Published:Updated:

நலம் பல தரும் நம்ம ஊரு புட்டு! #HealthyFood

நலம் பல தரும் நம்ம ஊரு புட்டு! #HealthyFood
நலம் பல தரும் நம்ம ஊரு புட்டு! #HealthyFood

வாழை இலை... அதில் சுடச்சுட வைக்கப்பட்டிருக்கும் புட்டு. மேலே தூவப்பட்டு வெண்ணிறத்தில் மினுங்கும் தேங்காய்த் துருவலும் நாட்டுச் சர்க்கரையும். பிறகென்ன... சில நிமிடங்களிலேயே காலிசெய்துவிடுவோம். பார்த்தாலே நாவூரச் செய்யும் மாயாஜாலம் இதற்கு உண்டு. கேரளாவில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபல காலை டிபன். என்றாலும், இதை `நம்ம ஊரு உணவுங்க’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். இது, எப்போது, யாரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும். தமிழர்களின் பாரம்பர்ய உணவுகளில் ஒன்று. மதுரை குழாய் புட்டு உலகம் முழுக்க பிரசித்தம் என்பதே இதற்குச் சான்று. அது மட்டுமல்ல, புட்டுக்காக மண் சுமந்தார் சிவபெருமான் என்கிற குறிப்பை தன் `திருவிளையாடல் புராணம்’ நூலில் குறிப்பிடுகிறார் பரஞ்சோதி முனிவர்.

இதன் பெயர்க் காரணத்துக்கே பல கதைகள் உலவுகின்றன. தமிழில் `புட்டு’ என்றால் பிரித்தல். இதைப் பிட்டு (உடைத்து), உதிர்த்துச் சாப்பிடுவதால் இந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். இதுதான் சரியான காரணமாகவும் தோன்றுகிறது. ஆனால், இன்னொரு கதையும்விடுகிறார்கள். இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் வந்திருந்த நேரம் அது... கேரளாவில் புட்டு செய்முறையை ஆங்கிலேயர் ஒருவர் பார்த்திருக்கிறார். அரிசி மாவையும் தேங்காய்த் துருவலையும் கலந்து, மண் பாத்திரம் ஒன்றில் வைத்து (Put) வேகவைத்ததைப் பார்த்ததும் இதை `புட்’ என்று சொன்னாராம். அது மருவி, `புட்டு’ ஆனது என்கிறார்கள். இது உண்மையோ, பொய்யோ ஆங்கிலேயர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் புட்டையும் சேர்த்துக்கொண்டார்கள். அதன் காரணமாகவே இது பிரபலமடையவும் செய்தது. 

இலங்கையில் இதை `பிட்டு’ (Pittu) என்கிறார்கள். பாத்திரங்கள் கண்டுபிடிக்காத காலத்திலேயே புட்டை ருசி பார்த்திருக்கிறார்கள் நம்மவர்கள். தேங்காய் ஓடு, மூங்கில், மண் பாத்திரம் இதிலெல்லாம் அரிசி மாவை வைத்து இதைத் தயாரித்திருக்கிறார்கள். இன்றைக்கு விதவிதமான சமையல் உபகரணங்கள் வந்துவிட்டன. புட்டை அதிக அளவில் தயாரித்து, ருசி பார்க்கிறவர்கள் கேரளாக்காரர்கள்தான். நம்ம ஊர் இட்லிக்கடை மாதிரி ரோட்டோர புட்டுக்கடைகள் அங்கே ஏராளம். ஐந்து நட்சத்திர உணவகங்கள் தொடங்கி, சாதாரண ஹோட்டல் வரை மெனுவில் இருக்கும் முக்கியமான உணவு இதுதான். சாதாரண அரிசி, ராகி புட்டுகள் தவிர நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. சிக்கன், இறால், மட்டன், மீன், முட்டை, சிரட்டை, தக்காளி, கேரட், மிக்ஸடு வெஜிடபுள், பைனாப்பிள்... என புட்டில் பலப்பல ரகங்கள். `பிரியாணி புட்டு’கூட கேரளாவில் கிடைக்கும். அடிக்கடி `புட்டு திருவிழா’ நடத்தி ரசிகர்கள் விதவிதமாக ருசிபார்ப்பதும் நடக்கிறது. கேரளாவில், சிரட்டையில் செய்கிற வகைக்கு `சிரட்டைப் புட்டு’ என்று பெயர். 

புட்டில் கின்னஸ் உலக சாதனை படைத்த நிகழ்வும் நடந்திருக்கிறது. 2015-ம் ஆண்டு, கேரளா, வயநாட்டில் இருக்கும் ஒரியன்டல் ஸ்கூல் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் இந்தச் சாதனையைப் படைத்தார்கள். பிரமாண்டமான புட்டைச் செய்வதற்காக 26 கிலோ அரிசி மாவு, 20 தேங்காய்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்றரை மணி நேரத்தில் இவர்கள் தயாரித்த புட்டின் நீளம் 18.2 அடி. இதைத் தயாரித்தவர்கள் பன்னிரண்டே மாணவர்கள். இன்று வரை தயாரிக்கப்பட்டதிலேயே மிக நீளமான புட்டு இதுதான். 

இதன் புகழ், இந்தியாவையும் தாண்டி பல நாடுகளிலும் பரவியிருக்கிறது, குறிப்பாக தெற்கு ஆசியாவில்! அதிலும், மூங்கிலில் அரிசி மாவை வைத்து, வேகவைத்துச் சாப்பிடும் முறையே அதிகம். இந்தோனேஷியாவில் இதற்கு `கியூ-புட்டு’ (Kue Puttu) என்று பெயர்; மலேஷியாவில் `புட்டு-பாம்பூ’ (Puttu Bambu). இந்தோனேஷியாவில் தள்ளுவண்டியில் வைத்து, தெருத் தெருவாகக் கொண்டுபோய் விற்கிறார்கள். மந்தார இலையில் இது வைக்கப்பட்டிருக்கும் அழகே தனி. மொரீஷியஸிலும் பரவலாகக் காணப்படும் உணவு இது. 

தொட்டுக்கொள்ள பாயா, கொண்டைக்கடலை கறி, மட்டன் கிரேவி, வாழைப்பழம்... என பொருத்தமான பல சைடு டிஷ்களும் உள்ளன. புட்டு தரும் ஆரோக்கியப் பலன்கள் குறித்துச் சொல்கிறார் டயட்டீஷியன் பத்மினி... ``நம் பாரம்பர்யமான ஆரோக்கிய உணவு புட்டு. அரை பிளேட் அரிசிப் புட்டில் 125 கலோரிகள், 100 கிராம் கார்போஹைட்ரேட், கொழுப்பும் புரோட்டீனும் தலா ஒரு கிராம் உள்ளன. எண்ணெய் சேர்க்காமல் ஆவியில் வேகவைத்து எடுப்பதால், காலை உணவுக்கு ஏற்ற ஆரோக்கிய உணவு. இதில் இருக்கும் கார்போஹட்ரேட்டும் புரோட்டீனும் நாள் முழுக்கத் தேவையான ஆற்றலைத் தருபவை. அரிசி தவிர கோதுமை, கேழ்வரகு, சிறுதானியங்கள் ஆகியவற்றின் மாவிலும் இதைச் செய்யலாம். தமிழ்நாட்டில் இதை வேகவைத்து, சர்க்கரை, தேங்காய்த் துருவல் தூவி பரிமாறுவார்கள். 

எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு புட்டு சுற்றிப்போடும் பழக்கம் நம் பாரம்பர்யத்தில் உண்டு. மாதவிடாய் காலத்தில் வலியைத் தாங்கும் சக்தியை இது அளிக்கும்; இடுப்பு எலும்புகள் பலம் பெறும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்தார்கள். கோதுமை, கேழ்வரகில் செய்த புட்டை (சர்க்கரை சேர்க்காத) சர்க்கரைநோயாளிகளும் சாப்பிடலாம். தேங்காயைத் தவிர்த்துவிடலாம். சிறுதானியங்களில் இதைச் செய்து சாப்பிடுவது அதிகப் பலன்களைத் தரும். உதாரணமாக சாமை அரிசியில் இதைச் செய்து சாப்பிட்டால், ரத்தச்சோகை சரியாகும்; வயிறு தொடர்பான பிரச்னைகள், மலச்சிக்கல் நீங்கும்; உயிர் அணுக்களின் எண்ணிக்கை உயரும். பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத பலம் தரும் உணவு புட்டு. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் உள்ளவர்கள் அரிசி மாவில் செய்த புட்டைத் தவிர்த்துவிட்டு, சிறுதானியங்களில் செய்ததைச் சாப்பிடுவது நலம்.’’