Published:Updated:

ப்ரீ டயாபடீஸ்... அறிகுறிகள், பாதிப்புகள், தடுக்கும் வழிகள்..!

நமது நிருபர்
ப்ரீ டயாபடீஸ்... அறிகுறிகள், பாதிப்புகள், தடுக்கும் வழிகள்..!
ப்ரீ டயாபடீஸ்... அறிகுறிகள், பாதிப்புகள், தடுக்கும் வழிகள்..!

தும்மல், இருமல் எல்லோருக்கும் அவ்வப்போது வரும். ஆனால் டயாபடீஸ் எனும் சர்க்கரை நோயும் இன்றைக்குப் பெரும்பாலானோர் மத்தியில் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முன்னொரு காலத்தில் அது வசதி படைத்தவர்களின் நோய் என்று சொல்லப்பட்ட காலம் மலையேறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது. "மருத்துவத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் வந்தபோதிலும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இந்நாள் வரை பதில் தேட வேண்டியிருக்கிறது. ஆகவே, 'வரும் முன் காப்பது சிறப்பு' என்பதே சர்க்கரை நோயைப் பொருத்தமட்டில் சாலச் சிறந்தது" என்கிறார் பொது நல மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணரான பாஸ்கர்.

டயாபடீஸ்

நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின்மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம்.

அதென்ன ப்ரீ டயாபடீஸ்?

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரையின் அளவு சாதாரண அளவைவிட சற்று அதிகமாக இருக்கும் நிலையை ப்ரீ டயாபடீஸ் என்பர். சரியான நேரத்தில் இதனைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை முறைகளும் பயிற்சியும் மேற்கொண்டால் ப்ரீடயாபடீஸிலிருந்து டைப்-2 சர்க்கரை (தேவைக்கும் குறைவாக இன்சுலின் சுரத்தல்) எனும் நிலைக்குச் செல்வதைத் தடுக்கலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் கொள்வது நல்லது.

பாதிப்புகள் என்னென்ன?

முடி உதிர்தல், உடல் எடை குறைதல், கால் கை மரத்துப்போனதுபோன்ற உணர்வு, நரம்பு பாதிப்பு, ரத்த நாளங்கள் பாதிப்படைதல், கண்கள் (குறிப்பாக ரெட்டினா பகுதி) பாதிப்படைதல், உடம்பில் எங்கேனும் அடிபட்டால் விரைவில் ஆறாத புண் போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

எந்த மாதிரியான உணவு உட்கொள்ளலாம்?

கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் காய்கறிகள், நல்ல கொழுப்புள்ள அல்லது கொழுப்பு குறைவாக உள்ள உணவு வகைகள், பழங்கள் (குறிப்பாக கேரட், ஆரஞ்சு, மாதுளை முதலியவற்றை பழச்சாறாக அருந்தாமல் அப்படியே எடுத்துக் கொள்வதால் முழுமையான சத்துகளைப் பெற முடியும்). மருத்துவர் பரிந்துரைத்த பிரத்யேகமான ஃபுட் சார்ட் எனப்படும் உணவு அட்டவணையைப் பின்பற்றுதல் என்பது ப்ரீடயாபடீஸ் மற்றும் டயாபடீஸ் உள்ளவர்களுக்கு சிறந்தது.

எவற்றை தவிர்க்க வேண்டும்?

ஃபாஸ்ட் ஃபுட், அதிக கெட்ட கொழுப்புள்ள உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

என்ன மாதிரியான பயிற்சிகள் மேற்கொள்ளலாம்?

எளிய உடற்பயிற்சிகளே போதுமானது. வாக்கிங், யோகா போன்ற எளிய பயிற்சிகளே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இது மட்டுமல்லாமல் இவர்களுக்கு குடும்பத்தினரின் அன்பான ஆதரவும் தேவைப்படுகிறது.

முறையான உணவு முறைகளும், சரியான பயிற்சியும் இருந்தாலே இந்தச் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். அப்படி வந்தாலும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

- ச.ஆனந்தப்பிரியா