Published:Updated:

மனமே நலமா 16

டெலிபதி வழியா டார்ச்சர் பண்றாங்க!

##~##

ன் மகளுடன் வந்திருந்தார் அந்த 60 வயதுப் பெரியவர். அந்தப் பெண், ஆடம்பரமாக உடை அணிந்து, கம்பீரமாக இருந்தார். கைகளில் ஏகப்பட்ட தாயத்துகள் கட்டியிருந்தார், உடலில் ஆங்காங்கே பாலிதீன் கவரை கட் பண்ணி ஒட்டியிருந்தார். வேண்டாவெறுப்பாக உட்கார்ந்திருந்தார். 'எனக்கு ஒண்ணும் இல்லை டாக்டர். இது போலீஸுக்குப் போக வேண்டிய பிரச்னை. இந்த ஆளுதான் தேவையில்லாம என்னை இங்கே அழைச்சிட்டு வந்துட்டான்' என்றார்.

அந்தப் பெண்ணின் தந்தை, 'இவள் என் ஒரே மகள். அரசு வேலையில் நல்ல போஸ்ட்ல இருக்கா. இரண்டு, மூணு வருஷமாவே எல்லாரையும் ஒரு சந்தேகக் கண்ணோடு பார்க்கிறா. கடந்த ஒரு வருஷமா பிரச்னை ரொம்பவே அதிகமாயிடுச்சு. ஆபீஸ்ல, பஸ்ல, பக்கத்து வீட்ல இருக்கிற ஆம்பிளைங்க மேல எல்லாம், 'என்னைக் கற்பழிக்கிறான்’னு போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டே இருக்கா. ஒரு கட்டத்துல போலீஸ்காரங்க மேலயே கம்ப்ளெயின்ட் பண்ணிட்டா டாக்டர்' என்றதும், ஆவேசமான அந்தப் பெண்மணி, 'இந்த ஆளை வெளியே போகச் சொல்லுங்க'' என்று கத்தினார். வெடவெடத்துப்போன அந்தத் தந்தை, செய்வதறியாது திகைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'நீங்க கொஞ்சம் வெளியே இருங்க' என்று அவரை வெளியே அனுப்பிவிட்டு அந்தப் பெண்ணிடம் பேசினேன்.

மனமே நலமா 16

'எல்லா ஆம்பிளைங்களும் மோசம். எல்லாரும் என்னை 'மிஸ்யூஸ்’ பண்றாங்க. கண்ட இடங்கள்ல தொடுறாங்க... கட்டிப்பிடிக்கிறாங்க, முத்தம் கொடுக்கிறாங்க, என்னைக் கற்பழிக்கிறாங்க. என் ஆபீஸ்ல இருக்கிற ஆம்பிளைங்க எல்லாருமே இப்படிச் செய்றாங்க.

இவங்ககிட்ட இருந்து தப்பிச்சு, சாயங்காலம் பஸ்ல ஏறினா பஸ் டிரைவர்லேர்ந்து அதுல இருக்கிறவங்க எல்லாரும் என்னைத் தொந்தரவு செய்றாங்க. ஒருத்தன் ரெண்டு பேரா இல்லாம, கூட்டமா வந்து என்கிட்ட சில்மிஷம் செய்றாங்க டாக்டர்' என்றார்.

'இது எப்படிமா சாத்தியம்? இப்படி யாரும் செய்ய மாட்டாங்களே?' என்றேன்.

'உங்களுக்குத் தெரியாது டாக்டர். இவனுங்க எல்லாம் வேற வேலை செய்யுற மாதிரி இருக்கும். ஆனா டெலிபதி மூலமா என்னைத் தொந்தரவு செய்றாங்க. ஆபீஸ்ல ஃபைல் எடுக்கிற மாதிரி இருக்கும், ஆனா, இவங்க ஆன்மாவை என் மேல ஏவிவிட்டு என்னைத் தொந்தரவு செய்றாங்க' என்றார்.

'மத்தவங்க டெலிபதியில உங்களைத் தொந்தரவு செய்றது உங்களுக்கு எப்படித் தெரியுது?' என்றேன்.

