Published:Updated:

நம்புங்கள்... இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுளைக் கூட்டும்... சாக்லேட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நம்புங்கள்... இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுளைக் கூட்டும்... சாக்லேட்!
நம்புங்கள்... இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுளைக் கூட்டும்... சாக்லேட்!

நம்புங்கள்... இதயம் காக்கும், புற்றுநோய் தடுக்கும், ஆயுளைக் கூட்டும்... சாக்லேட்!

சாக்லேட் ... நினைத்தாலே நாவிலும் மனத்திலும் ஊறும் சுவை. எல்லோருக்கும் இஷ்டமான ஒன்று. குறிப்பாக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஃபேவரைட். ஒரு குழந்தை அழுது, அடம்பிடித்து, ஆர்ப்பாட்டம் செய்கிறதா? பெரும்பாலும் அது சாக்லேட்டுக்காகத்தான் இருக்கும். இவ்வளவு ஏன்... பிறந்த நாள், திருமண நாள், முக்கிய வெற்றித் தருணங்கள் என  எல்லா கொண்டாட்டங்களிலும் இதற்கெனத் தனித்துவமான, தவிர்க்க முடியாத இடம் உருவாகிவிட்டது.   

குழந்தை, சிறுவர்கள் மட்டுமல்ல... காதலன் - காதலி, பெற்றோர்கள் - குழந்தைகள்... என அன்பைப் பறிமாறிக்கொள்ளும் அடையாளமாக சாக்லேட் இருக்கிறது என்றால், அது மிகையில்லை.  இப்படி, இதன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

அதேநேரத்தில், `சாக்லேட் உடலுக்கு நல்லதல்ல. குழந்தைகளின் பற்களைச் சொத்தையாக்கும்; உடல் எடையைக் கூட்டும்’ என்பது பலரின் கருத்து. இதனாலேயே இதன் மீது ஈர்ப்பு இருந்தாலும், அதைக் கடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் பலருக்கும் ஏற்படுகிறது. ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகள் இந்தக் கருத்தை மறுக்கின்றன. கூடவே, சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியல் இடுகின்றன. ‘என்னது..! சாக்லேட் சாப்பிடுறது ஆரோக்கியமானதா?’ என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? நிச்சயமாக. இது நல்லது எனப் பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, டார்க்  சாக்லேட் நமக்கு அள்ளித் தரும் பலன்கள் ஏராளம். ஆனால், இதில் சாப்பிடும் அளவும் முக்கியம். அதாவது, ஒரு நாளைக்கு ஒரு துண்டு தான் சாப்பிடவேண்டும். அதைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

சருமத்தைப் பாதுகாக்கும்!

இதைச் சாப்பிடுவதால், முகப்பருக்கள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படும் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் டார்க் சாக்லேட், சருமத்துக்கு நன்மை தரக்கூடியது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்  சருமப் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் தன்மைகொண்டது. சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும். 
பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்!

கனடாவில்  மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் டார்க் சாக்லேட் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. 

இதய பாதிப்புகளைக் குறைக்கும்!

இது, இதயத்துக்கு ஏராளமான பலன்களைத் தரக்கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இதனால்,  ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். தினமும் 5 கிராம் (சின்ன துண்டு)  என்ற அளவில் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் அது, ரத்தம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கும்.

மூளைக்கு வலிமை தரும்!

டார்க் சாக்லேட்டில் ‘எபிகேட்டச்சின்’  (Epicatechin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது மூளை செல்களைப் பாதுகாக்கக்கூடியது. பக்கவாதத்தால் ஏற்படும் மூளை பாதிப்புகளில் இருந்தும் காக்கும் தன்மைகொண்டது. இதில் உள்ள தாவர ஊட்டச்சத்தான பிளாவனோல்ஸ் (Flavanols) வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியைப் போக்கும். அதோடு விபத்து நிகழும்போது,  மூளையில் ஏற்படும் காயங்கள் குணமாவதற்கு இதில் உள்ள ஆன்டிஇன்ஃப்ளாமேட்டரி பொருட்கள் உதவும்.

உடல் எடையைக் குறைக்கலாம்!

உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக இதை சாப்பிடுவது சிறந்தது. இதனால், நம் உடலில் இருக்கும்  ஹார்மோன்கள் மூலம் `வயிறு நிரம்பிவிட்டது' என்ற செய்தி மூளைக்கு அனுப்பப்படும். இதன் காரணமாக, குறைந்த அளவு உணவையே சாப்பிடுவோம்.  உடல் எடையைக் குறைக்க டயட் மேற்கொள்ளுபவர்களுக்கு இது சிறந்தது.

கொழுப்பைக் குறைக்கும்!

இது, உடலில் உள்ள  கெட்ட கொழுப்பான எல்டிஎல்-ஐ (Low-density lipoprotein (LDL) குறைக்க உதவுகிறது. அதோடு உடலில் `நல்ல' கொழுப்பான ஹெச்.டி.எல் (High-density lipoproteins (HDL))அதிகரிக்கவும் உதவுகிறது.

தாதுச் சத்துகள் ஏராளம்!

இதில் உடலுக்குத் தேவையான துத்தநாகம், பொட்டாசியம், செலினியம் போன்ற அத்தியாவசியமான தாதுச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது, நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவுகிறது. இதன் காரணமாக, ரத்த சிவப்பு அணுக்கள் நம் நுரையீரலுக்குத் தடையின்றி ஆக்சிஜனை எடுத்துச் செல்ல முடிகிறது.  

மனஅழுத்தம் போக்கும்!

சாக்லேட் சாப்பிடுவதால் மனநிலையை மேம்படுத்த முடியும். இதில் மனஅழுத்தத்தைக் குறைக்கும் செரடோனின் (Serotonin) அதிக அளவு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தைக்  குறைக்க தினமும் குறைந்த அளவில் டார்க் சாக்லெட் சாப்பிடலாம்.

புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும்!

இதில் சேர்க்கப்படும் கோகோவில் உள்ள  ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடியது. இது, புற்றுநோய் செல்கள் பரவுவதைத் தவிர்க்கவும் உதவும்.

ஆயுளைக் கூட்டும்!

வாழ்க்கை முழுவதும் வாரம் ஒரு முறையாவது சாக்லேட் சாப்பிடுகிறவர்கள், இதை சாப்பிடாதவர்களைவிட சுமார் இரண்டு வருடங்கள் அதிகமாக வாழ்கின்றனர் என ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன.

கவனம்:

சாக்லேட்டில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதாவது ஒரு துண்டு. இதைச் சாப்பிட்டவுடன், தண்ணீரால் வாய் கொப்பளிப்பது நல்லது. இதன் மூலம் பற்சொத்தை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

- ஜி.லட்சுமணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு