Published:Updated:

சருமம், முடி, தேகம்... வலிமையாக்கும் ஏலக்காய்!

சருமம், முடி, தேகம்...  வலிமையாக்கும் ஏலக்காய்!
சருமம், முடி, தேகம்... வலிமையாக்கும் ஏலக்காய்!

ணவுக்கு மேலும் சுவையூட்ட நறுமணப் பொருள்களைப் பயன்படுத்துகிறோம். நறுமணப் பொருள்களில் தனித்துவமானது ஏலக்காய். இனிப்புகள், தேநீர், காபி... எனப் பலவற்றிலும் உபயோகிக்கப்படுகிறது. ஏலக்காயை வெறும் நறுமணம்கூட்டும் பொருள் என்று மட்டும் நாம் வரையறுத்துவிட முடியாது. அதனுள் நிறைய மருத்துவக் குணங்களும் புதைந்துகிடக்கின்றன. ஆயுர்வேத மருத்துவத்தில் அதற்கான குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. 

வகைகள் 

நிறத்தைப் பொறுத்தும், நறுமணம் அளிக்கும் குணத்தைப் பொறுத்தும் ஏலக்காய் இரண்டு வகைப்படும்.

பச்சை ஏலக்காய் 

தென்னிந்தியாவில் விளையும் இவ்வகை ஏலக்காய் நன்கு கொழுத்த பச்சை ஓடுகளைப் பெற்றிருக்கும். இதையே மிகச் சிறந்த தரமான வகை எனக் குறிப்பிடலாம். முழுதாகவும் பொடியாகவும் கிடைக்கும் இதன் ஓடு, நீண்ட நாள்களுக்கு வலுவாக இருப்பதால், விதைகளின் மணம் மாறாமல் இருக்கும். இது நறுமணத்துக்காகவும், இனிப்பு வகைகள் செய்வதற்கும் பயன்படும். இதை பால் பொருள்கள் சேர்க்கவும் பயன்படுத்தலாம். தேநீர், காபி, கேக் வகைகள், பிரெட் ஆகியவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

காவி ஏலக்காய்

இது, பச்சை ஏலக்காயைவிடப் பெரியதாகவும், ஓடுகளில் முடிபோன்ற அமைப்பையும் பெற்றிருக்கும். பார்ப்பதற்கு சிறிய தேங்காயைப்போல் தோற்றமளிக்கும். இதையும் நறுமணத்துக்காக பிரியாணி, கறி, கரம் மசாலா முதலியவற்றில் பயன்படுத்துவர். இதன் விதைகளில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து, ஈரப்பதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களால் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது.

பொடி ஏலக்காய் 

ஏலக்காய்களை நன்கு பொடியாக்கி நிறைய உணவு வகைகளில் உபயோகிக்கிறார்கள். ஆனால் முழு ஏலக்காயைவிட பொடியில் மணம் குறைவு. இந்தப் பொடி கடைகளில் கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள்
 

விக்கல் போக்கும்

இது நடுக்கத்தைப் போக்கக்கூடியது; விக்கலில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும். உடலில் ஏற்படும் தசைப்பிடிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெற்றுத் தரும்.

நச்சுத்தன்மை நீக்கும் 

இதில் இருக்கும் மினரல்கள், வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின் ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை. இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் தேவையற்ற யூரியா, கால்சியம் மற்றும் இதர நச்சுகளை நீக்கும். மகப்பேற்ருக்குப் பிறகு இதைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தலாம்.

ஆன்டிஆக்ஸிடன்ட்

இதில் இருக்கும் ஊட்டச் சத்துகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாகப் பயன்படுகின்றன. இவை உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதைத் தடுத்து இளமையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

மனஅழுத்தம் குறைக்கும்!

மனஅழுத்தத்தைக் குறைக்கும் இதன் குணம் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவந்தாலும், ஆயூர்வேத மருத்துவம், `ஏலக்காய் தேநீர் மன அழுத்தத்துக்கு நல்லது’ எனப் பரிந்துரைக்கிறது. இது, இயற்கையாக நச்சுத்தன்மையை நீக்கி, செல்களை மீண்டும் பொலிவுபெறச் செய்வதாலும் மனஅழுத்தம் குறையும்.

சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம்

இதில் காரத்தன்மை இருப்பதால், சளி மற்றும் காய்ச்சலைத்  தடுத்துவிடக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும்.

கிருமிகளில் இருந்து காக்கும்!

கிறுமித்தொற்று இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் எண்ணெய் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும்.

வாய் துர்நாற்றம் போக்கும்!

வாய் துர்நாற்றத்தையும் சரிசெய்யக்கூடியது இது. வாய்ப்புண்ணையும் சரிசெய்யும். இரண்டு ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றாலே துர்நாற்றம் நீங்கிவிடும்.

