Published:Updated:

நோமோபோபியா, சைபர்சிக்னெஸ்... உங்களுக்கும் இருக்கலாம் கவனம்! #VikatanExclusive

நோமோபோபியா, சைபர்சிக்னெஸ்... உங்களுக்கும் இருக்கலாம் கவனம்! #VikatanExclusive
News
நோமோபோபியா, சைபர்சிக்னெஸ்... உங்களுக்கும் இருக்கலாம் கவனம்! #VikatanExclusive

நோமோபோபியா, சைபர்சிக்னெஸ்... உங்களுக்கும் இருக்கலாம் கவனம்! #VikatanExclusive

நாளொரு போனும், பொழுதொரு ‘ஆப்’ஸுமாக மாறிக்கொண்டே இருக்கிறது நம் வாழ்க்கை. சிட்டிசன்களில் முக்கால்வாசிப் பேர் நெட்டிசன்களாகவும் இருக்கிறார்கள். தகவல் பரிமாற்றத்தின் பிரமாண்டமாக ஆரம்பித்து, இன்றைக்கு கைக்கு அடக்க குட்டிச்சாத்தானால் ஆளப்படுகிறவர்களாக ஆகிவிட்டோம். 

அழுகிற குழந்தைக்கு ஆங்க்ரி பேர்ட்ஸைக் கொடுப்பதிலிருந்து, அப்பத்தா இறந்ததை இரங்கல் (RIP) ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் போடுவது வரை மெய்நிகர் உலகே, பலருக்கும் மெய்யுலகாக மாறிவிட்டிருக்கிறது. மருத்துவ உலகிலும் இன்டர்நெட் புரட்சிக்குப் பிறகு ஏகப்பட்ட மாறுதல்கள். அதனால் விளையும் நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன, தீர்வு என்ன என்று ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன.

தலைவலி என்று டாக்டரிடம் போய் அவர் மாத்திரை கொடுத்தால், “டாக்டர்... ஒருவேளை இது வெர்டிகோவா இருக்குமோ... இதனால ஹியரிங் லாஸ் வரைக்கும்கூட போகும்ங்கறாங்க. அப்படி ஏதும் இருக்குமோ... நான் `வெஸ்டிபுலர் ரீஹேபிலிடேஷன்’ (Vestibular rehabilitation) மாதிரியான ட்ரீட்மென்ட் எடுத்துக்க வேண்டியிருக்குமோ... இது ஹெரிடிட்டி நோயா டாக்டர்?’’ என்று கூகுளாய்ந்துவிட்டு வந்து தானும் பீதியாகி, அவரையும் பீதிக்குள்ளாக்கிவிட்டு வருபவர்கள் ஏராளம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி எல்லாவற்றுக்கும் கேட்ஜெட்ஸை சார்ந்து வாழ்வது சரியா... என்ன சொல்கிறார் டாக்டர் ருத்ரன்?

“செல்ஃபோன், டேப்லெட் என்று பல கேட்ஜெட்ஸ் இப்போது மனிதனை ஆள்கின்றன. `கேட்ஜெட்ஸ் என்பது திறன்கருவிகள்’ என்று மொழியாக்கம் சொல்கிறது. ஆனால், அது கருவியின் திறனைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. இது, நம் திறனை மழுங்கடிப்பதாகவே பார்க்கிறேன். எந்தக் கட்டத்திலும் கருவிகள் இல்லாமல் நாம் இருந்தது கிடையாது. ஆனால், இப்போது இருக்கும் கருவிகள் மீது நமக்கு ஒரு சார்புநிலை வந்திருக்கிறது. 

`அது இருந்தாத்தான் ஒரு செயலைச் செய்ய முடியும்’ என்பது சார்புநிலை. `பேனாவை உபயோகித்தவர்கள்தான் இப்போ கீபோர்டுல எழுதறாங்க. ஒருவேளை, மீண்டும் பேனாவுல எழுதணும்னா அவங்களால முடியும்’. இது வெறும் சார்பு நிலைதான். சார்பு நிலைதாண்டி, ’அப்செஷன்’ சில பேருக்கு இருக்கும். ஒரே விஷயம் மனதில் உழன்றுகொண்டே இருப்பதுதான் அப்செஷன். அதைத் தாண்டி மனசு திரும்ப வராது. அப்படி தாண்டிப் போனாலும், இயல்பாக இருக்க முடியாது. குழந்தையாக இருக்கும்போது கார், ஏரோப்ளேன் பொம்மைகள் மேல ஒரு ஈர்ப்பு இருக்கும். வளர்ந்த பிறகு இந்த மாதிரி கருவிகள் மீது வந்திருக்கிறது.

மூன்றாவது போதை. கிட்டத்தட்ட மதுவுக்கு அடிமையானதுக்கு சமம் இது.’’ 

``இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?’’

``மெய் நிகர் உலகு, பிறழ் நம்பிக்கையைக் கொடுக்கிறது. கற்பனையான உறவு வட்டத்துக்குப் பின்னால் போகவைக்கிறது. உண்மையான உறவுகளின் தொடர்பு அறுந்துபோகிறது. 

குழந்தைகள் அழுதால்கூட இப்போதெல்லாம் தாலாட்டுப் பாடுவதைவிட, போனை எடுத்துக் காண்பித்து சமாதானப்படுத்துவதுதானே நடக்கிறது?

இதற்கு இன்டர்நெட் மட்டும்தான் காரணமா? வெளியில் போய் ‘குருவி பாரு... காக்கா பாரு’ என்று சொல்வதற்கு அவை இல்லையே? செல்போனில்தானே காட்டவேண்டியதாக இருக்கிறது! ஆக சமூகமும் இதற்கு மறைமுகமாகக் காரணமாக இருக்கிறது. அதுவும் போக, குழந்தைகள் எதை உபயோகிக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ, அதை அவர்கள் முன்னால் பெற்றோர்களே உபயோகித்துக்கொண்டே இருப்பதும் ஒரு காரணம்.’’     

``என்ன செய்யலாம்?’’

``முதலில், `தினமும் ஒரு மணி நேரம் மொபைலையோ, வேறெந்த கேட்ஜெட்ஸையோ தொட மாட்டேன்’ என்று உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் நட்பு, அலுவலகம் அனைவரையும் அதற்குப் பழக்க வேண்டும். அதன் பிறகு இந்த நேரத்தை இரண்டு மணி நேரமாக மாற்ற வேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு நாள் ‘நோ ஃபோன் டே’வாக மாற்றலாம். `இந்த நாளில் இவர் மொபைலைத் தொட மாட்டார்’ என்பதை உங்களைத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் அறிய, அதிகபட்சம் இரண்டு மாதங்கள் ஆகலாம். அதற்குப் பின்னர், உங்களை மொபைலால் ஆள முடியாது.’’ 

``உங்களிடம் செல்போன் இருக்கிறதா டாக்டர்?’’

``இல்லை.’’


செல்போன் வைத்திருக்கும் அத்தனை பேருமே தெரிந்தோ, தெரியாமலோ அது தரும் சில நோய்க்குறிகள் (Syndrome) மற்றும் பிரச்னைகளுக்கு ஆளாகியிருப்பார்கள். அவை...

பேன்டம் ரிங்கிங் சிண்ட்ரோம் (Phantom Ringing Syndrome)

என்ன இது? உங்கள் பாக்கெட்டில் சும்மா இருக்கும் போன் அடித்ததாக உங்களுக்குக் கற்பனையாகத் தோன்றுவது. `ஐடிஸ்ஆர்டர்’ (iDisorder) என்ற புத்தகத்தை எழுதிய லாரி ரோஸன் (Larry Rosen), போன் உபயோகிப்பவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு இந்த சிண்ட்ரோம் இருப்பதாகக் கூறுகிறார். அரிக்காமலேயே அரிப்பதுபோலத் தோன்றுவதால், சொறிந்து கொள்வதுதான், இந்த டெக் யுகத்தில், இந்த சிண்ட்ரோமாக உருமாறியிருக்கிறது. `நம் கண்முன் இல்லாத, ஆனால் நாம் பாதி நேரம் சேர்ந்து வாழ்கிற சோஷியல் உலகம் நம் பாக்கெட்டிலேயே இருப்பதால், அது நம்மை அழைப்பதான கற்பனையில் இப்படிச் செய்கிறோம். எதிர்காலத்தில், கூகுள் கிளாஸெல்லாம் வந்துவிட்டால், நம் மூளை இல்லாததையும் காட்டினால் ஆச்சர்யபடுவதற்கில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

