Published:Updated:

சாதாரண இருமல்... டி.பி நோயானது... மீண்டவரின் அனுபவப்பகிர்வு! #WorldTuberculosisDay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாதாரண இருமல்... டி.பி நோயானது... மீண்டவரின் அனுபவப்பகிர்வு! #WorldTuberculosisDay
சாதாரண இருமல்... டி.பி நோயானது... மீண்டவரின் அனுபவப்பகிர்வு! #WorldTuberculosisDay

சாதாரண இருமல்... டி.பி நோயானது... மீண்டவரின் அனுபவப்பகிர்வு! #WorldTuberculosisDay

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சளி, இருமல் எல்லோருக்கும் வரும் போகும். ஆனா சிலபேர் நாள்கணக்கா, வருஷக்கணக்கா இருமிக்கிட்டே இருப்பாங்க. ஆனாலும் பாருங்க அப்படி இருமுறவங்களுக்கு பெருசா பாதிப்பு இருக்காது. இதுல சில பேருக்கு டி.பி வந்து பாடாய்ப்படுத்தும். அதை கவனிக்காமல் போகும்பட்சத்தில் மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளையும் பாதித்து உயிருக்கே உலை வைக்கும் நிலை ஏற்படலாம். இதோ... ஒருவருக்கு சாதாரண இருமலாக வந்து அடுத்தடுத்த நாட்களில் ஜுரம், கை-கால் வலி என பாதிப்புகளை ஏற்படுத்தி அது கடைசியில் காசநோயில் போய் விட்டிருக்கிறது. நோய் பாதித்தாலும் அதிலிருந்து மீண்ட ஒருவரின் வெற்றிக்கதையை 'உலக காசநோய் தினமான' இன்று உங்களோடு பகிர்வதில் பெருமை கொள்கிறோம்.

காசநோய் தினமான இன்று, இந்த நோய் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், காசநோய் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடும் அயனாவரம் நெஞ்சகநோய் மருத்துவமனைக்கு ஒரு விசிட் அடித்தபோதுதான் அந்த மனிதரைப் பற்றி அறிய முடிந்தது.

திரும்பிய இடமெல்லாம் மரங்களால் சூழப்பட்டு பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது அயனாவரம் நெஞ்சகநோய் மருத்துவனை. அங்கே... புற நோயாளிகள் பிரிவில் பெரிய அளவில் கூட்டமில்லை. அது அரசு மருத்துவனை என்றபோதிலும், அதற்கு உரிய தோற்றத்துக்கு மாறா, `பளிச்' என்று சுத்தமாக இருக்கிறது. நல்லதொரு சூழலில் அமைந்திருக்கும் அந்த மருத்துவமனையின் உள்ளே நாம் சென்றபோது, `ஹென்றி... ஹென்றி...' என்று டாக்டர் இரண்டு தடவை அழைக்க... எலும்புகளின்மீது துணி போர்த்தப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தில் நடுத்தர வயதில் உள்ள ஒருவர் வந்து நின்றார். எடுத்த எடுப்பிலேயே `நீங்க எப்படி குணமானீங்கன்னு இவங்கக்கிட்ட சொல்லுங்க' என்று அந்த மனிதரிடம் டாக்டர் சொல்ல அவர் நம்மிடம் பேசினார்.

“வண்ணாரப்பேட்டையில இருந்து வர்றேன் சார். நல்லாத்தான் இருந்தேன்... ஒருநாள் இருமல் வந்துச்சு. அதுக்கு அப்புறமா கொஞ்சநாள் ஆக ஆக இருமிக்கிட்டே இருந்தேன். சரி... இருமல்தானேன்னு நானும் கண்டுக்காம விட்டுட்டேன். நைட் ஆனதும் ஜுரம் வரும். திடீர்னு நடக்கவே முடியல. கை, கால் எல்லாம் வலி பாடாய்ப்படுத்திச்சு. என்னோட நிலைமையைப் பார்த்துட்டு அண்ணன்தான் இங்க கூட்டியாந்து சேர்த்து விட்டாரு. அப்போ... சளியை டெஸ்ட் பண்ணி பாத்துட்டு டி.பி ஸ்டார்டிங் ஸ்டேஜ்னு சொன்னாங்க...''

ஹென்றியின் உதட்டில் வேதனையுடன்கூடிய மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.

மருந்தெல்லாம் சரியா எடுக்கிறீங்களா...? என்று நாம் கேட்க, “ரெண்டு மாசத்துக்கு ரெகுலரா எடுத்துக்கிட்டேன் சார். பிராப்ளம் ஒண்ணும் இல்லைன்னதும் தெனாவட்டு வந்திட்டு. மாத்திரை சாப்பிடுறத விட்டுட்டேன். மூணு, நாலு மாசம் நார்மலா இருந்தேன். திடீர்னு ஒருநாள் நைட் ஜுரம் வந்திச்சு, அப்புறம் நெஞ்செல்லாம் பயங்கர வலி எடுத்துச்சி. ஒரு சைடா படுக்கவே முடியல சார். யாராவது நம்ம பின்னாடி வந்து தோள்பட்டையைத் தொட்டாக்கூட வலிக்கும் சார்” என்று பரிதாபமாகச் சொன்னார் ஹென்றி.

காசநோயின் தீவிரம் எவ்வளவு வீரியமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டதும் ஹென்றியிடமிருந்து விடைபெற்ற நாம் மருத்துவமனை கண்காணிப்பாளரான டாக்டர் நளினி ஜெயந்தியை சந்தித்தோம். 

“ ‘சாதாரண சளி... இருமல்தானே...’ என்று ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால்தான் எளிதில் குணப்படுத்தக்கூடிய காசநோய்க் கிருமிகள், பல மடங்கு பெருகி Multi Drug Resistant (MDR) எனப்படும் கடுமையான நோயாக மாறுகிறது.

காசநோய் மற்ற நோய்களைப் போன்றதல்ல. இது காற்றில் பரவக்கூடிய தொற்றுநோய். அதனால் இது யாருக்கும் வரலாம். பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு எல்லாம் இதற்குக் கிடையாது. 

நீங்கள் சாலையில் நடந்து போகும்போது, அருகே செல்லும் ஒருவர் இருமுகிறார் என்று வையுங்கள். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கும் அந்தக் கிருமிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால் அவரிடமிருந்து உங்களுக்கும் காசநோய் வரலாம். உடல் மெலிதல், எடை குறைதல், இரண்டு வாரங்களுக்கு மேலான ஜுரம்,  இருமல், சளி போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று காசநோய் இருக்கிறதா என்று சோதனை செய்துகொள்ள வேண்டும். 

எங்கள் மருத்துவமனையில் இப்போது புதிதாக ஒரு எந்திரம் வாங்க இருக்கிறோம். இதன்மூலம் MDR வகை டி.பி.யா? என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். அதை துவக்கத்திலேயே கண்டறிந்து, முறையாக மாத்திரை எடுத்துக்கொண்டால் இந்த நோயை குணப்படுத்துவது மிக மிக எளிது. காசநோய் இருப்பதாக கண்டறிந்தபிறகு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் காசநோய்க்கான மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான நோயாளிகள் இதை பின்பற்றாமல் இருப்பதால் நோயின் வீரியம் அதிகரித்துவிடும்.

நோயாளிகளில் பலர் பல்வேறு காரணங்களால் மாத்திரையை சரிவர எடுத்துக்கொள்வதில்லை. ஒரு மாதமோ, இரண்டு மாதமோ சாப்பிட்டதும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியும். உடனே நோய் சரியாகி விட்டதாக நினைத்து மாத்திரையை நிறுத்தி விடுகிறார்கள். சிலர் வீடு மாறிப் போய்விட்டேன், மாத்திரை சாப்பிட போர் அடிக்கிறது போன்ற அற்ப காரணங்களைக் கூட சொல்கிறார்கள். DOTS (Directly Observed Treatment, Short-course) எனப்படும் காசநோய் மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

மருத்துவர் பரிந்துரைக்கிற கால அளவை விட்டு மாத்திரையை சாப்பிடாமல் இருந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் காசநோய் வரும். ஆனால், இரண்டாவது முறை நோயின் வீரியம் அதிகமாக இருக்கும். பதினெட்டு முதல் இருபத்தி நான்கு மாதங்களுக்கு அதிக வீரியமுள்ள மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி வரும். தினமும் ஒரு ஊசி போடுவது கட்டாயம். நிலைமையை அவ்வளவு மோசமாக்க வேண்டுமா என்று காசநோயாளிகள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். காசநோய் நுரையீரலை மட்டும்தான் தாக்கும் என்றில்லை. முடி, நகத்தைத் தவிர வேறு எந்தப் பகுதியையும் தாக்கலாம்.'' 

மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவானது உடலின் எந்தப் பகுதியையும் தாக்க வாய்ப்புள்ளது. நுரையீரலை தாக்கினால் அது பல்மனரி டியூபர்குளோசிஸ் (Pulmonary tuberculosis) என்று சொல்லப்படுகிறது. மற்ற பகுதிகளைத் தாக்கினால் அது நான் பல்மனரி டியூபர்குளோசிஸ் (Non Pulmonary tuberculosis). கழுத்தில் நெறிகட்டுவதுகூட காசநோயாக இருக்கலாம். காசநோய் வருவதற்கு முக்கியமான காரணம் பாக்டீரியாதான். மது அருந்துவது, புகைபிடிப்பது போன்றவற்றை அளவுக்குமீறி செய்வதால் நுரையீரல், கல்லீரல் போன்றவை பாதிக்கப்படுவதால் இந்த பாக்டீரியா மிக எளிதாக அந்தப் பகுதிகளைத் தாக்கிவிடுகிறது.''

நோயின் தீவிரம் பற்றி பேசிய நளினி ஜெயந்தி, காசநோயாளிகள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளையும் சொன்னார்.

“காசநோயாளிகள் பொது இடங்களில் வெளிப்படையாகத் தும்முகிறார்கள், இருமுகிறார்கள். இது தவறான செயல். காதலையும், இருமலையும் மறைக்க முடியாது என்பார்கள். அதனால் இருமாமலும் இருக்கமுடியாது. இருமும்போது கைக்குட்டை வைத்துக்கொள்ளவேண்டும். வீட்டில் ஒருவருக்கு காசநோய் வந்தால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களை சோதனை செய்துகொள்ள வேண்டும். மிகச் சிறிய குழந்தைகளுக்குக்கூட நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள் உள்ளன.”

காசநோயாளிகள் தினத்தில் நல்லதொரு விழிப்பு உணர்வு தகவலைப் பகிர்ந்து கொண்ட டாக்டர் நளினி ஜெயந்திக்கு நன்றி தெரிவித்த நாம், விடைபெறுவதற்கு முன் ‘காசநோய் தினத்தில் என்ன மெசேஜ் சொல்ல விரும்புகிறீர்கள்' என ஹென்றியிடம் கேட்டோம்.

“முன்னாடில்லாம் குடிச்சுக்கிட்டே இருப்பேன் சார். குடிக்கும்போதெல்லாம் தம் அடிப்பேன். அதனால்தான் இப்படி ஆயிடுச்சு. இந்த நோய்க்கு புகைதான் சார் மெயின் ரீசன். இங்க இருங்கறவங்ககிட்ட எல்லாம் தம் அடிக்காதீங்க அண்ணேன்னுதான் டெய்லி சொல்லிட்டிருக்கேன். காசநோய் வர்ற மாதிரி தெரிஞ்சா உடனே ஆஸ்பத்திரிக்கு வந்து செக் பண்ணிக்கணும். மருந்து மாத்திரையை தவறாமச் சாப்பிடணும். மாத்திரையைத் தவறாம சாப்பிட்டா இது நோயே இல்ல சார். சீக்கிரம் சரியாயிடும். இல்லைன்னா என்னய மாதிரி கஷ்டப்படவேண்டி வரும். குடி, தம் எல்லாம் விட்டுட்டேன். இனி நல்லா வாழணும் சார்'' என்ற ஹென்றியின் கண்களில் பெரிய நம்பிக்கை தென்பட்டது. 

இந்த ஆண்டு உலக காசநோய் தினத்துக்கான முழக்கமாக ``காசநோயை ஒழிக்க ஒன்றுபடுவோம் (Unite to End TB)'' என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஹென்றிக்கு வந்திருக்கும் நம்பிக்கையை காசநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடம் எடுத்துச் செல்வோம் என்பதே இந்த நாளில் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி. 

- அகில் குமார்.

படங்கள்- ப.சரவணகுமார்


இன்று காசநோய் தினம்

1882 காலகட்டம் அது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் காசநோய் பரவிக்கொண்டிருக்கிறது. ஏழு பேரில் ஒருவருக்கு காசநோய் பாதித்து இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மார்ச் 24, 1882 தேவதூதனைப்போல் தனது ஆராய்ச்சி முடிவை வெளியிடுகிறார் ராபர்ட் காக் (Robert Koch). காசநோயைக் குணப்படுத்தும் வழிகளைத் தெரிந்துகொள்ளும் மிக முக்கியமான ஆராய்ச்சி அது. மனித குலம் மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனும் காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவிலிருந்து காக்கப்பட்ட நாள் அது. அன்று தொடங்கி
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் உலக காசநோய் தினம் கொண்டாடப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு