Published:Updated:

குடிப்பழக்கம் நிறுத்த உதவும் 9 இயற்கை வழிகள்!

குடிப்பழக்கம் நிறுத்த உதவும் 9 இயற்கை வழிகள்!
குடிப்பழக்கம் நிறுத்த உதவும் 9 இயற்கை வழிகள்!

குடிப்பழக்கம் நிறுத்த உதவும் 9 இயற்கை வழிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடிப்பழக்கம் நம் கலாசாரத்தோடு இணைந்த ஒரு செயலாகிவிட்டது. கெடாவெட்டு, கோயில் திருவிழா, கல்யாணம்... என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், ஏன்... மரணம் நிகழ்ந்த வீடாக இருந்தாலும்கூட குடி என்பது தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது. சாலையோர டாஸ்மாக் கடைகளை உச்ச நீதிமன்றம் அகற்றச் சொன்னாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தினாலும் முழு மதுவிலக்கு என்பது இன்றைய நிலையில் சாத்தியமில்லாததாகவே இருக்கிறது. அதற்குக் காரணம் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதிகமாகியிருப்பதுதான். விடுமுறை நாளில்கூட கள்ள மார்க்கெட்டில் குவார்ட்டர் பாட்டில்கள் எங்கே கிடைக்கும் என அறிந்துவைத்திருக்கிறார்கள் மதுப் பிரியர்கள். `குடிப்பழக்கம் கூடாது’ என சம்பந்தப்பட்டவரே முடிவெடுத்தால் தவிர, இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை. 

சில ஆண்டுகளாக தொடர்ந்து குடித்துவருகிறார் ஒருவர். அவரின் குடிப்பழக்கத்தை உடனே நிறுத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. `இதை நிறுத்தியே ஆக வேண்டும்’ என்பதை ஒரு லட்சியமாகவே நினைத்துக்கொண்டு அவர் செயல்பட்டால்தான், குடிப்பழக்கத்திலிருந்து அவரால் விடுபட முடியும். `குடிக்க மாட்டேன்’ என்கிற தீர்க்கமான முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என்றால், இந்தப் பழக்கத்தை நிறுத்தும் போராட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்று அர்த்தம். இதுதான் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முதல் படி, முக்கியமான வழி. 

நீங்கள் மிக மோசமாக மதுப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கலாம்; அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு மன பலவீனம் உள்ளவராக இருக்கலாம். அதை விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டீர்களா? நல்லது; அது போதும். அதற்காக நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டாம். இன்றைக்கே அந்த முடிவை அமல்படுத்த ஆரம்பித்துவிடுங்கள். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வெளியாட்கள் யாரும் உதவ மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் உங்களை நீங்களேதான் அதற்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்; விடுபடுவதற்கான அத்தனை வழிமுறைகளையும் கையாள வேண்டும். மறந்துவிடாதீர்கள்... இதற்கு நீங்கள்தான் பொறுப்பு. 

வாழ்க்கை முறையில் மாற்றம், வாழ்க்கையில் உங்களை முன்னேற்றிக்கொள்ள உதவும் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதுதான் குடிப்பழக்கம் மறக்க உதவும் வழிகள். அப்படி உங்களுக்கு உதவும் 9 இயற்கை வழிகள்... 

இன்றே... இப்போதே... இக்கணமே!

`நாளையிலிருந்து மதுவைத் தொடவே மாட்டேன்’ என்று முடிவெடுக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் மனதின் அடியாழத்தில் குடிப்பழக்கத்தை விடுவதற்குத் தயங்குகிறீர்கள்; அந்த முடிவைத் தள்ளி வைக்கிறீர்கள்; காலம் தாழ்த்துகிறீர்கள் என்று அர்த்தம். மனம் அல்லது உடலை வருத்தும் எந்தப் பிரச்னையாகவும் இருக்கலாம்... அதற்காகப் பல ஆண்டுகளாக நீங்கள் மதுவுக்கு அடிமையாகியும் இருக்கலாம். ஆனால், உங்களிடம் இருக்கும் சக்தியையெல்லாம் திரட்டி, `குடிப்பழக்கம் இல்லாமல் என் வாழ்க்கையைப் புதிதாக வடிவமைக்கப் போகிறேன்’ என முடிவு செய்துகொள்ளுங்கள். அதை இன்றே, இப்போதே, இக்கணமே நடைமுறைப்படுத்துங்கள். அதாவது, மகிழ்ச்சியோ அல்லது வேறு எந்தவிதமான உணர்வுரீதியான பிரச்னையோ வந்தாலும், மது இல்லாமல் எதிர்கொள்வது என்கிற முடிவுக்கு வாருங்கள். அதற்குத் தூண்டும் சமூகத்தில், நண்பர்களிடமிருந்து விலகியே இருங்கள். `மச்சான்... ஒரே ஒரு பெக் மட்டும் போட்டுட்டுப் போடா! அதுகூட வேண்டாம்... ஒரு கிளாஸ் பியர் மட்டும் சாப்பிடேன்’ என நண்பர் அழைக்கிறாரா? ஸ்ட்ரிக்ட்டாக `நோ’ சொல்லப் பழகுங்கள்.

