Published:Updated:

மனமே நலமா 15

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுகுமாரா?

மனமே நலமா 15

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுகுமாரா?

Published:Updated:

முன் கதைச் சுருக்கம்: கல்லூரி துணை முதல்வரான நிர்மலாவுக்கு ஒரு வித்தியாசமான பழக்கம். நண்பர்கள், உறவினர்கள் வீடு, அலுவலகத்தில் பார்க்கும் தேவையற்ற பொருட்களை எல்லாம் திருடி, எடுத்து வந்துவிடுவார். வீட்டுக்குச் சென்றதும், அதை மீண்டும் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும் என்று நினைத்து, அசடு வழிந்தபடியே அந்த இடத்துக்கு செல்வார். 'உயர்ந்த நிலையில் இருக்கிறோம், இப்படி செய்துவிட்டோமே’ என்று தான் செய்த தவறை நினைத்து வருந்துவார். எவ்வளவோ முயற்சித்தும் இந்தப் பழக்கத்தை அவரால் விட முடியவில்லை. தானும் வருந்தி மற்றவர்களையும் கஷ்டப்படுத்தும் நிர்மலாவை டாக்டரிடம் அழைத்துவருகிறார்கள்.

மனமே நலமா 15
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருப்பூரில் தனியார் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் சுகுமாருக்கு வேலை. 10-ம் வகுப்பு வரை படித்திருக்கிறான். மாதம் 7,000 ரூபாய் சம்பளம். சில வருடங்களுக்கு முன்பு அப்பா எய்ட்ஸ் நோயால் இறந்துவிட, திருப்பூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அம்மாவுடன் வசித்துவந்தான்.

தினமும் அலுவலகத்துக்கு பஸ்சில் சென்றுவந்த சுகுமாருடன், இன்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியும் பயணித்துவந்தார். சுகுமாரின் நண்பர்கள், இவனையும், அந்தப் பெண்ணையும் இணைத்துக் கிண்டல் செய்தனர். ஆரம்பத்தில் இதைத் தடுத்த சுகுமார் நாளடைவில், 'அந்தப் பெண்ணுக்கு எதிரிலேயே என்னையும் அவளையும் சேர்த்துக் கிண்டல் செய்யுங்கடா’ என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டான். இப்படியே ஒரு வருடம் கிண்டலும் கேலியுமாகத் தொடர்ந்திருக்கிறது. இதை எல்லாம் அந்த மாணவி கண்டுகொள்ளாததுடன், சுகுமாரையும் அவனது நண்பர்களையும் திரும்பிக்கூடப் பார்த்தது இல்லை.  

சில தினங்களுக்கு முன்பு, சுகுமார் பஸ்சை விட்டு இறங்கும்போது அந்தப் பெண், இவனைத் திரும்பிப் பார்த்து சிரிக்க, சுகுமாருக்கு ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் பதற்றமும் படபடப்பும் ஏற்பட்டு, உடலெங்கும் வியர்த்துக்கொட்டியது. அதன் பிறகு, எந்த ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை. இரவில்கூட நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. 'அந்தப் பெண்ணோட அப்பா, அம்மா அவளை எப்படி எல்லாம் வளர்த்திருப்பாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கவைச்சிருப்பாங்க. எத்தனை கனவு கண்டிருப்பாங்க. நானோ வெறும் பத்தாவதுதான். எங்க அப்பா எய்ட்ஸ் நோயால இறந்தவராச்சே... நம்மளப் போய் அந்தப் பெண் காதலிச்சா, அது சரியா இருக்குமா?’ என்று இரவு முழுக்க அந்தப் பெண்ணைப் பற்றியே சிந்தித்து, வேதனையிலும் குற்ற உணர்ச்சியிலும் தவித்தான்.  