நோமோபோபியா (Nomophobia)

`நோ மொபைல் போபியா’வின் (No Mobile Phobia) சுருக்-தான் `நோமோபோபியா’. மொபைலில் சார்ஜ் தீர்ந்து, இன்னும் சில மணி நேரங்களுக்கு மொபைலையோ வேறெந்த கேட்ஜெட் சமாசாரங்களையோ தொட முடியாதென்றால், இந்த போபியா ஆரம்பிக்கும். யாருடைய மொபைலையாவது கையிலெடுக்கத் தோன்றும்; ஆனால் முடியாது. `அப்படித் தோன்றும் எண்ணமுடையவர்கள் `பாவ்லோஸ் டாக்ஸ்’ (Pavlov’s dogs) ஆகிவிட்டார்கள்’ என்கிறது மருத்துவம். ஒரு நாய்க்கு மணி அடிக்கும்போதெல்லாம் எலும்பைவைத்து, பிறகு எலும்பே வைக்காவிட்டாலும் மணி அடித்தால் எலும்பு அதன் நினைவில் வருவதுதான் பாவ்லோஸ் டாக்ஸ் தியரி. அதன்படி எந்த மணி அடித்தாலும், நமக்கானதாகத் தோன்றி, டக்கென்று பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துப் பார்ப்பார்கள். எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்கிற பதற்றத்தின் விளைவாக வரும் FOMO (Fear Of Missing Out)-வின் ஒரு நிலைதான் இதுவும் என்கிறார்கள்.

சைபர்சிக்னெஸ் (Cybersickness)

இணையமாகட்டும், அடிக்கடி உபயோகிக்கும் ஒரு சில ‘ஆப்’ஸ் ஆகட்டும்... உங்கள் மனதில் பதிந்திருக்கும் லேஅவுட்டில் இருந்தால்தான் அவற்றை ரசிப்பீர்கள். ஆப்பிள் ஒருமுறை தன் புதிய பதிப்பில், அதன் ஆப்ஸ்-ன் சின்னங்களை முப்பரிமாணத்தில் கொடுத்தபோது, அலறினார்கள் உபயோகிப்பாளர்கள். ‘ஐயையோ தலை சுற்றுகிறது... குமட்டுகிறது... யார் இந்த வடிவத்துக்கு ஒப்புதல் கொடுத்த ஆசாமி?’ என்று ஆப்பிள் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு மின்னஞ்சல் ஐடி, கடிதங்களால் நிரம்பி வழிந்தது. 

உதாரணத்துக்கு, நாளைக்கு நீங்கள் விழித்து, மொபைலைத் திறந்ததும், ஃபேஸ்புக் ஐகான் வேறு நிறத்தில், செவ்வகமாக இருந்தால், உங்கள் மனம் அதை ஏற்கவே ஏற்காது. அதனால்தான் நிறுவனங்கள் தங்கள் லோகோவை மாற்றுவதற்கு முன்னர் முழுப் பக்க விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதை அதை ஏற்பதற்குத் தயார் செய்கிறார்கள்.  

தி கூகுள் எஃபெக்ட் (The Google Effect)

இன்டர்நெட் புரட்சிக்குப் பிறகான உலகின் முதல் அறிகுறியாகவே இந்த ‘கூகுள் எஃபெக்ட்’ இருக்கிறது. அதாவது, ‘எல்லாம் நெட்டில் பார்த்துக்கலாம்’ என்கிற மனோபாவத்தால் நம் மூளை மிகக் குறைவான விஷயங்களையே தக்கவைத்துக்கொள்கிறது. `நம் குடியரசுத் தலைவர் யார்?’ என்று யோசிப்பதைக் காட்டிலும். ‘கூகுள் பண்ணினா தெரியப்போகுது’ என்றுதான் எண்ணுகிறோம். நிச்சயமாக இந்த கூகுள் பல விஷயங்களில் உபயோகமாக இருந்தாலும், சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டு, தகவல்களை அறிந்துகொள்வதோ, மூளையில் அதை சேமித்துக்கொள்வதோ இல்லை போன்ற பின் விளைவுகளும் உள்ளன.

- பரிசல் கிருஷ்ணா