முடிந்தவரை, சிறிது காலத்துக்கு அந்த நட்பு வட்டத்துக்கு விடை கொடுத்து, தள்ளியே இருங்கள். இப்படிச் சொல்வதும் அதை நடைமுறைப்படுத்துவதும் எளிமையான காரியம் இல்லைதான். குண்டும் குழியுமான சாலையில் நீண்ட தூரம் போய்விட்டீர்கள். அதிலிருந்து மீண்டு, திரும்பி வருவது ஒரே நாளில் நடைபெறும் காரியம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முக்கியமான நாள். அதில் ஒவ்வொரு செயலும் மதுவுக்கு `நோ’ சொல்வதற்கான செயலாகவே இருக்க வேண்டும். அதில் கறார் தன்மையோடு இருப்பது விரைவாக இந்தப் பழக்கத்திலிருந்து மீள உங்களுக்கு உதவும். 

உடலினை உறுதி செய்!

மதுப்பழக்கமும் ஆரோக்கியமும் ஒன்றுக்கு ஒன்று இணக்கமில்லாதவை. குடிப்பழக்கம் மிக மோசமாக உங்கள் உடல்நிலையைப் பாதித்திருக்கும். அதை பழைய வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டியது உங்கள் பொறுப்பு, கடமை. உங்கள் உடலை உறுதி செய்ய முடிவெடுங்கள். அதற்கான வேலையில் இறங்குங்கள். புகைபிடிப்பது, பாக்குப் போடுவது மாதிரி ஏதாவது பழக்கம் இருந்தால் அது உங்கள் உடல்நிலையை இன்னும் மோசமாக்கும். அதை உடனே நிறுத்துங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் உடல் உழைப்புகளில் ஈடுபடுங்கள். ஊட்டச்சத்து தரும் உணவுகள் பற்றி நிபுணர் யாரிடமாவது ஆலோசனை பெறுங்கள். முறையான, சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுங்கள். உடற்பயிற்சி என்பது மிக மிக சக்திவாய்ந்த ஒரு கருவி. நம் சக்தியையும் கவனத்தையும் உடற்பயிற்சியின் பக்கம் திருப்புவதன் மூலமாக குடிப்பழக்கம் தொடங்கி பல தீய பழக்கங்களிலிருந்து விடுபட முடியும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்கிற முடிவின் மூலமாக உங்கள் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கொடுங்கள். இப்படி வாழ்க்கை முறையைத் திசை திருப்புவதால், பல பாடங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் உடல் உறுதியாக ஆக, உங்கள் மேலேயே உங்களுக்கு ஒரு மதிப்பு வரும். இந்த உணர்வு கோபம், பதற்றம், மன உளைச்சல் இவற்றையெல்லாம் தடுக்க உதவும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும். 

உங்கள் பலம்... உங்கள் மரியாதை!

சுய வெறுப்பு, கழிவிரக்கம் இவையெல்லாம் குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் கட்டாயம் இருக்கும். மதுப்பழக்கத்தை விடுவதற்கு பதற்றம், சுயபச்சாதாபம், சுய வெறுப்பு போன்ற இயல்புகள் தடையாக இருப்பது இயல்பே. பலரும் இவையெல்லாம் இருப்பதால்தான் மதுவை நாடுகிறார்கள். ஆனால், குடிப்பழக்கம் மேலும் மேலும் அவர்களின் மரியாதையை சமூகத்தில் குறைக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. `சுயமரியாதைதான் நம் பலம்’ என்பதை அழுத்தமாக உணந்துவிட்டால், எளிதாக விடுபட்டுவிடலாம். ஆனால், உங்கள் மேலான மரியாதையையும் ஒரே நாளில் கொண்டு வந்துவிட முடியாது. அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றலாம். அவை... 

* ஆரோக்கியமான இலக்குகளை அடைவதை லட்சியமாகக்கொண்ட, அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிற புதிய நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள், நீங்கள் யார், உங்கள் அருமை என்ன என்பது புரிந்தவர்களாக இருப்பது நல்லது.

* பழைய, இயல்பான, ஆரோக்கியமான தோற்றத்தைத் திரும்பக் கொண்டு வாருங்கள். அது, உங்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்; உங்கள் தோற்றமே மற்றவர்களிடம் உங்களுக்கான மரியாதையை ஏற்படுத்தும்; அவர்களின் செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.

* சவால்விடுகிற மாதிரியான பொழுதுபோக்குகள், செயல்களில் ஈடுபடுங்கள். அது, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதாக இருக்கலாம்; இது வரை சென்றிருக்காத புதிய இடங்களுக்குப் பயணம் செல்வதாகவும் இருக்கலாம். 

* உங்களை நீங்களே முழுமையாக உணர்ந்துகொள்ள, உங்கள் எண்ணங்களை அறிந்துகொள்வதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். 

* உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள். வார இறுதி நாள்களை சமூக சேவையில் ஈடுபடுவது, பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வது எனச் செலவிடுங்கள். யாரோ ஒருவரின் வாழ்க்கைக்கு உதவுவதற்கு உங்களால் ஆன அத்தனை உதவிகளையும் செய்யுங்கள். 

விஷத்தை விலக்கி, பாலோடு இணைந்திருங்கள்! 

குடிப்பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள்! இதற்கு, `உங்கள் வாழ்க்கையில் எதிர்மறைப் பார்வையை ஏற்படுத்தும் மனிதர்களிடமிருந்து விலகி இருங்கள்’ என்றும் அர்த்தம் கொள்ளலாம். அதற்காகச் சண்டைபோட்டுக்கொண்டு அவர்களைப் பிரிய வேண்டும் என்பதல்ல. நாகரிகமாக அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.  `மச்சான்... நம்ம பாலாஜி ஃபாரின் போறான்டா. அதுக்காக சோழாவுல ஒரு பார்ட்டி. கண்டிப்பா வரணும்டா...” என நண்பர் அழைக்கிறாரா? `அடடா... அன்னிக்கி எங்க கம்பெனியில ஆடிட்டிங்டா... முடியறதுக்கே ராத்திரி 11 மணி ஆகிடும்’ என்றோ, வேறு சொந்தக் காரணங்களைச் சொல்லியோ தவிர்த்துப் பழகலாம். இது ஒரு கட்டத்தில், குடிக்க அழைத்தால் நீங்கள் வர மாட்டீர்கள் என்கிற எண்ணத்தை ஆழமாக அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். அது போன்ற நண்பர்களுக்குப் பதிலாக தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும், தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சிப்பவர்களோடு நட்புகொள்ளுங்கள். உங்களை நேசிக்கிறவர்கள், நீங்கள் ஆரோக்கிய வாழ்க்கையை வாழ உங்களை உற்சாகப்படுத்திகிறவர்கள் சுற்றிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.   

மனநிறைவைக் குறைக்காதீர்கள்!

குடிப்பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் பயணத்தில், கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த இடத்துக்கு வந்ததற்காக கைதட்டி, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். `பரவாயில்லையே.... ஒரு மாசமா கடைப் பக்கம் போகாம இருந்துட்டோம்’ என்று ஒரு ஷொட்டு கொடுத்துக்கொள்ளுங்கள். இது பெருமைப்பட்டுக்கொள்ளும் தருணம்தான். என்றாலும், தேங்கி நிற்காமல், வெற்றியை அடையும் வரை பயணம் செய்யுங்கள். வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் இலக்கை நோக்கிய அடிகளை அழுத்தமாக எடுத்து வைத்து, அதில் உங்கள் செயல்களைத் தீவிரப்படுத்துங்கள். 

நன்றி சொல்ல மறக்காதீர்கள்!

குடிப்பழக்கத்திலிருந்து மீள, நன்றி சொல்லுதல்கூட உதவும்! மாலையில் நண்பர்களோடு சேர்ந்தோ, தனியாகவோ குடிப்பதற்காக நீங்கள் போகப் போவதில்லை. ஆக, அந்த நேரம் லட்டு மாதிரி உங்களிடம் இருக்கிறது. அந்த நேரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு நாளில் உங்களுக்கு நடந்த நல்ல சம்பவங்களுக்கு, அதற்கு உதவியவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாக அதைப் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் ஒரு கோளாறு. அதனால், உங்கள் அலுவலகப் பணி தாமதமாகியிருக்கலாம். உங்கள் நண்பர் உதவியால், அது சீராகியிருக்கலாம். வீட்டுக்கு வந்ததும் போனை எடுங்கள். அந்த நண்பரிடம் பேசுங்கள். `நல்ல உதவி செஞ்சே கோபால்! ஆபிஸ்ல சொல்ல மறந்துட்டேன். தேங்க்ஸ்பா’ என ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்களேன். அந்த நண்பரோடு உறவு வலுப்பெறும். உங்களுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும். `ஏம்ப்பா... பாவக்கா குழம்புன்னாலே எனக்குப் பிடிக்காது. இன்னிக்கி கசப்பே தெரியலைப்பா. குழம்பு அவ்வளவு சூப்பர்!’ உங்கள் மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்களேன். குடும்ப உறவு இனிக்கும். அது இதுவரை அனுபவிக்காத புது போதையை உங்களுக்குத் தரும். 

ஊன்றுகோல் வேண்டாமே!

குடிப்பழக்கம் வேண்டாம் என முடிவெடுத்து, அதை நடைமுறைப்படுத்தும்போதுதான் சில புதிய சிக்கல்கள் உருவாகும். `நல்ல விஷயம்... நீ என்ன பண்றேன்னா, செங்கல்பட்டுல ஒரு ரீஹேபிட்டலைசேஷன் சென்டர் இருக்கு... அங்கே போய் பாரு!’ என்று உங்கள் நண்பரோ, உறவினரோ ஒரு அட்ரஸை நீட்டலாம். பாண்டிச்சேரிக்குப் போகும் வழியில் உள்ள அய்யனார் கோயில் ஒன்றில் கயிறு கட்டிக்கொண்டால், குடிக்கும் எண்ணமே வராது என்று யாராவது சொல்லலாம். இதையெல்லாம் உங்களின் மேல் இருக்கும் அக்கறையின் காரணமாக அவர்கள் சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அது போதும். அதே நேரத்தில், குடிப்பழக்கத்தை விடும் முயற்சியில் சொந்தக் காலில் நில்லுங்கள்; நீங்கள்தான் அதை செய்யப் போகிறீர்கள் என்பதை அழுத்தமாக நம்புங்கள். 

வாழ்க்கையின் அர்த்தம் எதில் என்பதைக் கண்டுபிடியுங்கள்! 

குடிப்பதை நிறுத்திய சில நாள்களிலேயே எதையோ பறிகொடுத்தது போல உணர ஆரம்பிப்பீர்கள். `எதற்காக வாழ்கிறோம்?’ என்பது ஒட்டுமொத்த மனிதர்களுக்குமான பொதுவான கேள்வி. பலருக்கும் இலக்குகள் இல்லை; வாழ்க்கையில் எதையாவது அடைய வேண்டும் என்கிற லட்சியம் இல்லை. குறைந்தபட்சம் குடும்பப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம்கூட இருப்பதில்லை. இது, அதைப் பற்றி நீங்கள் தீவிரமாக யோசிக்கவேண்டிய நேரம். யாருக்காக, எதற்காக வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். அதை நோக்கிப் பயணப்படுங்கள். 

மருத்துவ உதவியை நாடுவது தவறில்லை!

ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறாமலோ, நிபுணர் யாரிடமாவது கவுன்சலிங் பெறாமலோ சுயமாக, நீங்களாகவே குடிப்பழக்கத்தை நிறுத்தலாமா? நிச்சயம் நிறுத்தலாம். இருந்தாலும், அவையும் உதவும். திடீரென குடிப்பழக்கத்தை நிறுத்தும்போது அது உடலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக குடித்துவிட்டு, திடீரென நிறுத்துபவராக இருந்தால் அவருக்கு உடல் நடுக்கம் (Convulsion), மனப்பிரமை (Hallucination), இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் வலிகூட ஏற்படலாம். அதனால், மருத்துவ உதவி தேவைப்படும்பட்சத்தில் அதை தேடிப் போவதில் தவறே இல்லை. மருத்துவ உதவி பெறுங்கள். 

எதிர்கால வாழ்க்கை இனிதாக அமையட்டும்! ஆல் தி பெஸ்ட்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு