Published:Updated:

இயற்கை வழி வைத்தியம்... மலச்சிக்கல் போக்கும் உணவுப் பழக்கங்கள்!

இயற்கை வழி வைத்தியம்... மலச்சிக்கல் போக்கும் உணவுப் பழக்கங்கள்!
இயற்கை வழி வைத்தியம்... மலச்சிக்கல் போக்கும் உணவுப் பழக்கங்கள்!

ணவு தன்னிடம் உள்ள சத்துகளையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு வெறும் சக்கையாகப் பெருங்குடலை வந்து சேரும். அந்தச் சக்கையில் 80 சதவிகிதம் தண்ணீர் நிறைந்திருக்கும். அந்தத் தண்ணீரில் பெரும்பகுதியை உறிஞ்சிவிட்டு, மலத்தை வெளியேற்ற வேண்டிய பணி பெருங்குடலின் தலையாயப் பணியாகும். ஆனால், சில நேரங்களில் பெருங்குடலில் உள்ள தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக்கொள்வதால் மலம் இறுகி கெட்டியாகி சிக்கலை ஏற்படுத்திவிடும். இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்குப் பெருங்குடலை காரணம் சொல்லிவிட்டு நாம் ஒதுங்கிவிட முடியாது. நாம் உண்ணும் உணவுகள் மிக முக்கியக் காரணமாக அமைகிறது. அதாவது கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், பரோட்டோ போன்ற உணவுகளை உண்பதால் வரும் பிரச்னை. அதுமட்டுமல்லாமல் தண்ணீர் குறைவாகக் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைவாக உண்பது, பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளை உண்ணாமலிருப்பது போன்றவையும் முக்கியக் காரணங்களாகும். ஆக, மலச்சிக்கல் ஏற்பட மாறிவரும் உணவுப்பழக்கம் மிக முக்கியக் காரணமாக இருக்கும். சூழலில் அன்றாட உணவில் நாம் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அடிப்படையில் நிறையத் தண்ணீர் அருந்த வேண்டியது மிகவும் அவசியம். மூன்றுவேளை உணவில் ஒருவேளை பழ உணவுகளாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இரவு உணவு அப்படி இருந்தால் மிகவும் சிறப்பு. 

இந்த உணவுப்பட்டியலில் பப்பாளி, கொய்யாப்பழம், மாதுளை, வாழைப்பழம் போன்றவை இடம்பெற்றால் மிகவும் சிறப்பு. நார்ச்சத்து நிறைந்த பேரிக்காய், ஆப்பிள், பிளம்ஸ் போன்றவை மிகவும் நல்லது. பலாப்பழத்திலும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இது மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பதுடன் பெருங்குடலை சுத்தம் செய்யும் பெரும்பணியைச் செய்துவிடும். 

வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம் போன்றவையும் மலச்சிக்கல் பிரச்னை வராமல் காத்துக்கொள்ளும். அத்திப்பழம், பேரீச்சம்பழம் போன்றவையும் மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கச் செய்யும். 

இரவு முழுக்க நீரில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாப்பிடுவதன்மூலம் பேரீச்சம்பழத்தின் முழுப் பலனையும் பெற முடியும். 

தினசரி உணவில் முளைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முருங்கைக்கீரை போன்றவற்றை தினம் ஒரு கீரை எனச் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. அவ்வப்போது அகத்திக்கீரையும் சாப்பிடுவது நல்லது. 

வடை, போண்டா, பஜ்ஜி, பூரி போன்ற எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்த்து முளைகட்டிய தானியங்கள், கேழ்வரகு - கம்பு போன்ற சிறுதானிய உணவுகளை உண்பதன்மூலம் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம். இதேபோல் கடலை, பருப்பு போன்றவற்றைத் தவிர்ப்பதும் கைகொடுக்கும். 

காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் அருந்தக்கூடிய காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்து நீராகாரம், நீர் மோர், இளநீர், பழச்சாறுகளை அதிகமாகக் குடிப்பது மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும். இஞ்சி - எலுமிச்சைச் சாறு கலந்த பானமும், புளி - கருப்பட்டியால் ஆன பானகமும் நல்லது. 

இரவில் கடுக்காய் கஷாயம் அல்லது திரிபலா சூரணம் சாப்பிட்டு வருவதன்மூலம் மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலோ, வராமல் முன்கூட்டியே தடுக்கத் திராட்சை நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது. திராட்சைப் பழங்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவதன்மூலம் பலன் கிடைக்கும். மேலும் காய்ந்த திராட்சை ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு வந்தால் மறுநாள் காலை தாராளமாக மலம் இறங்கும். சிறுகுழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் காய்ந்த திராட்சையை நீரில் ஊற வைத்து அதை நசுக்கி அதன் சாற்றைக் குடிக்கக் கொடுத்து வந்தாலே பலன் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னைக்குப் பெரிய செலவு வைக்காத எளிய மருந்து திராட்சை என்றால் அது மிகையாகாது. 

சப்போட்டாவும்கூட நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இரவு கண்ணுறங்குவதற்குமுன் ஒரு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் நிம்மதியான தூக்கம் வருவதோடு, காலையில் கண் விழித்ததும் தாராளமாக மலம் இறங்கும்.