##~## |
ஆண்- பெண் அந்தரங்கம் பற்றிய பல உண்மைகளை, அற்புதமான தகவல்களுடன் சுவாரஸ்யமான நடையில் தந்துள்ளார், மனநல மருத்துவர் ஷாலினி. மனித இனத்தின் தொடக்கம், பரிணாம வளர்ச்சி, மரபணு அதிசயங்கள் போன்றவற்றை அறிவுபூர்வமாக அணுகியுள்ளார் ஷாலினி.
காமம் இல்லை என்றால், இனப்பெருக்கம் என்பதே இருக்காது என்பதில் ஆரம்பித்து, காமத்தின் ஆதார குணங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார். காமம் சார்ந்த அந்தரங்கப் பிரச்னைகளை, உளவியல்பூர்வமாக அணுகியிருப்பது சிறப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொதுவாக காமம் என்றாலே, மனக்கிளர்ச்சி அடைவது மனித இயல்பு. கவர்ச்சியான இளம் பெண் எதிரில் வந்தால், சில நொடிகள் உற்றுப் பார்க்காத ஆண்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம், மரபணுவின் தூண்டல்தான். ஆண்- பெண் இனக்கவர்ச்சி என்பது இன விருத்திக்காக, பன்னெடுங்காலத்துக்கு முன்னர் மரபணுக்கள் செய்துவைத்த ஏற்பாடு. ஆண் - பெண் சேர்க்கை, மனிதகுலம் செழித்து வளர இயற்கையின் கட்டாய விதி என்பதை அழுத்தமாக விளக்குகிறார் ஆசிரியர்.

மற்ற ஜீவராசிகளுக்கு ஒரே ஒரு வகைக் காமம்; மனிதர்களுக்கு மட்டும் ஒரு டஜன் வகைக் காமம் என்று அனைத்து வகைக் காமத்தையும் குட்டிக் கதைகள் மூலமாகவும், சம்பவங்களாகவும் விளக்குகிறார்.
மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வரை, மனிதர்கள், வானரங்களாக இருந்தவர்கள். மனிதக் கூட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கான காரணம், டி.என்.ஏ. என்ற புரதச் சுருள். 'இந்த உலகில் வேறு எதற்கும் இல்லாத ஒரு மாபெரும் சக்தி, இந்த டி.என்.ஏ.வுக்கு மட்டும்தான் உண்டு’ என்கிறது ஆராய்ச்சி. இதற்கு மட்டும்தான் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உள்ளது. அந்த அதிசய ஆக்க சக்தி மூலம் மீண்டும் மீண்டும் இதே வேலையாக வாரிசுகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று மரபணு செயல்பாடுகளை விரிவாக அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.
வரலாற்று உண்மைகள், குட்டிக் கதைகள், ஆராய்ச்சி முடிவுகள், பிரபல மனோதத்துவ நிபுணர்களின் பங்களிப்புகள் என, ஒரே மூச்சில் படிக்கவைத்துள்ள ஆசிரியரின் மொழி நடை இன்னும் சிறப்பு. அர்த்தமுள்ள தொகுப்பு!