Published:Updated:

நல்லா இருக்கீங்களா?

இயக்குநர் வெற்றிமாறன்

##~##

'எனக்கு எதிரியே இல்லை...’ என்று எண்ணும் ஒரு மனிதன் உதிர்க்கும் வார்த்தை... 'நல்லா இருக்கீங்களா’. இந்த ஒரு வார்த்தை போதும்.  வாஞ்சையோடு வாழ்வில் நடந்த சந்தோஷத் தருணங்களையும், சோக நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்ள வைக்கும். வெற்றிப் படங்கள் தந்து,  விருதுகளைக் குவித்த இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து, 'நல்லா இருக்கீங்களா’ என்றோம்...

'நடுவுல கொஞ்ச காலம் நல்லா இல்லாம இருந்து... இப்ப ரொம்ப நல்லா இருக்கேன். சின்ன வயசுல அறியாமையில் செய்யும் சில தவறான பழக்கங்கள், காலம் கடந்துதான் அதன் பாதிப்பை நமக்கு உணர்த்தும். அதில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டு மீண்டிருக்கேன். அதனாலேயே நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன்.... அந்தப் பழக்கம் சிகரெட்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளிக்கூடத்தில் படிக்கிறப்ப ஆரம்பிச்ச பழக்கம். காரணம், என்னன்னு சரியா சொல்லத் தெரியலை. 13 வயசுல முதல் சிகரெட். சின்ன வயசுல வீட்டுல மறைச்சுவைக்க ஈஸியா இருக்கும். அன்னைக்கு அது சந்தோஷமான ஒண்ணாத் தெரிஞ்சது. சிகரெட் இல்லாம ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாமப்போறப்பதான், அதுக்கு அடிமையாகி இருக்கோம்னு தோணுச்சு. ஒரு நாளைக்கு 190 சிகரெட் பிடிக்கும் நிலைமைக்கு வந்துட்டேன்.''

நல்லா இருக்கீங்களா?

''கேட்கவே அதிர்ச்சியா இருக்கே..?''

''இன்னொண்ணு சொன்னா ஆச்சர்யப்படுவீங்க... ஒரே ராத்திரியில் சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்.

'கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திக்க’னு அம்மாவும் நண்பர்களும் பலமுறை சொல்வாங்க. அப்பல்லாம் யார் பேச்சையும் கேக்கலை. ஆனா, திடீர்னு எனக்கே தோணுச்சு... சட்டுனு நிறுத்திட்டேன். யார் என்ன சொன்னாலும், நம்ம மனசு என்ன சொல்லுதோ... அதைத்தான் நாம செய்றோம்ங்கிறது என் விஷயத்தில் ரொம்பவே சரியா இருந்தது. நிறுத்தின முதல் நாள், ரொம்பக் கஷ்டமா இருந்தது. நிறையக் கோபப்பட்டேன்.

சிகரெட் பிடிக்கணும்னு தோணும்போதெல்லாம், ஜில்லுன்னு தண்ணீரை நிறையக் குடிப்பேன். எனக்குப் பிடிச்ச விஷயத்தைப் பத்தி யோசிப்பேன். முதல் மாசம் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அடுத்த ரெண்டு மாசம் இன்னும் கஷ்டமா இருந்தது. மூணாவது மாசம் கடந்ததும் நிறுத்த முடியும்னு நம்பிக்கை வந்தது.''

''மறுபடியும் எப்பவாவது சிகரெட் பிடிக்கணும்னு தோணுச்சா?''

''அய்யோ... தினம் தோணும் பாஸ். சிகரெட்டை நிறுத்துறது ஈஸி. அதை மறுபடியும் பிடிக்காம இருக்க, தினம் போராடிக்கிட்டே இருக்கணும். இடையில இரண்டு முறை கட்டாயம் வேணும்னு மனசு சொல்லுச்சு.''

''அப்ப என்ன பண்ணீங்க..?''  

நல்லா இருக்கீங்களா?

''மதுரையில் 'ஆடுகளம்’ பட ஷூட்டிங். ரொம்பக் கோபத்தில் இருந்தேன். என் உதவி இயக்குநர்கிட்ட சிகரெட் வாங்கிட்டுவரச் சொன்னேன். 'இதோ வாங்கிட்டு வர்றேன்’னு போனவன் ரொம்ப நேரம் ஆகியும் வரவே இல்ல. கோபமாகி இன்னொரு உதவி இயக்குநர்கிட்ட கேட்டேன். அவனும் சிகரெட் பிடிக்கிறவன்தான். 'என்கிட்ட இல்ல சார்... கடைக்குப் போய் வாங்கிட்டு வரட்டுமா?’னு மழுப்பினான். போங்கடான்னு நானே வண்டியை எடுத்துக் கிளம்பிட்டேன். அப்புறம் என் நல்லதுக்குத்தானே அவனுங்க தயங்கி நின்னாங்கன்னு தோணுச்சு. சரி... காலையில பார்த்துக்கலாம்னு மனசு சொல்ல, நல்லாத் தூங்கி எழுந்தேன். அப்புறம் எதுவும் தோணலை.''

''சிகரெட் பிடிச்சா கற்பனை வளம் பெருகும்னு சொல்றாங்களே..?''

''அதெல்லாம் எதுவும் வராது. சும்மா அது ஒருவித போதை. புதுசா ஓர் அனுபவம் கிடைக்கிறப்ப, புது இடங்களுக்குப் போறப்ப, டென்ஷனா இருக்கறப்ப 'தம்’ அடிக்கணும்னு தோணும். இப்படி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு காரணத்தை வைச்சு நிக்கோட்டினுக்கு அடிமையாகுறாங்க. குறிப்பா பள்ளி, கல்லூரி வாழ்க்கையில்தான் தவறு நடக்குது. அந்தக் கட்டத்தை ரொம்பக் கவனமா கடந்து வரணும்.''

''இப்ப எப்படி உணர்றீங்க சார்?''

''ஸ்மோக் பண்றதை நிறுத்தி அஞ்சு வருஷம் ஆகுது. ரொம்ப நிம்மதியா இருக்கேன். முன்பெல்லாம் அடிக்கடி டீ குடிப்பேன். இப்ப அதையும் நிறுத்திட்டேன். இப்போ கிரீன் டீ குடிக்கிறேன்.

கொஞ்ச காலமா ஜிம்ல வொர்க்அவுட்ஸ் பண்ணிட்டு இருக்கேன். பெரும்பாலும் காலையில் சத்துமாவில் செஞ்ச தோசை, இட்லி. மதியம் குறைவான அளவு சாதம், அதிகம் காய்கறிகள் சாப்பிடுறேன். கிரீன் ஆப்பிள், பழங்கள் எடுத்துக்கிறேன்...'' என்கிற வெற்றிமாறன், அன்பானவர்களுக்குச் சொல்லும் விஷயம்:

''ஒருமுறை நிக்கோடினுக்கு அடிக்ட் ஆகிட்டா, அது, வளர்ச்சிப் பாதைக்குப் பெரும் தடையா இருக்கும். செய்யும் வேலையில் ஒழுங்கு இருக்காது. எதையும் நேரத்துக்குச் செய்ய முடியாது. புகைபிடிக்கும் நினைப்பு, நிழல் மாதிரி கூடவே வரும். அதனால், உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும் குடும்பத்தின் மீது பற்றுதலும் இருந்தால் சிகரெட்டைத் தொடாதீங்க... உடனடியாக நிறுத்தும் முயற்சியைத் தொடங்குங்க!''  

புகழ் திலீபன்

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

 சிகரெட்டை மறக்கடித்த 'சீக்ரெட்’!

நல்லா இருக்கீங்களா?

ஸ்மோக் பண்றதை நிறுத்தணும்னு நினைக்கிறவங்க முதல்ல, சுத்தி இருக்கிறவங்ககிட்ட, 'சிகரெட் பிடிக்கிறதை நிறுத்தப்போறேன். நிறையக் கோபப்படுவேன். பொறுத்துக்கங்க’னு முன்கூட்டியே சொல்லிடுங்க. நம்மைச் சுத்தி இருக்கிறவங்கதான் நமக்குப் பலம். அவங்களோட ஒத்துழைப்பு இல்லாம எதுவும் முடியாது.

நல்லா இருக்கீங்களா?

ஸ்மோக் பண்றதை நிறுத்தும்போது, முதல் நாள் நல்லாத் தூங்குங்க. நிறையப் பசி எடுக்கும். ரொம்பக் கோபம் வரும். அதுபோக்குல விடுங்க.  

நல்லா இருக்கீங்களா?

ஒரு எதிரியைப் பார்க்கிற மாதிரி நிக்கோட்டினைப் பாருங்க. ஜிம் போய் நிறைய வொர்க்அவுட்ஸ் பண்ணுங்க. புகையை நிறுத்த அதுவும் உதவியா இருக்கும்.  

நல்லா இருக்கீங்களா?

நெருக்கமான இடங்களைத் தவிர்த்து, நல்ல இயற்கைச் சூழலை ஏற்படுத்திக்குங்க.