Published:Updated:

முதுகு வலி... கழுத்து வலி... மூட்டு வலி... விரட்டியடிக்கும் ஃபுட் மசாஜ்! #FootMassage

முதுகு வலி... கழுத்து வலி... மூட்டு வலி... விரட்டியடிக்கும் ஃபுட் மசாஜ்! #FootMassage
முதுகு வலி... கழுத்து வலி... மூட்டு வலி... விரட்டியடிக்கும் ஃபுட் மசாஜ்! #FootMassage

`ஏ.. கொலுசே.. நீ அவள் பாதம் தொட்டதால் என் கவிதைக்கும் கருவானாய்...'. அழகான கவிதை வரி இது.
அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் மெல்லிய இறகும்தான் உலகிலேயே மிக மெல்லியவை. அவை பட்டால்கூட அவள் பாதங்கள் நெருஞ்சிமுள் தைத்தது போலப் புண்பட்டு ரத்தம் வடிக்குமாம்... பெண்களின் பாதங்களை இப்படி மிகைப்படுத்தி எழுதுபவர்களும் உண்டு.
மொத்தத்தில் பூக்களோடு ஒப்பிடும் அளவு மென்மையானவை பாதங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்வதில் நமக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அத்தகைய பாதங்களை மென்மைத் தன்மையோடு உடல் பாதிப்புகளுக்கு தீர்வாகவும் பயன்படுத்த முடியும் என்றால் அதனை மேற்கொள்ள நாம் சிந்திக்கவே மாட்டோம். அப்படி நாம் செய்கின்ற ஃபுட் மசாஜ் என்ற பாதத்துக்கு அழுத்தம் கொடுக்கும் சிகிச்சை முறை பற்றி நம்மிடையே விளக்கமாகப் பகிர்ந்து கொள்கிறார், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ராஜா.

பாதங்கள் பல நரம்புகள் சந்திக்கும் ஓர் இடம். ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு உறுப்புடனும் சம்பந்தப்பட்டவை. எனவே அந்தந்த நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்குவதன்மூலம் வலி மற்றும் நோய்களுக்கு தீர்வு காண முடியும். முதலில் பாதங்களை இளஞ்சூடான நீரைக் கொண்டு கழுவி, ஒவ்வொரு காலாக சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, ஒரு காலில் சிகிச்சை அளிக்கும்போது சருமம் வறண்டு போய்விடாமல் இருக்க மறுகாலில் துணியைக் கொண்டு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் பாதங்களில் இருக்கும் நரம்புகளுக்கு கைவிரல்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மன அழுத்தம், ரத்த அழுத்தம், முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலி என உடலின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்கு பாத அழுத்த சிகிச்சை தீர்வாக அமையும்.

பாத அழுத்த சிகிச்சையானது நமது முன்னோரால் பின்பற்றப்பட்ட ஒரு அற்புதமான சிகிச்சை முறை. இது இக்கால கட்டத்தில் அறிவியல்ரீதியாக இயற்கை மருத்துவ முறையில் சில உடல் மற்றும் மனரீதியான உபாதைகளை எளிய முறையில் தீர்க்கும் துணை சிகிச்சையாக பயன்படுகிறது. இந்த சிகிச்சையானது பயிற்சி பெற்ற மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளரின் உதவியுடன் நம் பாதத்தில் உள்ள தானியங்கிரீதியான புள்ளிகளை (Refloxology point) அழுத்தி உடலின் உள்ளுறுப்புகளின் செயல்களைத் தூண்டும் முறையாகும்.

நமது உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் முடிவடையும் இடம் உள்ளங்கை, உள்ளங்கால். உள்ளங்காலில் நாம் கொடுக்கும் சரியான மற்றும் சீரான அழுத்தமானது அந்த நரம்புகள் செல்லும் பகுதியில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் சீராக்குகிறது. அது மட்டுமல்லாமல் மூளையில் சுரக்கும் மகிழ்ச்சி இயக்கு நீர் (Happy Hormone Endorphin) தேவையான அளவு சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தத்தால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு தீர்வு ஏற்பட உதவுகிறது.

பாத அழுத்த சிகிச்சைமுறை பற்றிப் பார்ப்போமா...

அழுத்துதல்:
நமது கை விரல்களைக் கொண்டு அனைத்து உள்ளங்கால் பகுதியிலும் அழுத்தவும்.

தேய்த்தல் :
சிறிது எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெயைக் கொண்டு பாதம் முழுவதும் சற்று ஆழமாகத் தேய்த்து விடவும்.

வருடுதல்:
நமது பாதத்தை மொத்த கைகளைக்கொண்டோ அல்லது உள்ளங்கையாலோ வருடி விடவும்.

கணுக்கால் பயிற்சி:
இடது மற்றும் வலது புறமாக சாய்த்தல்.
கடிகாரம் மற்றும் எதிர்க் கடிகார திசையில் சுழற்றுதல்.

பயன்கள்:
பாத அழுத்த சிகிச்சை அளிப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது தூக்கத்தைத் தூண்டுவதோடு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தை சீராக்குவது, ஹார்மோன் பிரச்னைகளைத் தீர்ப்பது போன்ற செயல்களைச் செய்கிறது. முக்கியமாக, கர்ப்பிணிப் பெண்களின் கால்களில் உள்ள இறுக்கத்தைக் குறைக்கிறது, இந்த பாத அழுத்த சிகிச்சை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், தலைவலி, உடல் வலி, அசதி, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து விடுதலை அளிக்கிறது.

பயன்கள் பல தந்தாலும் இந்தச் சிகிச்சையை சிலர் மேற்கொள்வது ஏற்புடையதல்ல. அதாவது, காய்ச்சல், ரத்தக் கசிவுடைய காயம் இருப்பவர்கள், அறுவை சிகிச்சைக்கான காரணிகள் உள்ளவர்கள் மற்றும் தாயின் வயிற்றில் கரு உண்டாகி மூன்று மாதங்கள் முடிவடையாதவர்களும் இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளக் கூடாது. பாத வெடிப்பு, கால் ஆணி, ரத்த நாள அடைப்பு உள்ளவர்களும் பாத அழுத்தச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.

இந்த சிகிச்சைகளை காலையிலோ அல்லது மாலையிலோ எப்போது மேற்கொண்டாலும் வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் சிகிச்சையின் முழு பலனையும் நாம் பெற முடியும்.

- வித்யா காயத்ரி (மாணவ பத்திரிகையாளர்)