Published:Updated:

காக்க காக்க கல்லீரல் காக்க! #WorldLiverDay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காக்க காக்க கல்லீரல் காக்க! #WorldLiverDay
காக்க காக்க கல்லீரல் காக்க! #WorldLiverDay

காக்க காக்க கல்லீரல் காக்க! #WorldLiverDay

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிறந்த நாள், திருமண நாள், காதலர் தினம்... என நினைவுகூரவும், மகிழ்ந்து கொண்டாடவும் ஏராளமான தினங்கள் உள்ளன. உலக சுகாதார நிறுவனமும், பல நாட்டு அரசுகளும், சில தனியார் அமைப்புகளும் அறிவுறுத்தும் சில தினங்கள் நம் ஒவ்வொருவருக்குமானவை; நம் எல்லோரின் ஆரோக்கியம் குறித்த அக்கறையில் விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுபவை. அவற்றில் ஒன்றுதான் இன்று நாம் அனுசரிக்கும் உலக கல்லீரல் தினம்! 

`இன்னும் ரெண்டு நாளைக்குக் கடை லீவாம்ப்பா... வாங்கி ஸ்டாக் வெச்சுக்கோ!’ என்று கேலியாகப் பேசினாலும், கல்லீரலின் முதலாவதான, முக்கியமான எதிரி மது. 1983-ம் ஆண்டில் தமிழகத்துக்குள் டாஸ்மாக் அடி எடுத்து வைத்தது. இன்றைக்கு தமிழ்நாட்டில் மட்டும் கோடிக்கணக்கானவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டார்கள். மதுப்பழக்கத்தால், கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், மரணத்தைத் தழுவுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது.  லட்சக்கணக்கானவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது; அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான மருத்துவர்களோ மருத்துவ வசதியோ நம் தமிழ்நாட்டில் இல்லை என்பதும் வருத்தத்துக்கு உரிய செய்தி. 

மிக எளிமையாக கல்லீரலின் செயல்பாட்டைப் பற்றிப் பார்ப்போமா? நாம் உண்ணும் உணவு செரிமானமாக உதவுகிறது; அதில் இருந்து சக்தியை சேமித்துவைக்கிறது; கொழுப்பை உற்பத்தி செய்யும். குளுக்கோஸை தேவையானபோது வெளியிடும்; சேமித்தும் வைக்கும். நம் ரத்தத்தில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சுருக்கமாகப் பார்த்தால் `ப்பூ... இவ்வளவுதானா?’ என்று தோன்றும். இது மிகப் பெரிய வேலை. இது தடைப்பட்டால், உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் நின்றுபோக வாய்ப்பு உண்டு. 

நம் உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வொருவிதத்தில் தனித்துவம் மிக்கவை. உடல் உள்ளுறுப்புகளில் சிறுநீரகமோ, இதயமோ பாதிக்கப்பட்டால் இன்றைக்கு மாற்று அறுவைசிகிச்சை சாத்தியம். விழித்திரை பாதிப்படைந்தால்கூட மாற்றுவதற்கான மருத்துவத் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், நம் உடல் உறுப்புகளில் பலவற்றுக்குத் தன் திறனை மீறி வளரும், செயல்படும் தன்மை குறைவு. அது கல்லீரலுக்கு மட்டும்தான் உண்டு. 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டால்கூட அது சீராகத் தன் பணியைச் செய்துகொண்டே இருக்கும். அதில் இருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துவிட்டால்கூட, சிறிது நாள்களில் தானே வளர்ந்துவிடும். ஆனால், இந்தக் கல்லீரலை நாம் கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை. அதற்கும் ஓர் அளவு உண்டு. கல்லீரல் பழுதடையும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மாற்றுக் கல்லீரல் பொறுத்துவதென்பது சாமானியர்களால் முடியாத காரியம். பல லட்ச ரூபாய் செலவாகும் என்பதே இதற்குக் காரணம். 

தொடர் மதுப்பழக்கத்துக்கு ஆளானவரா? அவருக்கு கல்லீரலில் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதைத்தான் `ஹெபடைட்டிஸ்’ (Hepatitis) என்கிறார்கள். இந்த வீக்கத்துக்கு என்ன காரணம்? ஹெபடைட்டிஸ் வைரஸ் ஏ முதல் இ வரை காரணமாகலாம். இவற்றிலும் ஹெபடைட்டிஸ் பி-யும் சி-யும்தான் மிக மோசமானவை; சரியான நேரத்தில் கவனிக்காமல்விட்டால் உயிரைப் பலி வாங்கக்கூடியவை. மற்ற ஹெபடைட்டிஸ் பிரிவு வைரஸ்கள் அதிகபட்சமாக மஞ்சள்காமாலை நோயை ஏற்படுத்திவிடும். கண்ட நேரத்தில், கண்ட சாப்பாடு, சுகாதாரமற்ற தண்ணீர் பருகுவது இவைதான் இந்த வைரஸ் தாக்குதலுக்குக் காரணமாகின்றன. சுத்தமான தண்ணீர், ஆரோக்கியமான உணவு இவற்றில் கவனம் செலுத்தினாலே போதும்... இவற்றைத் தவிர்த்துவிடலாம். 

ஹெபடைட்டிஸ் பி-யும் சி-யும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எப்படிப் பரவும் தெரியுமா? உடலுறவு மற்றும் ரத்தம் மூலமாக! அதிலும் ரத்தம் மூலமாகப் பரவுவதுதான் அதிகம். ஒருவர் பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துதல், ரத்த தானம் இவற்றின் மூலமாகக்கூட பரவும். கர்ப்பிணிகள்தான் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். கருவுற்ற தாய்க்கு இந்தப் பிரச்னை இருந்தால், குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, கருவுற்ற பெண்கள் ஹெபடைட்டிஸ் ரத்த பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை செய்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த ஹெபடைட்டிஸ் பி-யும் சி-யும் எல்லோரையுமே தாக்கும் தன்மைகொண்டவை. சரியான நேரத்தில், முறையான சிகிச்சை செய்துகொள்ளாவிட்டால், கல்லீரலில் புற்றுநோயைக்கூட ஏற்படுத்திவிடும். 

இந்தப் பாதிப்புக்கு மூல காரணமாக இருப்பது குடிப்பழக்கம். மது அருந்தும்போது சாப்பிடும் சைடு டிஷ்கள், கண்ட உணவுகள், கலக்கப்படும் குளிர்பானம், தண்ணீர் எல்லாமே ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று ஏற்படக் காரணமாகலாம். உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டால், நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றுகிறார்கள்; ஆனால், மக்கள் வாழும் பகுதியில் புதுக்கடை திறக்கிறார்கள். போராடினால், அடி உதை, சிறைவாசம். இன்று தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு மதுக்கடைகளை ஒழிப்பது மட்டுமல்ல; மனமாற்றமும்தான். வீட்டில் உள்ளவர்கள் மதுப்பழக்கத்துக்கு ஆளானவர்களுடன் இணைந்து கவுன்சலிங், சிகிச்சை என அனைத்துக்கும் ஒத்துழைக்க வேண்டும். அது அவர்கள் அந்தத் தீயப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும். அதுதான் கல்லீரலுக்கு நல்லது!

- பாலு சத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு