவு மற்றும் மனநலனின் மீதான நிறைய பிரச்னைகளுடன் பெண்கள் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இவற்றில் சில மரபணுரீதியானது என்றாலும், கால ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க, கல்வி, குடும்பத்தை முதல் நிலைப்படுத்த, தொழிலில் முன்னேற... என நமக்கென நாம் ஒதுக்காமல் போன நேரங்களின் பிழையாகவும் இருந்திருக்கலாம். இவை தவிர்க்ககூடியவை. ஓர் ஆரோக்கியமான பெண்தான் ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே, பெண் என்பவள் தன் ஆரோக்கியத்தை மேம்படுத்தித்தான் தன் முன்னேற்றத்தை வலிமைப்படுத்த வேண்டும். 

குடும்பநலனைப் போலவே உங்கள் நலனையும், உணவையும் முதல்நிலைப்படுத்துங்கள். காலை உணவைக் கட்டாயமாக உண்பது, ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துவது, நுண் ஊட்டம் எது என்பதை அறிந்து வயதுக்கும் உடலுக்கும் ஏற்ப உட்கொள்வது, தகுந்த உடற்பயிற்சி, மாதத்தின் ஒரு நாளை தனக்கென ஒதுக்கிக்கொள்ளுதல்... போன்றவைதான் `எனக்காக நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’ என்ற தன்னிறவைப் பெற உதவும். இதுதான் பெண், தன் இனத்துக்காக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள போரிட்ட பெண்ணிய வாழ்க்கையின் பெரும் பயனாக அமையும். இனி நம்மை நாம் கொண்டாடவும், பெண்கள் தினம் போற்றப்படட்டும்!

- மதுமிதா

பின் செல்ல