Published:Updated:

உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்! #HealthTips

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!

எப்சம் உப்பு (Epsom Salt), நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல.

ப்சம் உப்பு (Epsom Salt), நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவை. இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே `உப்பு’ எனப்படுகிறது.  மளிகைக்கடைகளில் கிடைக்காது; மருந்துக் கடைகளில்தான் கிடைக்கும்.  இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டறியப்பட்டதால், `எப்சம் உப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கணுக்கால் வலி முதல் மனஅழுத்தம் வரை பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது இந்த உப்பு. இதன் 8 மருத்துவப் பலன்கள் குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவர் குமரேசன் விவரிக்கிறார் இங்கே...

கணுக்கால் வலி
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எப்சம் உப்பைக் கலந்து முழங்கால் வரை நீர் படும்படி முக்கி வைக்கவேண்டும். இதனால் கணுக்கால் வலி குறையும். தலைவலிக்கும் இது சிறந்த மருந்து. இதைத் தொடர்ந்து செய்தால்,  உடல் நரம்புகள் புத்துணர்வு அடைந்து நல்ல தூக்கம் கிடைக்கும். 

முகப்பரு
நமது முகத்தில் மிகச் சிறிய துளைகள் உள்ளன. இவற்றில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். அரை டீஸ்பூன் எப்சம் உப்பை முகத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் க்ரீமில் கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும். பிறகு இதைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து. 

மனஅழுத்தம்
மூளையில் செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது நமது மனநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவும். இதைத் தேவையான அளவு உற்பத்தி செய்ய மக்னீசியம் தேவை. அதிகமான அட்ரினலின் (Adrenaline) சுரப்பு மற்றும் மனஅழுத்தத்தால் மக்னீசியம் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். சிறிது எப்சம் உப்பை நீரில் கலந்து குளித்தால், இந்தப் பிரச்னையின் தீவிரம் குறையும். 

தேனீக் கடி
தேனீக் கடி, கொசுக் கடி போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தை எப்சம் உப்பு குறைக்கும். இரண்டு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலக்கவேண்டும். இந்தக் கரைசலில் ஒரு பருத்தித்துணியை ஊறவைத்து அதைத் தேனீக் கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதுநேரம் வைத்து ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறையும்.  

வறண்ட உதடுகள்
ஒரு டீஸ்பூன் எப்சம் உப்பை  பெட்ரோலியம் ஜெல்லியில் கலந்துகொள்ள வேண்டும். இதை உதட்டில் தடவிவந்தால், உதடு மென்மையாக மாறும். வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும். 

முடிப் பாதுகாப்பு
சிறிது எப்சம் உப்பை ஹேர் கண்டிஷனரில் கலந்து தலைக்குத் தேய்க்கவேண்டும். இதை இருபது நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், முடியில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறும். உச்சந்தலை தூய்மையாகும். முடி வளர்ச்சி அதிகமாகும். 

வேனல்கட்டி
எப்சம் உப்பு, வீக்கத்துக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது. எனவே, இது வேனல்கட்டியைப் போக்க உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை ஒரு கப் நீரில் கலந்து வேனல்கட்டி உள்ள இடங்களில் தெளித்தால், பாதிப்புகள் குறையும். 

கால் வெடிப்பு
அரை கப் எப்சம் உப்பை இளஞ்சூடான ஒரு பக்கெட் நீரில் கலந்துகொள்ள வேண்டும். இதில் பத்து நிமிடங்கள் காலை முக்கி வைத்திருந்தால், கால் அரிப்பு, கால் துர்நாற்றம், கால் வெடிப்பு போன்றவை நீங்கும். 

தினமும் குளிக்கப் பயன்படுத்தும் துண்டை இரவில்  சிறிது எப்சம் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் முக்கி வைத்தால், அடுத்தநாள் காலையில் மென்மையாக மாறி இருக்கும்; இதைச் செடி, கொடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம்; குளியலறை டைல்ஸ்களைச் சுத்தமாக்கும்... இப்படி வேறு பல பயன்களையும் கொண்டிருக்கிறது எப்சம் உப்பு. மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த உப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என அறிந்துகொண்டு, முறையாகப் பயன்படுத்துவது நல்லது; ஆரோக்கியமானது. 

- அகில் குமார்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு