Published:Updated:

சுண்டல், கஞ்சி, பஞ்சாமிர்தம்... உடல் எடை அதிகரிக்கும் 5 உணவுகள்!

சுண்டல், கஞ்சி, பஞ்சாமிர்தம்... உடல் எடை அதிகரிக்கும் 5 உணவுகள்!
சுண்டல், கஞ்சி, பஞ்சாமிர்தம்... உடல் எடை அதிகரிக்கும் 5 உணவுகள்!

டல்பருமனுக்குச் சற்றும் குறைவில்லாதது, உடல் எடை குறைவாக இருப்பது. இந்தப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். நம் வயதுக்கும் உயரத்துக்கும் பொருத்தமான அளவில் உடை எடை இருக்கவேண்டியது மிக அவசியம். அதிக எடை, குறைந்த எடை இரண்டுமே ஆபத்துதான் என்பதை முதலில் புரிந்துகொள்வோம். கல்லும் கரையவேண்டிய முப்பது வயதில் சிலருக்கு பசியின்மை பிரச்னை... இதனால் சுறுசுறுப்பின்மை, நீண்ட நேரம் உறக்கமில்லாமை, மெலிந்த உடல்வாகு போன்ற பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உடல் எடைக் குறைவு பிரச்னை இன்றைய இளைஞர்களிடம்கூட அதிகமாக உள்ளது. அதிலும், விடுதியில் தங்கிப் படிப்பவர்கள், தனியாக அறை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்று வருபவர்கள், நண்பர்களுடன் அறையில் சமைத்துச் சாப்பிடுபவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. சில எளிய உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், ஓரிரு மாதங்களிலேயே நல்ல மாற்றம் தெரியும்; உடல் எடை மெள்ள மெள்ள அதிகரிக்கத் தொடங்கும்.

ஏலக்காய்-சுக்கு-வெல்லம் பானம்!

முதல் நாள் இரவு ஒரு டம்ளர் தண்ணீரில், 20 முதல் 50 கிராம் வெல்லத்தைக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை, துணியால் இந்த நீரை வடிகட்டி அதில் சிறிது ஏலக்காய்த்தூளையும் சுக்குத்தூளையும் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், ரத்த விருத்தி ஏற்படும். இதன் காரணமாக, ஹீமோகுளோபினின் அளவும் அதிகரிக்கும். ஹீமோகுளோபின்தான் சிவப்பு ரத்த அணுக்களுக்கும், பல்வேறு உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது.

பலம் தருமே பஞ்சாமிர்தம்!

இந்த பானத்தைக் குடித்து முடித்ததும், இரண்டு டீஸ்பூன் பஞ்சாமிர்தத்தைச் சாப்பிடலாம். பஞ்சாமிர்தத்தில் தேன், பால், நெய், பழ வகைககள் சேர்ந்துள்ளதால், உடலுக்குப் பல வகையான போஷாக்கை அள்ளித்தரும். பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரதம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். தேன், உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும். நெய்யில் உள்ள கொழுப்புச்சத்து, உடலுக்கு சக்தியளிக்கும். பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பஞ்சாமிர்தம் செரிப்பதற்கு சற்றுக் கடினமான ஒன்று. அதனால், இதைச் சாப்பிட்டதும் அரை மணி நேரத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் பஞ்சாமிர்தத்தின் போஷாக்கு உடலின் பல உறுப்புகளுக்குச் சென்றடைவது எளிதாகும்.

உடல் வலுவுக்கு உதவும் கஞ்சி!

இட்லி, தோசை போன்ற காலை உணவுக்குப் பதிலாக புழுங்கலரிசிக் கஞ்சி தயாரித்து உட்கொள்ளலாம். கஞ்சியில் உப்புக்குப் பதிலாக, இந்துப்பைச் சேர்த்துச் சாப்பிடுவது நல்ல பலன் தரும். (இந்துப்பில் சோடியத்துக்குப் பதிலாக, பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. அதனால், உடல் ஆரோக்கியத்துக்கு இது பெரிதும் உதவும்.) கஞ்சியில் நான்கு முதல் ஐந்து சொட்டு நெய்விட்டுச் சாப்பிட்டால், உணவைச் செரிக்கச் செய்யும் திரவங்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்யத் தொடங்குகின்றன. இதனால் செரிமானம் தொடர்பான அனைத்து உபாதைகளும் விலகிவிடும்.

சீரக ரசம் சிறப்பு!

மதியம் பச்சரிசி சாதத்தில் சூடான சீரக ரசத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால், செரிமான மண்டலம் சிறப்பாக இயங்கும். அதனால் அதிகப் பசி எடுக்கும். இது, உணவை அதிகம் சாப்பிடத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

சுண்டல் நல்லது!

மாலை வேளையில், ஒரு சிறிய கப் கொண்டைக்கடலை அல்லது வேகவைத்த பச்சைப்பயறுடன் இஞ்சி, தேங்காய், மாங்காய் சேர்த்து சாப்பிடலாம். இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், உடலுக்கு அதிகமான சக்தி கிடைக்கும். இரவு உணவுக்கு முன்னதாக அரிசியும் வெல்லமும் கலந்த உணவைச் சாப்பிட்டால் உடலுக்கு போஷாக்கு கிடைக்கும். சிறிது நேரம் கழித்து, புழுங்கல் அரிசிக் கஞ்சியைக் குடிக்கலாம்.

இந்த உணவு முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் நன்கு பசி எடுக்கும்; பத்தே நாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, உடல் எடை கூட ஆரம்பித்துவிடும். உடற்பயிற்சி என்பது பருமனாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவசியமானது. சீரான ரத்த ஓட்டம் கிடைப்பதற்கு கண்டிப்பாக உடற்பயிற்சி அவசியம். எனவே, உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களும், உடற்பயிற்சியை தாராளமாகச் செய்யலாம்.