Published:Updated:

முகம், சருமப் பளபளப்புக்கு ஜப்பானியர்கள் சுட்டிக்காட்டும் 7 எளிய வழிமுறைகள்! #SkinCareTips

#SkinCareTips

ஜப்பானியர்களைப்போல முகம், சருமம் பளபளப்புக்கு உதவும் 7 எளிய வழிமுறைகள்...

முகம், சருமப் பளபளப்புக்கு ஜப்பானியர்கள் சுட்டிக்காட்டும் 7 எளிய வழிமுறைகள்! #SkinCareTips

ஜப்பானியர்களைப்போல முகம், சருமம் பளபளப்புக்கு உதவும் 7 எளிய வழிமுறைகள்...

Published:Updated:
#SkinCareTips

`எல்லாவற்றிலும் நம்பர் ஒன்’ இதுதான் ஜப்பானியர்களின் முக்கியமான தாரக மந்திரம். இவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து வியக்காத உலக நாடுகளே இருக்க முடியாது. சுறுசுறுப்பு, ஆரோக்கியம் இரண்டுக்கும் அடுத்தபடியாக நம்மை ஆச்சர்யப்படுத்துவது ஜப்பானியர்களின் பளிச் முகமும், பளபளக்கும் தேகமும். இவர்களின் முகம் மற்றும் சருமப் பொலிவுக்கு முக்கியக் காரணம், பல நூற்றாண்டுகளாக நேர்த்தியான சில வழிமுறைகளை இவர்கள் பின்பற்றி வருவதுதான். அவை, வெகு எளிதாக நாம் எல்லோருமே செய்யக்கூடிய வழிமுறைகள். அவற்றை நாமும் பின்பற்றினால் ஆரோக்யமான, அழகான சருமத்தைப் பெறலாம்; முகமும் பொலிவாகும். ஜப்பானியர்களைப்போல முகம், சருமம் பளபளப்புக்கு உதவும் 7 எளிய வழிமுறைகள்...

தினமும் இருமுறை முகம் கழுவுதல் 

ஜப்பானியர்கள், தங்கள் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நம்மைப்போலப் பணம் செலவு செய்து அழகுசாதனப் பொருள்களை வாங்குவதில்லை. சருமத்தையும் முகத்தையும் சுத்தப்படுத்த எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள். சிலருக்கு இருமுறை முகம் கழுவுவது சற்று அதிகமாகத் தோன்றலாம். முகத்தில் ஒட்டியிருக்கும் அழுக்குகள், இப்படி இருமுறை கழுவினால்தான் முழுமையாக நீங்கும். முகம் கழுவவும் ஒரு வழிமுறை உண்டு. முதலில் முகத்தில் எண்ணெயைத் தடவ வேண்டும். ரைஸ் பிரான் எண்ணெய் (Rice Bran Oil) அல்லது கேமெலியா எண்ணெய் (Camellia Oil) சிறந்தது. எண்ணெயைத் தடவுவதால், முகத்தின் மேக்கப் எல்லாம் கலைந்துவிடும். பிறகு வழக்கம்போல் முகம் கழுவப் பயன்படுத்தும் சோப்பைப் பயன்படுத்திக் கழுவலாம். இப்படிச் செய்வதால் அழுக்குகள் சுத்தமாக நீங்கும்; கறைபடிந்த முகம் பொலிவு பெறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மசாஜ் என்னும் மந்திரம்! 

பொதுவாகவே முகப்பூச்சுக்குப் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள் முகத்துக்குத் தீங்குவிளைவிப்பவை. அது முகத்தின் ரத்த ஓட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜப்பான் பெண்களோ தினமும் முகத்தை நன்கு மசாஜ் செய்வார்கள். அதனால் அவர்களின் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தொடர்ந்து முகத்துக்கு மசாஜ் செய்தால், முகப்பூச்சுப் பொருள்களால் நமக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. காலையில் எழுந்தவுடன் முகம் வீங்கி இருப்பதுபோலத் தெரிந்தாலும் மசாஜ் செய்யலாம். முகம் இயல்புநிலைக்குத் திரும்பும். மாதத்துக்கு ஒருமுறையாவது முழு உடல் மற்றும் தலைக்கு மசாஜ் செய்துகொள்வது சருமத்தைப் பொலிவாகச் செய்யும்.

நிச்சயம் தேவை... நீண்ட குளியல்!

நாம் அனைவருமே ஆற, அமர குளிப்பதில்லை. `காக்காய் குளியல்’ என்று சொல்வார்களே... அந்த மாதிரி இரண்டு நிமிடத்தில் அவசர அவசரமாக குளித்துவிட்டு வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவோம். ஜப்பானியர்கள் இப்படிக் குளிப்பதில்லை. நிறுத்தி, நிதானமாக, அனுபவித்துக் குளிப்பார்கள். அவர்களின் குளியல் முறையே தனி அழகு. உச்சி முதல் பாதம் வரை நன்கு அத்தியாவசியமான எண்ணெய், குளியல் உப்பு எல்லாவற்றையும் தேய்த்துக் குளிப்பார்கள். கூடவே மென்மையான இசையையும் கேட்பார்கள். இந்த முறையை நாமும் பின்பற்றலாம். மனஅழுத்தம் குறையும்; மனம் அமைதி பெறும்; முகமும் சருமமும் பட்டுப்போல் மென்மையாகும். 

மலர்ச்சி தருமே முகத்திரை! 

ஜப்பானியர்களின் சருமத்தைப் பாதுகாப்பதற்குக் கடைப்பிடிக்கும் முக்கியமான வேலை அதன் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வது. முகப்பூச்சுப் பொருள்களால் முகத்தில் எண்ணெய் வழியத் தொடங்கும். இதைத் தடுக்க ஒரு சிறிய மென்மையான துணியை வெள்ளரிக்காய் சாற்றில் நனைத்து முகத்தில் பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய்ப் பிசுக்கு நீங்கி, மென்மையாகும். இதைப்போல கேரட் சாறு, பப்பாளி கூழ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களின் கலவையை முகத்தில் பூசிக்கொள்ளலாம். 

நிறம் காக்க..!

நம் சருமத்தின் நிறத்தைப் பாதுகாக்க அதிகம் வெயிலில் செல்லாமல் இருப்பதுதான் நல்ல வழி. அப்படியும் வெயிலில் சென்றுதான் ஆக வேண்டுமென்றால், முகத்துக்கு நல்ல சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், உடலை நன்கு மூடும்படி துணிகளை அணிந்து செல்லலாம். அதிகம் சூரிய வெப்பம் சருமத்தைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஆனால், இதையும் அளவுக்கு அதிகமாகக் கடைப்பிடிக்கக் கூடாது. சூரிய ஒளி கொஞ்சமாவது நம் உடலில்படுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. 

இளமையைத் தக்கவைக்கும் கிரீன் டீ

கிரீன் டீயின் பயன்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை... நம் உடல்நலத்துக்கு உதவும் அநேகக் காரணிகள் நிறைந்தது. கிரீன் டீயைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, ஜப்பானியப் பெண்கள். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட், முதுமைத் தோற்றத்தைக் குறைத்துக் காட்டச் செய்யும். ஜப்பானியர்களோ, ஒருபடி மேலே சென்று `மட்சா கிரீன் டீ’ என்ற ஸ்பெஷல் கிரீன் டீயை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சாதாரண டீயைவிட மட்சா கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட் பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.

உள் அழகு முக்கியம்! 

ஜப்பானியர்கள் உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதே நேரத்தில், தாங்கள் உண்ணும் உணவிலிருந்துதான் முழு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். இவர்கள் பால் மற்றும் பதப்படுத்திய உணவுகளை அதிகம் விரும்புவதில்லை. அவர்கள் உணவுப் பட்டியலில் எப்போதும் முதலிடம் காய்கறிகளுக்கும் மீனுக்கும்தான். மீன் உணவுதான் தங்களை இளமையாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கிறது என்று நம்புகிறார்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள வஞ்சிரம், நெத்திலி போன்ற மீன்கள் முதுமைத் தோற்றத்தைப் போக்கும்; ஆரோக்கியமும் தரும். சருமப் பொலிவுக்கு ஆரோக்கியமும் அவசியமே!
 
இந்த வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் பளிச் முகத்தையும் மின்னும் சருமத்தையும் பெற்று அழகு மிளிர வலம்வரலாம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism