Published:Updated:

சிறுநீர் பிரச்னை, தாகம், வயிற்றுக் கடுப்பு... விரட்டியடிக்கும் வெள்ளரி!

சிறுநீர் பிரச்னை, தாகம், வயிற்றுக் கடுப்பு... விரட்டியடிக்கும்  வெள்ளரி!
சிறுநீர் பிரச்னை, தாகம், வயிற்றுக் கடுப்பு... விரட்டியடிக்கும் வெள்ளரி!

`வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா! என்னைப் பார்க்காமப் போறாளே சந்திரிக்கா' 

`வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ...' - திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்வரிகள் இவை. 

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்... இது எழுத்தாளர் இராய.செல்லப்பாவின் சிறுகதைத்தொகுதி. இன்னும் பல சிறப்புகளைக்கொண்ட வெள்ளரிக்காயின் தாவரவியல் பெயர் Cucumis Sativus. படரும் கொடி வகையைச்சேர்ந்த வெள்ளரியின் தாயகம் இந்தியா. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாவரமான இது உலக அளவில் பல இடங்களில் விளைவிக்கப்படுகிறது. இமயமலைப்பகுதியில் விளையக்கூடிய சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும், 6 அங்குலம் அகலும் உள்ளது. ஜமைக்கா நாட்டில் விளையக்கூடிய வெள்ளரி எலுமிச்சம்பழ அளவே காணப்படும். தென் தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் கிடைக்கும் வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடச் சுவையாக இருக்கும். அதிலும் சாத்தூர் வெள்ளரிப்பிஞ்சு இன்னும் சிறப்பு.

ஆந்திரச் சமையலில் காரம் அதிகமாகச் சேர்ப்பார்கள். ஆகவே அவர்களின் சமையலில் வெள்ளரிக்காய், பாசிப்பருப்பு சேர்ந்த பச்சடி நிச்சயம் இடம்பிடிக்கும். இந்த பச்சடியைச் சாப்பிடுவதால் அது காரத்தைக் கட்டுப்படுத்துவதோடு சாப்பாட்டின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டிய தேவையைக் குறைத்துவிடுகிறது.

வெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், பழம், வேர் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால் தாகம் தணிப்பதோடு, நாவறட்சியைப் போக்கி பசியை உண்டாக்கக்கூடியது. மேலும் சிறுநீர் பிரிவைத் தூண்டுவதோடு இரைப்பையில் ஏற்படும் புண், மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. மலச்சிக்கலுக்காக ஏதேதோ மருந்து சாப்பிடுகிறவர்கள் தினமும் இரண்டு வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் குடல் சுத்தமாகி விடும். உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது என்பதால் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாகிறது. வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வெள்ளரிச்சாறு அருந்தி வந்தால் நாளடைவில் குணம் தெரியும். 

வெள்ளரியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், குளோரின் போன்ற சத்துகள் உள்ளன. மேலும் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. பொட்டாசியம் மட்டுமல்லாமல் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த வெள்ளரி ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதோடு வாய் துர்நாற்றத்தைப் போக்கக்கூடியது. கூடவே பல் ஈறுகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. இன்சுலினை சுரக்கச்செய்யும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கியை (ஹார்மோன்) கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளரி சிறந்த மருந்தாகிறது.

கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்தால் சிறுநீர் துவாரங்களில் ஏற்படக்கூடிய அரிப்பு, வலி போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்றையும் போக்கக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கீல்வாதம் தொடர்பான கோளாறுகளை குணமாக்குவதில் வெள்ளரி சிறப்பாக பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. வீக்கம், நீர்த்தாரை நோய்களை குணமாக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது. வெள்ளரி இலைகளை காய வைத்து சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் தொண்டை தொடர்பான நோய்கள் விலகும். வெள்ளரி விதையை அரைத்து 5 பங்கு நீர் சேர்த்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் நீர் எரிச்சல், நீரடைப்பு, கல் அடைப்பு, சதை அடைப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். ஆண்மைக்குறையைப் போக்க வெள்ளரி விதை மருந்தாகிறது. பாதாம், பிஸ்தா, அக்ரோட் உள்ளிட்ட பருப்புகளுடன் வெள்ளரி விதை சேர்த்து தயாரிக்கப்படும் பொடி ஆண்மைப்பிரச்னைக்கு தீர்வு தரும். குழந்தைகள் சிறுநீர் கழிக்க சிரமப்படும்போது வெள்ளரி விதையை மையாக அரைத்து தொப்புள் மற்றும் அடிவயிற்றில் பூசுவதன்மூலம் நிவாரணம் கிடைக்கும். 

வெள்ளரிக்காயைப்போல வெள்ளரிப்பழமும் மருந்தாக அமைகிறது. கோடையில் ஏற்படும் நோய்களை சரிசெய்வதோடு கர்ப்பப்பை பிரச்னை, அடிவயிற்றில் ஏற்படும் சூடு,  மாதவிடாய்க்கோளாறுகள் போன்றவற்றை சரி செய்யும். பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலையும் போக்கக்கூடியது.

கபம், இருமல், நுரையீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 

அடுத்த கட்டுரைக்கு