Published:Updated:

மனமே நலமா?-14

அற்பப் பொருளுக்கு ஆசைப்படுதே மனம்!

பிரீமியம் ஸ்டோரி

 முன் கதைச் சுருக்கம்

மனமே நலமா?-14

மகிழ்ச்சி, சிரிப்பு, சோகம், துக்கம் என எந்த ஓர் உணர்ச்சியும் இன்றி இருப்பதாக தன் தாயை டாக்டர் செந்தில்வேலனிடம் அழைத்துவருகிறான் மகன். அந்தப் பெண்மணிக்கு, சிறுவயது முதல் விரும்பியது எதுவும் நடக்கவில்லை. திருமணம் ஆன புதிதில் மாமியாரின் கொடுமை... உணவகத்துக்கு அழைத்துச் சென்றால்கூட கணவன் என்ன வேண்டும் என்று கேட்டது இல்லை... எதையும் கண்டுகொள்வது இல்லை என்ற ஆதங்கம். இவ்வளவு விரக்திகள் ஒன்றுசேர்ந்து ஒரு கட்டத்தில் எதிலும் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. சிரிப்பை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வாழ்ந்து வருகிறார். பிள்ளைகள் வளர்ந்து பெரிய வேலைக்குச் செல்கின்றனர். தங்கள் தாய் விரும்பிக் கேட்டதை வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு, பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது. ஆனாலும் அந்தத் தாய் பழையபடியே இருக்கிறார். எதையும் பொருட்படுத்துவது இல்லை.

மனமே நலமா?-14
##~##

பிரபல மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிவருபவர், 55 வயதான நிர்மலா ராணி. எம்.எஸ்.சி., படித்து பி.ஹெச்.டி. முடித்தவர். 'வி.பி. வருகிறார்’ என்றால் அந்த இடமே 'கப்சிப்’ என்று இருக்கும். அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டுடன் இருப்பார். அனைவருக்கும் புரியும் வகையில் பாடம் நடத்துவார். மிகவும் அன்பானவர். கல்லூரியில் அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். வி.பி. வகுப்பு என்றால், மாணவர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். அவர் சார்ந்த துறையில் ஆழ்ந்த அறிவுகொண்டவர். பல கருத்தரங்குகளுக்கு அவரை அழைப்பார்கள். நிர்மலா ராணியின் கணவர், அரசு நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கை நிறையச் சம்பளம், மரியாதைக்குரிய குடும்பம்.

நிர்மலாவை, என் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார் அவரது கணவர்.  

'நாங்க ரொம்ப நல்ல நிலையில் இருக்கோம். பிள்ளைங்களும் நல்ல நிலையில் இருக்காங்க. ஆனா, என் மனைவிக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கு டாக்டர். வெளியே சொல்லவே வெட்கமா இருக்கு. என்னால் இவளைக் கட்டுப்படுத்த முடியாமப் போனதால்தான் கூட்டிட்டுவந்தேன்'' என்றவர், தொடர்ந்து பேசினார். ''என் மனைவி எங்கே போனாலும் அங்கிருந்து எதையாவது எடுத்துட்டு வந்துடுறா. பழைய சீப்பு, உடைஞ்ச பேனா, பொட்டு, பேப்பர் வெயிட்னு இவ எடுத்துட்டு வர்ற பொருட்கள் யாருக்குமே பிரயோஜனப்படாது. எத்தனையோ முறை எடுக்காதேனு சொல்லிட்டேன். இவ, எடுத்திட்டு வந்த பொருளையெல்லாம் தூக்கிப்போட்டாலும், அந்தக் குப்பைகளைத் திரும்பவும் வீட்டுக்கு எடுத்துட்டு வர்றதோட, அதை நினைச்சு நிம்மதி இல்லாமத் தவிக்கிறா. 'எவ்வளவு பெரிய வேலையில் இருக்கோம். எல்லாருக்கும் நம்ம மேல் நல்ல அபிப்ராயம் இருக்கு. இப்படிப்பட்ட நாம திருடிட்டோமே’னு நினைச்சு அழறா. எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கணும்னு டார்ச்சர் பண்றா. 'இந்தப் பொருள் தேவையில்லாததுதான். யாரும் தேட மாட்டாங்க. தூக்கிப்போட்டுடலாம்’னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. 'எடுத்த இடத்திலேயே வெச்சாதான் என்னால் நிம்மதியா இருக்க முடியும், திரும்பவும் என்னை அந்த இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க’னு சொல்றா. இதுக்காகவே, சொந்தக்காரங்க, நண்பர்கள் வீட்டுக்கு இரண்டு முறை போயிருக்கோம். இப்படி, திரும்ப அந்த இடத்துக்குப் போய் வைக்கும்போது மாட்டிக்கிட்ட தர்மசங்கடமான சம்பவமும் நடந்திருக்கு. 'தான் செய்றது தப்பு’னு தெரிஞ்சும் இவளால் கட்டுப்படுத்த முடியலை' என்றார்.

