Published:Updated:

குழந்தையின்மை குறைபாட்டை இயற்கை முறையில் போக்குவது எப்படி?

குழந்தையின்மை குறைபாட்டை இயற்கை முறையில் போக்குவது எப்படி?
குழந்தையின்மை குறைபாட்டை இயற்கை முறையில் போக்குவது எப்படி?

‘கைவீசம்மா கைவீசு...
கடைக்குப் போகலாம் கைவீசு...
மிட்டாய் வாங்கலாம் கைவீசு...
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு...’
- எல்லா அம்மாக்களுக்கும்... ஏன் அப்பாக்களுக்கும்கூட இப்படித் தங்கள் குழந்தைகளோடு பாட்டுப்பாடி... ஆடி ஓடி... விளையாட ஆசை இருக்காதா என்ன? எல்லாச் செல்வங்களையும்விடக் குழந்தைச் செல்வம்தான் சிறந்தது என்பார்கள். ஆனால், இன்றைக்குப் பல்வேறு சூழல்களால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் பலரும் அவதியுறுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் என அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கட்டுப்பாடுகள் இல்லாத இந்த உலகத்தில் வரம்புகளை மீறுவதும் நியதிகளுக்கு உட்பட்டு வாழாதிருப்பதும் குழந்தையின்மைப் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு ஆண் பெண் இரண்டு பேருமே காரணமாக இருக்கிறார்கள். புதிதாகத் திருமணம் செய்த தம்பதி தொடர்ந்து ஓராண்டு காலம் உடலுறவு வைத்தும் கருத்தரிக்காமல் போனால் இரண்டுபேரில் ஒருவருக்கோ இருவருக்குமோ கோளாறு இருக்கலாம் என்று அர்த்தம். அதை மனதில் கொண்டு தேவையான பரிசோதனைகளைச் செய்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

ஆணைப்பொறுத்தமட்டில் விந்தணுக்களில் குறைபாடு, விந்து செல்லும் குழாய்கள் பாதிக்கப்படுவது, சைக்கிள் - பைக் ஓட்டுவதால் பிறப்புறுப்புகளில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவிக்குறைகள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். தொடர்ந்து வரக்கூடிய ஜுரம், அதிக வெயிலில் அலைவது போன்றவற்றால் விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி பாதிக்கப்படலாம். ஹார்மோன் கோளாறுகள், குடி, புகை உள்ளிட்ட போதைப்பழக்கங்களாலும் ஆண்களுக்குக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளில் சேர்க்கப்படும் சைனீஸ் சால்ட், வினிகர் போன்றவை கெமிக்கல்களே. இவை கொழுப்புச்சத்தை அதிகரிப்பதோடு அவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்குக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் நூடுல்ஸ் வழுவழுப்பாக இருப்பதற்குக்காரணம் அதில் சேர்க்கப்படும் மெழுகு போன்ற பொருள்களே. இப்படித் துரித உணவுகளைச் சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வது, தவறான வாழ்வியல் பழக்கத்தை மேற்கொள்வது, மனஅழுத்தம், மரபியல், ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு அடிப்படைக் காரணமாக அமைகிறது. இதற்கும் உணவுப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதிக ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாயின்போது கட்டிகள் வெளிப்படுதல் மற்றும் தீராத வயிற்றுவலியை ஏற்படுத்துதல் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. சினைப்பையில் இருந்து முட்டைகள் வெளிவராமல் இருப்பது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளில் பரவலானது. கர்ப்பப்பையின் பிறவிக்கோளாறுகள், கர்ப்பப்பை வாய் அடைத்துக்கொள்வது, ரத்தசோகை, தைராய்டு, சர்க்கரை நோய், மனக்கோளாறுகள், கரு முட்டைக் குழாயில் பாதிப்பு போன்றவையும் பெண்களின் குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கியக் காரணங்களாகும். வயதான பெண்களுக்குக் கரு முட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்துகொண்டே போகும் என்பதால் சரியான வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது. சிலர் படிப்பு, வேலை, வசதி எனக் காரணம் காட்டி குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுவதும் குழந்தையின்மைப் பிரச்னைக்குக் காரணமாக அமைகிறது. அடிக்கடி கருக்கலைப்புச் செய்துகொள்வது, குழந்தை பெற நினைக்கும் காலங்களில் பிரச்னையை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு உடல்பருமன் பிரச்னையும் ஒரு காரணமாக அமைகிறது. ஆகவே, பெண்கள் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்வது அவசியம்.

ஆண் பெண் யாராக இருந்தாலும் முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். புகைப்பழக்கம் இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கும் என்பதால் புகைப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். குறிப்பாக ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை புகை குறைக்கக்கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல் குடி மற்றும் போதைப்பழக்கம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் பாதிக்கும் என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடல் கோளாறுகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து மாத்திரைகளும்கூட ஆண்களின் விந்தணுத் தன்மையைப் பாதிக்கும். எனவே, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுயமருத்துவம் செய்துகொள்வது தவறு.

இயற்கையான முறையில் குழந்தையின்மை குறைபாடுகளை நீக்கும் வழிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

`அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்' என்பார்கள். `அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்' என்று ஒரு பழமொழி உள்ளது. அரசன் என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரச மரத்தின் காற்றைச் சுவாசிக்கும் பெண்களுக்குக் கருப்பைத் தொடர்பான நோய்கள் குணமாகும்; குழந்தைப்பேறுக்கும் நல்லது.

மேலும், பொதுவாகக் கைப்பிடி அரச மரத்தின் இலைக்கொழுந்தை மையாக அரைத்து தயிர் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து சாப்பிடலாம். இலைக்கொழுந்தை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் பெண்களுக்கான கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் சரியாகும். ஆண்களும் இதே மருந்தை சாப்பிடுவதால் பலன் கிடைக்கும். குறிப்பாக ஆண்கள் அரசம் பழத்தின் பொடி 5 முதல் 10 கிராம் அளவு எடுத்துப் பாலில் கலந்து காலை, மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் பெருகுவதோடு விந்தணுக்கள் கெட்டிப்பட்டு உடல் பலம் பெறும்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை சேர்த்து நசுக்கி கசாயம் வைத்து குடித்து வந்தால் ஆண்மை பலம் கூடும். இதேபோல் வெற்றிலையுடன் துளசி விதைப் பொடி சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் பலம் கிட்டும்.

வாழைப்பூவை பொரியல், கூட்டு, வடை என ஏதாவது ஒரு வடிவத்தில் செய்து சாப்பிட்டு வந்தாலும் ஆண்மைக் கோளாறுகள் நீங்கும்.

முருங்கைப்பூவை பாலில் வேக வைத்து வடிகட்டிய பாலை குடித்து வருவது, பிஞ்சு முருங்கைக்காய்களைப் பாலில் வேக வைத்து வடிகட்டி குடிப்பது போன்றவற்றாலும் ஆண்மை பலப்படும். முருங்கைக்கீரை பொரியல், முருங்கைக்காய் கூட்டு, சாம்பார் எனச் செய்து சாப்பிடுவதும் பலன் தரும்.

ஓரிதழ் தாமரைப் பொடியை பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.

குழந்தை இல்லாத தம்பதிகள் ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழத்தை அரை ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

பெண்கள் இளம் ஆலம் விழுது 20 கிராம் அளவு எடுத்து அரைத்துப் பசும்பாலில் கலந்து மாதவிடாய் வந்த முதல் நாளில் இருந்து ஐந்து நாள்கள் வரை சாப்பிட வேண்டும். இதை 3 மாதங்கள் மாதவிடாய்க்காலங்களில் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாகும்.

இதேபோல் மாதுளம்பூ சாற்றுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை மாலை என மாதவிடாய் வந்த 3-வது நாள் முதல் 7 நாள்கள் குடித்து வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். கர்ப்பப்பைக் கோளாறுகளைச் சரி செய்ய மாதுளம் வேர்ப்பட்டை, மாதுளம்பழ ஓடு சேர்ந்த பொடியில் இரண்டு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 90 நாள் குடித்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டிகள் சரியாகக் கழற்சிக்காய் பருப்புடன் நான்கு மிளகு சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இது கசப்புத்தன்மையாக இருக்கும் என்பதால் மோர் குடிக்கலாம். வேறு எந்த மருந்துகளும் சாப்பிடாமல் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் நீர்க்கட்டிகள் சரியாகும். ஆளி விதைப்பொடியும் பலன் தரும். லவங்கப்பட்டையைக் காபி, டீ அல்லது மோர், தயிருடன் சேர்த்து குடித்து வந்தாலும் நீர்க்கட்டிகள் மறையும்.

குழந்தையின்மை பிரச்னையை முன் வைத்து காசு பார்ப்பவர்கள் மத்தியில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதேவேளையில், மூட நம்பிக்கைகளை விட்டொழித்து இயற்கை வழியில் நோய்களை வென்றெடுக்கலாம், குழந்தையின்மைக் குறையைப் போக்கலாம்.