பிரீமியம் ஸ்டோரி

 முன்கதைச் சுருக்கம்

மனமே நலமா? - 13

பள்ளியின் ஆண்டு விழாவில் நடந்த நடனப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கிய மாணவி சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார். தான் பரிசு வென்றது பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இந்த சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்த அந்தப் பெண், தன்னுடன் படிக்கும் மாணவிகள், பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய ஆடைகள் எடுத்துக்கொடுக்க கடைக்குச் சென்றாள். அங்கு ஆயிரக்கணக்கில் ஆடைகளை எடுத்துவிட்டு, அப்பாவை வரவழைக்கிறாள். 65 ஆயிரம் ரூபாய்க்கு அந்தப் பெண் துணி வாங்கியிருந்ததைக் கண்டு, அவளது அப்பா அதிர்ச்சியடைகிறார். நள்ளிரவில் எழுந்து குளித்துக் கிளம்பி, மற்றவர்களைச் சோம்பேறி என்று திட்டுவது. இலக்கியங்களில் இருந்து மேற்கோள்காட்டிப் பேசுவது, காதல் கவிதை எழுதுவது என்று அந்த மாணவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள். அனைத்துக்கும் உச்சமாக, தனது வீட்டுக்கு எதிரில் இருந்த ஆசிரியர் ஒருவருக்குக் காதல் கடிதம் எழுதி, தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தினாள். அவளுக்கு ஏதோ பிரச்னை என்று உணர்ந்த அவளது தந்தை, டாக்டரிடம் அழைத்து வந்தார்.

##~##

ம்மா, அப்பா, மகன், மகள் என குடும்பமே என்னைச் சந்திக்க வந்திருந்தது. அந்த அம்மாவுக்கு 50 வயதுக்கும் மேல் இருக்கும். அம்மாவைப் பற்றி மகன் பேசத்தொடங்கினார். 'எங்க அம்மா எப்போதுமே சோகமாவே இருக்காங்க. எந்த ஒரு விஷயத்திலேயும் அவங்க தலையிடறதில்லை. கல்யாணம் ஆன புதுசுல, நிறையக் கஷ்டத்தை அனுபவிச்சிருக்காங்க. எங்க பாட்டி, அம்மாவை ரொம்பவே கொடுமைப்படுத்தினாங்களாம். 'இதையெல்லாம் சகிச்சுக்கிட்டுத்தான் ஆகணும்’னு அப்பா எதையும் கேட்காமலே இருந்திருக்கார். எங்க அப்பா, ஒரு கம்பெனியில் சாதாரண வேலையில் இருந்து கஷ்டப்பட்டு எங்களைப் படிக்கவெச்சார். ரொம்பவும் சிக்கனமா இருப்பார். அம்மா கேட்டது எதையும் வாங்கிக்கொடுத்தது இல்லை. இதனாலயே அம்மாவுக்கு வாழ்க்கையில பிடிப்பே இல்லாமப்போயிடுச்சு. அவங்க சிரிச்சே பல வருஷங்கள் ஆகிடுச்சு' என்றார்.

அந்த அம்மாவிடம் பேசினேன், 'நான் வாழறதே வேஸ்ட். ஏதோ, கடமைக்கு இருக்கேன். இந்தப் புள்ளைங்களுக்குக் கல்யாணம் செய்றப்ப, அம்மா இல்லாம இருந்தா நல்லா இருக்காதேன்னுதான் பல்லைக் கடிச்சுட்டு இருக்கேன். நல்லா சாப்பிடணும், நல்ல துணிமணி உடுத்தணும், நிறைய நகை போட்டுக்கணும், டி.வி. பார்க்கணும், சினிமாக்குப் போகணும், ஊருக்குப் போகணும்னு எனக்கு எந்த ஆசையும் இல்ல. இப்ப எனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபா விழுந்தாக்கூட சந்தோஷம் வராது. என் உணர்வை யாரும் புரிஞ்சுக்கிறது இல்ல. எனக்கு யாருமே இல்லாத உணர்வுதான் இருக்கு.

எனக்குக் கல்யாணம் ஆகி 30 வருஷம் ஆகுது. எத்தனையோ முறை என் கணவர், என்னை ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஆனா ஒரு தடவைகூட, 'என்ன சாப்பிடுற?’னு ஒரு வார்த்தை கேட்டது இல்ல. போய் உட்கார்ந்ததும், 'ரெண்டு பிளேட் இட்லி’ன்னு சொல்வார். அதுக்கு அப்புறம், 'ஒரு பிளேட் இட்லி’ன்னு சொல்லி, அதுல ஒண்ணு எனக்குக் கொடுப்பார். நான் இதுவரைக்கும் ஹோட்டல்ல சாப்பிட்டது இட்லி மட்டும்தான். இதேபோலத்தான் எல்லா விஷயமும் அவர் விருப்பப்படிதான் நடக்கும். என் விருப்பு வெறுப்பு எதையும் இவர் கேட்டது கிடையாது. என் வாழ்க்கையில் நான் நினைச்சது, ஆசைப்பட்டது எதுவும் நடக்கலை. இதையெல்லாம் நினைச்சுப் பல நாள் ராத்திரி அழுதிருக்கேன். இப்போ இதெல்லாம் எனக்குப் பழகிடுச்சு. இருக்கிறவரைக்கும் இப்படியே இருந்திட்டுப் போயிடவேண்டியதுதான்' என்றார் விரக்தியாக.

மனமே நலமா? - 13

அம்மா சொல்லி முடித்ததும் திரும்பவும் மகன் ஆரம்பித்தார், 'நானும், என் தங்கச்சியும் பி.இ. படிச்சுட்டு நல்ல கம்பெனியில வேலையில் இருக்கோம். என் ஒரு மாசச் சம்பளம் 50 ஆயிரம். அம்மா என்ன கேட்டாலும் செய்யத் தயாரா இருக்கோம். ஆனா, அம்மா அப்படியே இருக்காங்க. எதையுமே கேட்டுக்க மாட்டேங்கிறாங்க. அதனாலதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தோம்'' என்றார்.

மகன், மகள் நல்ல நிலைக்கு வந்த பிறகும், பழைய நிலையிலேயே இருப்பது சரியா? அவருக்கு என்ன பிரச்னை? அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்தது சரிதானா? உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.

 டாக்டர் செந்தில்வேலன் பதில்...

மனமே நலமா? - 13

அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட அதீத சந்தோஷம், உற்சாகம், அதிகப்படியான பேச்சு, அதிக தன்னம்பிக்கை, யாரையும் எளிதில் மயக்கக்கூடிய பேச்சுத்திறமை, எதுகை மோனைப் பேச்சு, ஒரு விஷயத்தில் இருந்து மற்றொரு விஷயத்துக்கு அதிவேகமாகச் செல்வது, சத்தமாகப் பேசுவது, தான் செய்யக்கூடிய காரியங்களில் பின்விளைவுகளை அறியாமல் பேசுவது... இவற்றையெல்லாம் வைத்து அந்தப் பெண்ணுக்கு 'மேனியா’ எனும் மனநோய் என்பதைக் கண்டறிந்தேன். இது 'பைபோலார் டிஸ்ஆர்டர்’ எனப்படும் தீவிர மனநோய் வகையில் ஒரு பிரிவாகும். தமிழில் இதை, 'மனஎழுச்சி’ என்று சொல்வார்கள்.

இந்த 'பைபோலார்’ வகை நோய், மரபுரீதியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், திடீரென ஏற்படும் அதிக சந்தோஷம், கவலை போன்றவை இந்த நோய் வருவதற்கான காரணங்கள். மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே இதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்தப் பெண்ணுக்கு மருந்து மாத்திரை, ஊசி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 15 நாட்களுக்குப் பிறகு நன்றாகக் குணமடைந்துவிட்டார். இருந்தாலும், தற்போதும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்துவருகிறார்.

மனமே நலமா? - 13

வாசகர் கடிதம்

வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த இலக்கியம், தான தர்மங்கள், வீட்டில் பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த நல்ல கருத்துக்கள்... இவை எல்லாம் தேன்மொழியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. இந்த எண்ணங்கள்தான், அவளை இப்படிச்செய்யத் தூண்டி இருக்கின்றன. அதை மறக்க முடியாமல் திண்டாடும்போது இதுபோல் நடந்துகொள்கிறாள். அதேபோல டி.வி., சினிமாவில் வரும் காதல் காட்சிகளும் அவளைப் பாதிப்படையச் செய்து இருக்கும். அவளுக்கு மன நல மருத்துவரின் ஆலோசனையும், மருந்து மாத்திரைகளும் கொடுத்தால் பழைய நிலைக்கு வந்துவிடுவாள்.

-ஆர்.பிருந்தா இரமணி, மதுரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு