Published:Updated:

இளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள்!

இளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள்!
இளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள்!

`நீ வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவே இல்லை...' - பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இந்தத் திரைப்பட வசனம் ஒன்றே இளமைக்குச் சாட்சி.

`பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம். பகல் புணரோம்; பகல் துயிலோம்...' - காலன் நம்மை நெருங்காமல் இருக்க வேண்டுமானால் சிலவற்றைச் செய்தே ஆக வேண்டும் என்று பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான தேரையர் தம் பாடலில் இப்படிச் சொல்லியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்றால், பால் உணவை உண்போம்! எண்ணெய் தேய்த்துக்குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம்... என்று பட்டியலிடுகிறார்.

இளமையுடன் இருக்க இன்னும் பல ரகசியங்கள் இருக்கும் சூழலில், நடிகைகள் சிலரின் பெர்சனல் பக்கங்களைத் தேடியபோது... ‘நான் நிறைய ஜூஸ் அருந்துவேன். அதுதான் என் சருமத்தை இத்தனை அழகாக வைத்திருக்கிறது' என்கிறார் ஒரு நடிகை. இன்னொருவர்... ‘நான் தினமும் இளம்சூடான நீரில் எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து என் சருமத்தில் பூசி வருகிறேன். பாசிப் பயறு தூளுடன் தயிர், பால் சேர்த்து ஸ்கின் மாய்ச்சரைஸராக பயன்படுத்துகிறேன். இதுவே சருமத்தைப் பளபளப்பாக்குகிறது' என்கிறார்.

ஆண்களில் சிலரைப் பார்த்தால் 50, 60 வயசானாலும்கூட என்றும் மார்க்கண்டேயனாக காட்சியளிப்பார்கள். இவை எல்லாவற்றுக்கும் உணவுப் பழக்கமும், சில ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் நிச்சயம் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பொதுவாகவே, உடலை எப்போதும் `ஸ்லிம்' ஆக வைத்திருக்க நினைப்பவர்கள் காலையில் கண் விழித்தது முதல், இரவு கண்ணுறங்கும் வரை சில பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கண் விழித்ததும் காபி, டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். அவற்றுக்குப் பதிலாக, இளஞ்சூடான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடித்து வந்தால் அது செரிமானத்துக்கு உடனடி ஊக்கமூட்டியாக அமையும். மேலும் பித்தநீரை தயாரிக்கும் கல்லீரலைத் தூண்டுவதோடு தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். இதன் மூலம் இலகுவான முறையில் மலம் வெளியேறும்.

வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை பச்சையாக மென்று தின்பதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் தாதுச்சத்துகள் அடங்கியிருப்பதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சிச் சாறு சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், கொழுப்பு கரையும். தேனில் ஊறவைத்த இஞ்சியை மென்று தின்பதால், செரிமானக் கோளாறு மற்றும் பல பிரச்னைகள் சரியாகும். தேனை முகத்தில் தடவி ஊறவைத்துக் கழுவினால் முகச்சுருக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையத்தைப் போக்க தேன் தடவிவந்தால் பலன் கிடைக்கும்.

தினசரி காலைப் பொழுதுகளில் வெண்பூசணிச் சாறு, திராட்சைச் சாறு, சுரைக்காய் மற்றும் அன்னாசிப்பழச் சாறு அருந்திவந்தால், உடல்பருமன் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக வெண்பூசணி மற்றும் சுரைக்காய் உடல் சூட்டைக் குறைப்பதோடு குடல்புண்ணை ஆற்றக்கூடியவை. சுரைக்காய் சிறுநீரைப் பிரித்து வெளியேற்றுவதில் முக்கியப் பணியாற்றுகிறது. அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது; கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது. இது பித்தம் மற்றும் ஜீரணக்கோளாறுகளைச் சரிசெய்து தொப்பையைக் குறைக்க உதவுகிறது.

அடுத்ததாக அன்றாடம் காலை உணவாக பப்பாளிப் பழத்தை உண்பது மிகவும் நல்லது. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு இளமைப்பொலிவோடு வாழ உதவும். பப்பாளிப்பழத்தைத் தொடர்ந்து நான்கு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் 19.2 சதவிகிதம் கொழுப்புச்சத்து குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சருமப் பராமரிப்புக்கும் பப்பாளி பயன்படுகிறது. பப்பாளிப்பழத்தை முகத்தில் பூசி மசாஜ் செய்து மிதமான சுடுநீரில் முகம் கழுவினால் `பளிச்' என முகம் பிரகாசிக்கும். இதேபோல் விலை மலிவாகக் கிடைக்கும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறச்செய்வதோடு அழகு மிளிரும். தோல் வறட்சியை நீக்குவதோடு முதுமைத் தோற்றத்தை தள்ளிப்போடச் செய்து இளமையுடன் இருக்கச்செய்யும். இரவில் கொய்யாப்பழம் சாப்பிடாமலிருப்பது நல்லது.

சப்போட்டாப் பழம் சாப்பிட்டுவந்தால் இளமைக்கு கியாரன்டி. தினமும் இரண்டு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரக்கூடியது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு சப்போட்டா அருமையான மருந்தாகும். மேலும் இது இதயக்கோளாறு ஏற்படாமல் தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.

ஆரஞ்சுப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது. இதன் சுளையை உரித்து அப்படியே சாப்பிடுவதானாலும் சரி, சாறு எடுத்துச் சாப்பிடுவதனாலும் சரி உடலுக்கு புத்துணர்ச்சி தரும். மேலும், அணுக்கள் நன்றாகச் செயல்பட உதவும். இதனால் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் இருக்க உதவும். குடலைச் சுத்தப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும். இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். ஆரஞ்சுப்பழச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடுவது ஏற்புடையது.

சித்தர்களால் `குமரி' என்று அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே பெண்களுக்குக் கடவுள் கொடுத்த ஒரு வரம். தினமும் காலை வெறும் வயிற்றில் சோற்றுக்கற்றாழை சாப்பிட்டு வந்தால், இளமை என்றும் ஊஞ்சலாடும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கச்செய்யும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு, அறுகம்புல் சாறு போன்றவையும் இளமை காக்கும் அற்புத மருந்துகளாகும்.

ஆப்பிள், மாதுளை, கேரட், சீத்தாப்பழம், மங்கூஸ், ஸ்ட்ராபெர்ரி, முந்திரி, வெள்ளரி விதைகள், பூசணி விதைகள், சிவப்பு திராட்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பசலைக்கீரை, பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் தினமும் ஒரு கீரை உணவு, முருங்கைக்காய் போன்றவற்றை உண்பது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை உண்பது நல்லது.

இவை தவிர பைக் ஓட்டுவதற்குப் பதில் சைக்கிளிங், வாக்கிங், நீச்சல், மூச்சுப்பயிற்சி செய்வது இளமை காக்க உதவும். அதேவேளையில் மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றை விட்டொழிப்பது நல்லது.

இரவில் நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் போன்றவற்றால் ஆன திரிபலா சூரணத்தை நீர்விட்டுக் கொதிக்க வைத்தோ, வெந்நீரில் கலந்தோ குடிக்கலாம். இரவில் மண் குவளையில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணத்தைப் போட்டு ஊறவைத்து, காலையில் எழுந்ததும் குடிக்கலாம். இதனால் நரைமுடி விலகுவதோடு மலச்சிக்கல் பிரச்னை தீரும்.