அடுத்த நாள் காலை வழக்கம்போல வேலைக்குப் புறப்பட்டு, பஸ் நிறுத்தம் வரை சென்றவனுக்கு, அதற்கு மேல் தொடர முடியவில்லை. தொலைவில் பஸ் வருவதைப் பார்த்ததுமே பதற்றம் ஏற்பட்டது. வியர்த்து வழிய, அந்த இடத்தைவிட்டே ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தான். 'பையன் உடம்புக்கு ஏதோ பிரச்னைபோல இருக்கு. அதான் வந்துட்டான்’ அன்று அவனது அம்மாவும் கண்டுகொள்ளவில்லை.

மூன்று, நான்கு நாட்கள் ஆகியும் சுகுமார் வேலைக்கு வராததால், அவனது நண்பர்கள், வீட்டுக்கு வந்து பார்த்தனர். காரணத்தை அவர்களிடம் சுகுமார் சொல்ல, 'லூஸாடா நீ? அந்தப் பொண்ணு ஐ லவ் யூ-வா சொல்லுச்சு? சும்மா திரும்பித்தானே பார்த்தா. அவ திரும்பிப் பார்க்கணும், உன்னை லவ் பண்ணணும்னுதானேடா இவ்வளவு நாளா அலைஞ்சே... இப்போ இப்படிப் பயப்படுறியே’ என்று அவனை ஒருவழியாக சமாதானப்படுத்தி வேலைக்கு அழைத்துச்சென்றனர். தைரியமாக பஸ் ஏறியவன், அந்தப் பெண்ணைப் பார்த்ததும் நிலை தடுமாறிவிட்டான். பதற்றத்தில் வாய் குழற, கைவிரல்கள் தந்தியடிக்க... அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி ஓடிவந்துவிட்டான்.

அதன்பிறகு வீட்டுக்குச் சென்றவனால் பதற்றத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. இங்கும் அங்கும் நடந்திருக்கிறான். பல்வேறு குழப்பங்கள் மனதில் ஓட என்ன செய்வது என்று அறியாது தூக்குக் கயிற்றை எடுத்து மாட்டிக்கொண்டான். கடைசியில் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சுகுமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், மனநல மருத்துவரிடம் காண்பிக்கும்படி பரிந்துரைக்க, அவனது தாயார் என்னிடம் அழைத்து வந்தார்.

சுகுமாருக்கு ஏற்பட்டிருப்பது அட்ஜெஸ்ட்மென்ட் டிஸ்ஆர்டர். அதாவது, திடீரென ஏற்படும் சூழ்நிலையை அவனால் கையாள முடியாத நிலை. சுகுமார் மனதின் ஒரு பகுதி அந்தப் பெண்ணை காதலிக்கும்படி தூண்டிக்கொண்டிருந்தது. அந்த பெண் இவனைப் பார்த்து சிரிக்கவே, காதலில் வெற்றி கிடைத்துவிடும் என்ற நிலையில் அவனது எதார்த்த வாழ்வு கண் முன் தெரிந்தது. தன் தகுதியையும், திறமையையும், அந்த பெண்ணின் தகுதியையும், திறமையையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறான். 'இதுக்காகத்தானே ஆசைப்பட்டே. இப்ப அவளும் உன்னை விரும்புறானு தெரியுது. இதுல என்ன தப்பு இருக்கு? துணிஞ்சு அவளைக் காதலி!’ என்று அவன் மனம் ஊக்கப்படுத்துகிறது. 'அப்பா செய்த தவறால் குடும்பமே இப்படிக் கஷ்டப்படுது. இந்த நிலைமையில படிக்கிற பெண்ணோட வாழ்க்கையை இப்படிக் கெடுக்கிறியே!’ என்று அவனுடைய மனசாட்சி அவனைக் குற்றம்சாட்டுகிறது. அதிக அளவில் வேலை செய்ததுடன் தண்டிக்கவும் ஆரம்பிக்கிறது. மனசாட்சியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளான். அவன் பதற்றத்தைப் போக்க, சரியாகத் தூங்குவதற்கு மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டது. அதனுடன், 'உனக்கு நல்ல சிந்தனை உள்ளது. எப்போது குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ நீ உண்மையில் நல்லவன்’ என்று அவனது மனதை ஊக்குவித்தேன். 'உன் மனதுக்கு எது சரியில்லை என்று படுகிறதோ அதைவிட்டுவிடுவது நல்லது. இல்லையென்றால் காலம் முழுக்க குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும்’ என்று ஆலோசனை அளித்தேன். மருந்து மாத்திரைகளுடன் அவனுக்கு சப்போர்ட்டிவ் சைக்கோதெரப்பி, தொடர் கவுன்சலிங் அளிக்கப்பட்டது. சுகுமார் தற்போது நல்லபடியாக வேலைக்குச் சென்றுவருகிறான். அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்ப்பது கூட இல்லை.

டாக்டர் செந்தில்வேலன் பதில்

மனமே நலமா 15

''அந்தப் பெண்மணிக்கு இருந்த பிரச்னைக்கு, 'க்ளப்டோமேனியா’ என்று பெயர். இது ஒரு வியாதி. 'இம்பல்ஸ் கன்ட்ரோல் டிஸ்ஆர்டர்’ என்னும் பிரச்னையில் இது ஒரு வகை. இவர்களுக்கு, பொருளை எடுக்க வேண்டும் என்ற தூண்டுதலைக் கட்டுப்படுத்த முடியாது. அறிவையோ, திறமையையோ, தகுதியையோ உபயோகித்து, காரண காரியத்தைப் புரிந்து கொண்டு இதனைக் கட்டுப்படுத்த முடியாது. திருடுவதற்கும் இந்த வியாதிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இந்த வியாதி உள்ளவர்கள் எடுக்கும் பொருளுக்கும், அவர்கள் அந்தஸ்துக்கும், தகுதிக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. ஸ்கெட்ச் பேனா, நகம் வெட்டி, பென்சில் என்று அற்பமான பொருட்களை எடுத்துவிட்டாலும், மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். ஆனால், திருடுவதில் இந்த இரண்டுமே இருக்காது. திருடுபவர்கள் ஒரு திருட்டில் ஈடுபடும்போது ஒரு பயன் இருக்க வேண்டும், லாபம் அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் விலை உயர்ந்த பொருட்களையே திருடுவர். எடுத்த பொருளை மீண்டும் வைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

இந்த வியாதியின் தன்மையைப் பற்றி அந்த அம்மாவுக்கு விரிவாக எடுத்துரைத்தேன். 'வருத்தப்பட வேண்டாம்... இதை சரிசெய்துவிடலாம்’ என்று ஆறுதல் கூறி சிகிச்சையைத் தொடங்கினேன். இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கு மூளையில் செரட்டோனின் என்ற வேதிப்பொருள் குறைவதும் முக்கியக் காரணம். அதை அதிகரிக்க மாத்திரை, மருந்து அளிக்கப்பட்டது. மேலும், அந்த அம்மாவுக்கு சப்போர்ட்டிவ் சைக்கோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு இப்போது பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ’பொருட்களை எடுத்தாக வேண்டும் என்ற உணர்வு இப்போது ஏற்படுவது இல்லை’ என்கிறார்.

மனமே நலமா 15

வாசகர் கடிதம்:

அற்பப் பொருளை எடுக்கும் பழக்கம் திடீரென்று வந்திருக்காது. அறியாத  வயதில் இந்தச்  செயலில் ஈடுபட்டிருக்கலாம். பெற்றோரோ, ஆசிரியரோ கவனிக்கத் தவறியிருக்கலாம். அல்லது தெரிந்திருந்தால் திருத்தியிருக்கலாம். இந்த அளவுக்குப் பிரச்னை வந்திருக்காது. நல்லது கெட்டதை உணரும் வயதில், தன் செயலை எண்ணி வருந்துகிறார். நிர்மலாவுக்கு என்ன பிரச்னை என்று ஆழ்மனப் பரிசோதனை செய்து கண்டறிந்து,  அதைச் சரிசெய்வது நல்லது.

- ஜி.மனோகரன், கச்சிராயபாளையம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism