Published:Updated:

ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேறு காரணிகளை அதிகரிக்கும் 8 உணவுகள்!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேறு காரணிகளை அதிகரிக்கும் 8 உணவுகள்!
ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேறு காரணிகளை அதிகரிக்கும் 8 உணவுகள்!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைப் பேறு காரணிகளை அதிகரிக்கும் 8 உணவுகள்!

டல் எடை அதிகரிப்பு, முடி உதிர்வு, மனஅழுத்தம், ஆண்மைக்குறைவு, கவலை, எரிச்சல், களைப்பு, வியர்வை, அதீதப் பசி, மறதி, ஒற்றைத் தலைவலி, பாலியல் உறவில் ஈடுபாடின்மை, கருவுறாமை இவை அத்தனைக்கும் ஒரு காரணம்... ஹார்மோன் குறைபாடு. இந்தக் குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் மனித உடலை பாதிப்பவை. அதோடு, நம் உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், திசுக்களின் செயல்பாடு, பாலியல் செயல்பாடு, இனப்பெருக்கம், மனநிலை ஆகியவற்றையும் கட்டுப்படுத்துபவை. 

`எல்லாம் சரி... நானும் மாசக் கணக்குல மாத்திரை சாப்பிட்டுட்டுதான் இருக்கேன். சரியாக மாட்டேங்குதே...’ என்று வருத்தப்படுபவரா நீங்கள்? ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்; இதைச் சரிசெய்ய மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டால் மட்டும் போதாது. சரியான வாழ்வியல் முறையும், ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஹார்மோன் குறைபாட்டைச் சரிசெய்யும் 8 உணவுகள் இங்கே... 

ஆளி விதை 
சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஆளிவிதைப் பொடியை பழச்சாறு, மோர், வெதுவெதுப்பான நீர் ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம். இதில் நார்சத்தின் அளவு அதிகம் என்பதால், செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும். கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, ஹார்மோன் குறைபாட்டால் உண்டாகும் எடை அதிகரிப்பையும் தடுக்கும். இதிலுள்ள ஒமேகா -3 அமிலம் இதயம் தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். 


எள் 
எள்ளில் பைடோஈஸ்ட்ரோஜென்கள் (Phytoestrogens) நிறைந்துள்ளதால், இது மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சீராக்கும். ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், கனிமங்கள், நார்சத்து போன்ற சத்துக்கள் அனைத்தும் ஒரே ஒரு டீ-ஸ்பூன் எள்ளில் கிடைத்துவிடும். சூப், சாலட் ஆகியவற்றில் இதைச் சேர்த்து உண்ணலாம். எள் எண்ணெயைச் (நல்லெண்ணெய்) சமையலுக்குப் பயன்படுத்தினால் சிறந்த பலன்களைப் பெறலாம். எள் துவையல் செய்து சாப்பிடலாம். 

சுண்டல், பட்டாணி மற்றும் பருப்பு வகைகள் 
இறைச்சியில் புரதம் மற்றும் நார்சத்தின் அளவு அதிகமாக இருக்கும். இறைச்சி சாப்பிட பிடிக்காதவர்கள், அதற்கு மாற்றாகச் சுண்டலை எடுத்துக்கொள்ளலாம். சைவப் பிரியர்களுக்கு இது சிறந்த சாய்ஸ். 

பருப்பு வகைகளில் நல்ல கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், பசியைத் தணிக்கும். ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு சீராக இருக்கவும் இவை உதவுகின்றன. 

பட்டாணியில் மக்னீசியம், இரும்பு, வைட்டமின் சி, புரதம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இனப்பெருக்கச் செயல்பாட்டை மேம்படுத்தும். மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைச் சரிசெய்யும். 
சுண்டல், பட்டாணி, பருப்பு வகைகள் மூன்றுமே ஹார்மோன்கள் சமநிலையில் செயல்பட உதவுபவை. 

அவகேடோ 
நார்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் இ, பி மற்றும் ஃபோலிக் அமிலம், நல்ல கொழுப்பு ஆகியவை நிறைந்துள்ளன. யாராக இருந்தாலும், முற்றிலுமாகக் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லதல்ல. நம் உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. அது நம் ஹார்மோன்களைச் சமநிலையில் வைத்திருப்பதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். அதற்கு அவகேடோ உதவும். 

முட்டை 
முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்பட வைட்டமின்கள் ஏ, டி, இ, பி 2, பி 6, பி 9 மற்றும் சில கனிமங்கள் இனப்பெருக்கச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன; ஹார்மோன்களைச் சமநிலையில் வைத்திருக்கத் துணைபுரிகின்றன; ஆரோக்கியமான சருமம் கிடைக்க வழிசெய்கின்றன. இதிலுள்ள கொலைன் (Choline) வைட்டமின் மற்றும் அயோடின் தைராய்டு, ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுபவை. 

வெண்ணெய் / பசு நெய் 
இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியக் கூறுகளாக விளங்குகின்றன. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. இவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, உடல்நலத்தைப் பாதிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடும். 

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள் 
புரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ், வெள்ளரி, சிவப்பு / வெள்ளை வெங்காயம், தக்காளி மற்றும் கேரட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். 


பட்டை, மஞ்சள், சீரகம், பூண்டு, இஞ்சி இவற்றிலும் ஹார்மோனைச் சமநிலைப்படுத்தும் தன்மை இருக்கிறது. 

தவிர்க்கவேண்டிய உணவுகள்... 
எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பிராய்லர் சிக்கன், வெள்ளைச் சர்க்கரை, மது, கெஃபின் நிறைந்த பானங்கள், கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகளை ஹார்மோன் குறைபாடுகள் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

- கி.சிந்தூரி


 

அடுத்த கட்டுரைக்கு