ஆஸ்துமாவுக்கு நல்லது!

ஆஸ்துமா இருக்கும் நோயாளிகளுக்கு இது மிகுந்த பயனைத் தரும். கக்குவான் இருமலுக்கும் மார்புச் சளிக்கும் நல்ல மருந்து.

பசியைத் தூண்டும் 

சிறிது ஏலக்காய்த் தூளை உணவில் சேர்த்தாலோ, விதைகளை மென்றுவந்தாலோ அது நன்கு பசியைத் தூண்டும்.

செரிமானத்தை எளிதாக்கும்

அஜீரணக் கோளாறு, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றுக்கு இது சிறந்த தீர்வைத் தரும். உணவை எளிதில் செரிக்க உதவும்.

உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து!

உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் தினமும் இதைச் சிறிது சாப்பிட்டு வந்தால், நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் சீராகும். இதனால் ரத்த அழுத்தம் விரைவில் குறையும்.

சருமம் காக்கும்! 

உணவுப் பொருள்கள் மற்றும் பானங்கள் தவிர்த்து இதை அழகு கூட்டவும் பயன்படுத்தலாம். இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமத்துக்கு நிறைய நன்மைகளைச் செய்யக்கூடியது. 
இது, நிறத்தையும் சருமத்தையும் பொலியச் செய்யும். ஏலக்காய் எண்ணெய் முகத்திலுள்ள கறைகளைப் போக்கி, பளிச்சிடும் சருமத்தைக் கொடுக்கும்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் 

இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. இது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

அலர்ஜிக்குத் தீர்வு

இதில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணம், சருமத்தில் ஏற்படும் அலர்ஜிக்கு எதிராகச் செயல்படும்.

நறுமணத்தில் பங்களிப்பு 

ஏலக்காயை நிறைய அழகுசாதனப் பொருள்களில் உபயோகிக்கின்றனர். இதன் நறுமணத்துக்காகவும், இனிப்பு மணத்துக்காகவும் இதையும் இதன் எண்ணெயையும் வாசனைப் பொருள்கள், சோப்பு, பௌடர் போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆன்டிசெப்டிக்காகவும் வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. இது பெர்ஃப்யூம்களில் கலக்கப்படுவது சரும நலனுக்கு நல்லது. ஏலக்காய் சேர்த்த அழகுசாதனப் பொருள்களை `அரோமா தெரப்பி பொருள்கள்’ எனலாம்.

இதழுக்குப் பாதுகாப்பு 

இதன் எண்ணெய் இதழில் பயன்படுத்தும் லிப் பாம் தயாரிக்கப் பயன்படுகிறது. இது உதடுகளைப் பாதுகாக்கும். 

கேசம் காக்கும்! 

நீண்ட, வலுவான கூந்தல்தான் பெண்கள் அனைவரும் விரும்புவது. ஏலக்காய், முடி வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்துக்கும் உதவும். இதில் இருக்கும் ஆன்டியாக்சிடேட்டிவ் குணம் முடியின் உச்சி முதல் வேர் வரை ஊட்டமளிக்கும். இதில் இருக்கும் ஆன்டிபாக்டீரியல் குணம் தலையை தொற்றுநோய்களில் இருந்தும் எரிச்சலில் இருந்தும் காக்கும். முடியின் வேர்களை வலுப்படுத்தும். கூந்தலுக்கு வலு, பளபளப்பைக் கொடுக்கும்.

எப்படித் தேர்ந்தெடுப்பது, பாதுகாப்பது?

இதன் விதைகள் கடைகளில் கிடைக்கும். இதன் மேல் ஓடுகள் சிறப்பு அங்காடிகளில் மட்டுமே கிடைக்கும். இனிப்பு மற்றும் நறுமணமான பூண்டு வகை உணவுகளைச் செய்ய பச்சை நிறத்திலுள்ள ஏலக்காயையே பயன்படுத்த வேண்டும். அதுதான் உணவுக்கு தன்னிகரற்ற சுவையைத் தரக்கூடியது. ஏலக்காய் பொடியைவிட முழு ஏலக்காயே நல்லது. பச்சை நிறம் கலந்தாற்போல் கால்பந்து வடிவத்தில் உள்ளதே உகந்தது. நுகரும்போது ஊசியிலை மரவகைப் போலவும் மலர்களைப் போலவும் நறுமணம் தர வேண்டும்.

ஏலப்பொடி தேவைப்பட்டால், முழு ஏலக்காயை இடித்து, பிரித்தெடுத்துக்கொள்ளலாம். பொடிக்கு சுவையை நீடித்து வைத்திருக்கும் சக்தி கிடையாது. ஆனால் முழு ஏலக்காய்க்கு நறுமணத்தை வருடக் கணக்காக நீடித்து வைத்திருக்கும் சக்தி உண்டு.

இது விலை உயர்ந்த வாசனைப் பொருள் என்பதால், பொடிக்கும்போது இதனுடன் மற்ற மலிவான பொருள்களைச் சேர்த்து விலையைக் குறைத்துக்கொள்கிறார்கள். இதன் மேல் ஓடுகளைப் பிரிக்கும்போது, அல்லது அரைக்கும்போது இதில் உள்ள முக்கியமான எண்ணெயின் பங்கு குறையும். அதனால் இதன் நறுமணமும் சுவையும் முழுவதுமாகப் போய்விடும்.

பாதுகாத்தல்

இதைச் சரியான முறையில் பாதகாத்தால் மட்டுமே நறுமணமும் சுவையும் நீண்ட நாள்களுக்கு இருக்கும். முழு ஏலக்காயைப் பாதுகாப்பதே சிறந்தது. பொடித்துதுவிட்டால் சுவையும் மணமும் போய்விடும். காற்றுப் புகாத, குளிர்ச்சியான இடத்தில் சேமித்து வைத்தால் ஒரு வருட காலம் வரை பாதுகாக்கலாம். காயவைத்த ஏலக்காய் துண்டுகளை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும். 

அதிக அளவில் நீண்ட நாள்களுக்கு சேமித்து வைக்க, பாலித்தீன் பைகளில் போட்டு மரப்பெட்டியில் வைப்பது சிறந்தது. பைகளில் வைப்பதற்கு முன்னர் பை ஈரமாக இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஈரமாக இருந்தால், இது கெட்டுவிடும். இதைப் பாதுகாத்து வைக்கும் இடம், இருட்டாக, ஈரப்பதமில்லாமல், சுத்தமாக, குளிர்ச்சியாக புழு, பூச்சிகளின் தொந்தரவில்லாமல் இதை வைக்கும் இடம் இருக்க வேண்டும். ஜன்னல்களுக்கு கொசு வலைகள் போட்டு பாதுகாத்தால் இதன் தரம் அப்படியே இருக்கும். இதை மற்ற வாசனைப் பொருள்களிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும்.

சில குறிப்புகள்...

இதை முழுதாகவோ, பொடித்தோ பல வகை உணவுப் பொருள்கள், மசாலா தூள்கள், பருப்பு, சாம்பார் பொடிகள், இனிப்பு வகைகள், பானங்களில் பயன்படுத்தலாம். மற்ற வாசனைப் பொருட்களுடனோ, தனியாகவோ உணவில் பயன்படுத்தும்போது நசுக்கியோ, பொடியாக்கியோ பயன்படுத்தலாம். 

* கரம் மசாலா இந்தியாவில் சைவ, அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படும் பொடி. கரம் மசாலாவில் ஏலக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. அனைத்து சாம்பார் பொடிகளிலும் இது சேர்க்கப்படுகிறது.

* ஏலக்காயை டீ அல்லது காபியில் சேர்த்தால் மணத்துடன் புத்துணர்ச்சியும் கிடைக்கும். 

* முழு பச்சை ஏலக்காயை அதன் ஓடுகளுடன் புலாவ், குழம்பு, மற்ற உணவு வகைகளில் சேர்க்கலாம். நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.

* இனிப்பு வகைகளான கீர், குலோப் ஜாமூன், அல்வா போன்ற உணவுகளில் சேர்த்தால் தனித்துவமான சுவை.

* சைவ, அசைவக் குழம்புகள், சாத வகைகள் எல்லாவற்றிலும் இதன் விதைகளை வாசனைக்காகப் பயன்படுத்தலாம். புட்டு, பாலாடை, முட்டை, பால் கலந்த உணவு வகைகள், பச்சடி போன்றவற்றிலும் சேர்க்கலாம்.

* வைட்டமின் சி நிறைந்த பழங்களுடன் இதையும் தேன், எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து சுவைமிக்க பழப் பச்சடி செய்யலாம்.

* லஸ்ஸியை இந்தியா உட்பட பல நாடுகளில் புத்துணர்ச்சி பானமாக மக்கள் பருகுகிறார்கள். ஏலக்காய்ப் பொடியை லஸ்ஸியுடன் சேர்த்தால், ஒரு குறிப்பிட்ட மணம் கிடைக்கும். தயிர், கொழுப்பு நிறைந்த பால், பொடித்த சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து ஐஸ்கட்டிகளைச் சேர்த்துப் பரிமாறலாம். 

நம் வாழ்வில் ஏலக்காய் அத்தியாவசியமான ஒன்று. உணவில் சேர்ப்பதால், உணவு உட்கொள்ளும் முறையில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். ஆக, ஏலக்காய் மிக மிக நல்லது!

அடுத்த கட்டுரைக்கு