மனமே நலமா 16
மனமே நலமா 16

'என் வீட்டுக்காரருடன் நான் சேரும்போது என்ன மாதிரி உணர்ச்சி தோணுமோ, அதுபோலத்தான் இவனுங்க என்னைத் தொடும்போதும், என் மேல படரும்போதும் தோணும் டாக்டர். எதுவும் செய்யாமலா எனக்கு இதுபோல் உணர்வு வரும்?'' என்றார். 'சரிம்மா, இதையெல்லாம் உங்க அப்பாகிட்ட, உங்க கணவர்கிட்ட சொன்னீங்களா?' என்று கேட்டேன்.

'இவன் எங்க அப்பாவே இல்ல டாக்டர். இந்த உருவம் எங்க அப்பாவுடையதுதான். ஆனா, உள்ளே இருக்கிறது வேற ஒரு ஆள். இப்படி எங்க அப்பா உருவத்துல இருந்துட்டு டெய்லி என்னைக் கற்பழிக்கப் பார்க்கிறான். இவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்க நான் தினமும் போராடிட்டு இருக்கேன். அதுக்காகத்தான் கை முழுக்க மந்திரிச்ச கயிறு, பாலிதீன் கவர், மோதிரம் எல்லாம் போட்டிருக்கேன். என் உடம்புல யாரோ கம்ப்யூட்டர் 'சிப்’ வெச்சிட்டாங்க. நான் எங்க போறேன், என்ன பண்றேன்னு சேட்டிலைட் மூலமா என்னைக் கண்காணிச்சிட்டே இருக்காங்க. சேட்டிலைட் மூலமாவே என்னை ஆப்பரேட் செய்றாங்க. என் கை என் இயக்கத்துல இருக்காது. நான் என்ன பேசணும்னு நினைக்கிறேனோ, அதை என்னால பேச முடியலை. பக்கத்து வீட்டுக்காரனோட 'நினைவுகள்’ எனக்கு வருது. அவன் இப்ப என்ன நினைச்சிட்டிருக்கான்னு என்னால உணர முடியுது. இது எப்படி முடியும் டாக்டர்? என் எண்ணத்தை யாரோ திருடறாங்க. அதனாலதான் மத்தவங்களோட 'நினைவுகள்’ எனக்குள்ள வருது. இவங்க மேல போலீஸ்ல கம்ப்ளெய்யின்ட் பண்ணேன். ஆனா, அவங்களும் என்னைத் தொந்தரவு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. யாரையும் நான் விடப்போறது இல்லே...' என்றார்.

யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட சந்தேகங்கள், மனக் குழப்பங்கள், அதீத மனப்பதற்றம், தூக்கமின்மை என அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளைவைத்து அவருக்கு ஏற்பட்டிருப்பது மனச்சிதைவு நோய் (Schizophremia) என்று கண்டறிந்தேன். இது ஒரு முற்றிய மனநோய். இதில் பல வகைகள் உண்டு. இந்தப் பெண்மணிக்கு ஏற்பட்டுள்ளது 'பெரானாய்டு ஸ்கிசோஃப்ரீனீயா’ (Paranoid schizophrenia). மரபு ரீதியான காரணங்களாலும், மனநிலை பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளாலும், தனிமையில் இருப்பதாலும், மூளையில் 'டோபோமைன்’ என்ற உயிரி வேதிப்பொருள் சுரப்பதில் ஏற்படும் மாற்றங்களாலும் இந்த நோய் வருகிறது.

இது, பொதுவாக ஆண்களுக்கு 15 வயது முதல் 25 வயது வரையிலும், பெண்களுக்கு 20 வயது முதல் 30 வயதிலும் ஆரம்பிக்கும். இந்தப் பெண்மணிக்கு எல்லோருடனும் சண்டைபோடும் குணமும், சந்தேக எண்ணமும் இருந்தது. கூடவே அவரின் நிலைமை மிக மோசமாக இருந்ததால், வெளியில் சட்டரீதியான பிரச்னைகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

எனவே, அவரை உள்நோயாளியாக அனுமதித்து மூளையில் 'டோபோமைன்’ அளவைக் குறைக்கும் மருந்து, மாத்திரை, ஊசிகள் மற்றும் மின் அதிர்வு சிகிச்சை அளித்தோம். 15 நாட்களுக்குப் பிறகு அவரது நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்தப் பெண்மணி, தற்போது தொடர்ந்து புறநோயாளியாக சிகிச்சைபெற்றுவருகிறார். இப்போது மற்றவர்கள் மீது சந்தேகம் கிளப்பும் பிரச்னை ஏதும் இன்றி அரசுப் பணியைத் திறம்படச்செய்துவருகிறார்.