Published:Updated:

ஒரே ஊசி... 900 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு..! - என்ன நடந்தது பாகிஸ்தானில்?

``1,112 பேருக்கு இதுவரை ஹெச்.ஐ.வி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் 900 பேர்"

ஹெச்.ஐ.வி
ஹெச்.ஐ.வி

ஏப்ரல் மாதத்தின் முடிவில், `பாகிஸ்தானில் 700 குழந்தைகள் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற உலகையே அதிரவைத்த செய்தி வெளிவந்தது. பாகிஸ்தானின் லர்கானாவைச் சேர்ந்த குழந்தைகள் நலமருத்துவர் முசாஃபர், ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதே இதற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அலட்சியம், கொலை முயற்சி ஆகிய குற்றங்களின் கீழ் மருத்துவர் முசாஃபர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவர் முசாஃபர்
மருத்துவர் முசாஃபர்
The New York Times

ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால், விடுதலை செய்யப்பட்டார் முசாஃபர். சட்டபூர்வமான விடுதலைக்குப் பின்பு தனது மருத்துவச் சான்றிதழைப் புதுப்பித்த முசாஃபர், லர்கானா மாவட்டத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் மற்றொரு அரசு மருத்துவமனையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில், `நான் ஒரே ஊசியை மீண்டும் பயன்படுத்தவில்லை' எனக் கூறியுள்ளார் முசாஃபர்.

சுகாதாரப் பணியாளர்கள் தெரிவிக்கும்போது, ``இந்த அளவுக்கான பாதிப்புக்கு, முசாஃபர் மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அப்பகுதியில் சுகாதாரமற்ற சலூன்கள், அப்புறப்படுத்தப்படாத ரேஸர்கள், அங்கீகரிக்கப்படாத பல் மருத்துவமனைகள், சுத்திகரிக்கப்படாத கருவிகள் என ஹெச்.ஐ.வி. பரவ பல முகாந்திரங்கள் இருந்திருக்கின்றன'' எனத் தெரிவித்துள்ளனர்.

இம்தியாஸ் ஜல்பாணி
இம்தியாஸ் ஜல்பாணி
The New York Times

பாதிக்கப்பட்டவர்களில் 10% பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இந்த அளவுக்குப் பிரச்னை இருந்தும், இப்போதும்கூட அரசும் மக்களும் இதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் ஜல்பாணி என்பவருக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில், 4 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருந்துள்ளது. அதில் கடைசி இரு குழந்தைகள் (3 வயதான குழந்தை - 14 மாத குழந்தை) , பாதிப்பு தீவிரமடைந்து இறந்தே விட்டனர்.

லர்கானாவைச் சேர்ந்த மருத்துவரான இம்ரான், `மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய சீர்கேடுகள் வந்தால் மட்டுமே இங்குள்ள அரசு மருத்துவர்கள் இயங்குவார்கள். இல்லையெனில் அரசு மருத்துவமனைகளாலும், மருத்துவர்களாலும் எந்தப் பயனுமே இல்லாமல்தான் இருக்கும்' எனப் பத்திரிகையாளர்களிடம் கடுமையாகச் சாடியுள்ளார்.

பாகிஸ்தானில் யுனிசெஃப் அமைப்பின் களப்பணி
பாகிஸ்தானில் யுனிசெஃப் அமைப்பின் களப்பணி
The New York Times
Vikatan

சோகம் என்னவென்றால், லர்கானாவின் கால் பகுதி மக்கள் கூட ஹெச்.ஐ.வி பரிசோதனைக்கு இன்னும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்கின்றனர் சுகாதாரப் பணியாளர்கள். அப்படியிருந்தும், 1,112 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும், 900 பேர். லர்கானாவைச் சேர்ந்த அனைவரும் ஹெச்.ஐ.வி-க்கான பரிசோதனை மேற்கொள்ளும்போது, இந்த எண்ணிக்கை உயரலாம் என அச்சம் எழுந்துள்ளது.