நிர்மலாவிடம் பேசினேன். 'ஏன், இந்தப் பொருளையெல்லாம் எடுக்கத் தோணுதுன்னே தெரியலை. எதையாவது எடுக்கணும்னு நினைச்சுட்டா, அதை எப்படியாவது எடுத்திடறேன் டாக்டர். என்னால என்னைக் கட்டுப்படுத்த முடியலை. இப்பக்கூட உங்க டேபிள்ல இருக்கிற பேப்பர் வெயிட்டைத் தூக்கணும்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. நீங்க அந்தப் பக்கம் திரும்பினதும், இரண்டு மூன்று தடவை எடுக்க முயற்சியும் செஞ்சிட்டேன்' என்றார்.

நிர்மலாவுக்கு என்ன பிரச்னை? தேவையற்ற பொருட்களை எடுக்கத் தூண்டுவது எது? நிர்மலாவுக்கு என்ன ஆயிற்று? உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள். 

டாக்டர் செந்தில்வேலன் பதில்கள்

மனமே நலமா?-14

இந்தப் பெண்மணிக்கு ஏற்பட்டிருக்கும் மனரீதியான பிரச்னைக்கு 'டிஸ்தைமியா’ (Dysthymia)  என்று பெயர். தொடர்ந்து வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகளாலும், தோல்விகளாலும், நிறைவேறாத ஆசைகளாலும், பிறராலும் நசுக்கப்படும்போது ஒரு கட்டத்தில் மனது சந்தோஷப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிடுகிறது. நிலைமை மாறும்போதும்கூட அவர்களால் எந்தவிதத்திலும், எந்த விஷயத்திலும் சந்தோஷப்பட முடியவில்லை. எதிலும் ஆர்வம் இல்லாமல் கடமைக்காக வாழ வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது. பல முறை முயற்சி செய்தும் வாழ்க்கையில் நல்லது நடக்காததால், வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. எந்தக் காலத்திலும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போவதால் இப்படி ஏற்படுகிறது. உதாரணத்துக்கு...

ஒரு பட்டனை அழுத்தினால், கூண்டின் கதவு திறக்கும் வகையில் செய்யப்பட்ட கூண்டில் எலி அடைக்கப்பட்டிருக்கிறது. கூண்டைச் சுற்றிச்சுற்றி அலையும் எலி, ஒரு கட்டத்தில் தெரியாமல் அந்த பட்டனை அழுத்தும். உடனே கூண்டு கதவு திறந்துகொள்ளும். உடனடியாக அது வெளியேற முயற்சித்து, பட்டனில் இருந்து காலை நகர்த்தும். உடனே கூண்டு மூடிக்கொள்ளும். இப்படிப் பல முறை அது முயற்சி செய்துகொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அது பட்டன் அழுத்துவதை நிறுத்திவிடும். அந்த நேரத்தில் கூண்டின் கதவைத் திறந்தாலும்கூட அது வெளியேறாது. 'என்ன ஆனாலும் கதவு பூட்டிக்கொள்ளும், இதற்கு ஏன் முயற்சிக்க வேண்டும்’ என்று ஒதுங்கியே இருக்கும். இதேபோன்ற மனநிலைதான் இந்தப் பெண்மணிக்கும். பல காலம் கஷ்டத்திலேயே இருந்துவிட்டதால், வாழ்க்கையில் நல்ல நிலை வரும்போதுகூட மூளை தன் சிந்தனையை மாற்றிக்கொள்ளாமல், அதே பழைய நிலையிலேயே தொடர்கிறது. இதற்கு, 'லேர்ண்ட் ஹெல்ப்லெஸ்னெஸ்’ என்னும் உளவியல் காரணம்தான்.

இவருக்கு சப்போர்ட்டிவ் 'சைக்கோதெரப்பி’ அளித்து அவரது மனதை வலிமை அடையச் செய்தோம். நேர்மறையான எண்ணங்கள் உற்பத்தியாகும் வழிமுறைகள் சொல்லித்தரப்பட்டன. அதற்கு மேல் மூளையின் 'செரட்டோனின்’ ரசாயனப் பொருளின் அளவை அதிகப்படுத்துவதற்கான மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டன. இரண்டு மாதத்திலேயே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பல வருடங்கள் கழித்து அந்தத் தாயின் முகத்தில் பூத்த புன்னகை, குடும்பத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

வாசகர் கடிதம்

மனமே நலமா?-14

உணர்வுகளை எல்லாம் இழந்த பின் மீண்டும் தூண்டுவது கடினம்.  என்னதான் கஷ்டப்படும் குடும்பமானாலும், அவ்வப்போது சின்னச் சின்ன சந்தோஷங்களையாவது கணவர் கொடுத்திருக்கவேண்டும்! இளமை போனால் வருமா?  தெருவோரவாசிகள், எப்போதும் வாழ்வை மிக லேசாக்கி சந்தோஷமாக அனுபவிப்பார்கள். போனது போகட்டும். 'நாம் நல்ல நிலைக்கு வந்துவிட்டோம்.  எங்கள் சந்தோஷத்துக்காக இதை அனுபவியுங்கள்’ என்று பிள்ளைகள் பாசத்தைப் பொழிந்து, முன்பு அவர் ஆசைப்பட்டவற்றையெல்லாம் நிறைவேற்றலாம். மெல்ல மெல்ல மனம் மாறுவார்.  கூடவே மெடிக்கல் கவுன்சிலிங்கும், சிகிச்சையும் மீண்டும் வாழ்வின் மீதான பற்றுதலைத் தந்துவிடும்.

- ஸ்ரீதேவி ராஜன், திருவிடைமருதூர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு