Published:Updated:

வெந்நீர்... உடலுக்கு உரம்..! #HealthyDrink

வெந்நீர்... உடலுக்கு உரம்..! #HealthyDrink
வெந்நீர்... உடலுக்கு உரம்..! #HealthyDrink

‘அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு கூல்டிரிங்ஸோ, ஐஸ் வாட்டரோ குடிச்சாத்தான் தாகம் அடங்கும்...' இது பலரின் ஆர்வமாக மட்டுமல்ல, செயல்பாடுகளிலும் ஒன்றாகிவிட்டது. `அப்பப்பா என்னா வெயிலு... பேசாம ஃப்ரிட்ஜைத் திறந்து அதுக்குள்ள போய் உட்கார்ந்திரலாம்னு தோணுது' என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இன்றைய இளைய தலைமுறையின் மத்தியில் இந்த கூல்வாட்டர் ஒரு ஃபேஷனாகிவிட்டது.

ஜில் வாட்டர்... குளிர்ந்த நீரைக் குடித்தால் தொண்டைக்கு இதமாக இருப்பதால் அதையே மனம் விரும்புகிறது. பகல் நேரம் மட்டுமல்ல... ராத்திரி நேரத்தில்கூட ஐஸ் வாட்டரை `மடக் மடக்...' என்று குடிக்கும் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், குளிர்ந்த நீரை அடிக்கடி அருந்துவது உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடியது என்கின்றன ஆய்வு முடிவுகள். குளிர்ந்த நீர்தான் என்றில்லை... பச்சைத் தண்ணீர் என்பார்களே... அதாவது சாதாரண நீர், அதையும்கூட குடிப்பது நல்லதல்ல; `காய்ச்சிக் குடிப்பதே நல்லது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக நம் பாரம்பர்ய மருத்துவம் கூறுகிறது. வெந்நீரை எப்படியெல்லாம் குடிக்கலாம். அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் ரமேஷ்.

நீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் சிறந்தது என்கிறது சித்த மருத்துவம். அதைத்தான், மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்று தேரையர் தனது 'பிணி அணுகா விதி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நீரைக் காய்ச்சியும் மோரை நீர் சேர்த்துக் கலந்தும் நெய்யை உருக்கியும் சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள். மேலும், இயற்கை மருத்துவத்தில் வெந்நீரின் மகிமை பற்றி பேசும் ஏராளமான பாடல்கள் காணக்கிடக்கின்றன.

அப்படி பதார்த்த குண சிந்தாமணியின் ஒரு பாடலில்,

`நெஞ்செரிப்பு நெற்றிவலி நீங்காப் புளியேப்பம்

வஞ்சமுற வந்த வயிற்றுநோய் - விஞ்சியே

வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர்

ஆழாக்குட் கொள்ள அறும்' என்று குறிப்பிட்டுள்ளது.

`வெந்நீர் அருந்துவதால் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மறைந்து உணவு செரிமானமாகும். எந்த வகையான தலைவலியாக இருந்தாலும், மிதமானச் சூடுள்ள வெந்நீரைக் குடித்தால், நரம்புகளுக்கு இளக்கம் கொடுத்து, தலைவலியைக் குறைக்கும். அடிக்கடி வெந்நீர் குடித்துவருவதால் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். வாய்வுப் பிரச்னைகள் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்’ என்று கூறுகிறது இந்தப் பாடல். 

இது தவிர, வெந்நீர் குடிப்பதால், மலச்சிக்கல் தீரும்; உடல் எடை குறைக்க உதவும்; உண்ட உணவு எளிதில் செரிமானமாகும்; சளி, இருமல், தொண்டைப்புண் நீங்கும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; நரம்பு மண்டலத்தைச் சுத்திகரிக்கும்; பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய்க் கால வயிற்றுவலி நீங்கும்; முதுமையைத் தள்ளிப்போடும்; தோல் நலத்தைப் பாதுகாக்கும்; தொற்றுநோய்க் கிருமிகளை வெளியேற்றும்; முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்; பொடுகுத் தொல்லை நீங்கும்; முடியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும். 

இவை மட்டுமல்லாமல், `வெந்நீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றிக் குடிக்கிறோமோ அதற்கேற்ப பலன்கள் மாறுபடும்’ என்றும் சித்த மருத்துவம் கூறுகிறது. அதன்படி, தங்கப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றிவைத்துக் குடித்தால் வாத நோய், சுவையின்மை, உடல் உஷ்ணம், வெப்புநோய் போன்றவை நீங்கும்.

வெள்ளிப் பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி வைத்துக் குடித்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும். இரும்புப் பாத்திரம் ரத்தச்சோகை நீங்கச் செய்யும். நரம்புகள் உறுதியாகும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரைக் குடிப்பதால் விக்கல், பித்தநோய், காதுவலி, வாந்தி, மயக்கம், உடற்சூடு, வயிற்றுப்புண் போன்றவற்றைத் தீர்க்கும். உதாரணமாக ஒரு லிட்டர் நீர் எடுத்துக்கொண்டால் அதை கால் லிட்டராகும் வரை காய்ச்சிக் குடித்தால் உடற்சூடு நீங்கும். அரை பங்காகும் வரை காய்ச்சிய நீரை குடித்தால் வாதம், பித்தம் விலகும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் குடித்தால் வாதம், பித்தம், கபம் பிரச்னைகள் நீங்கும். மூன்றில் ஒரு பங்காகும் வரை காய்ச்சிய நீரைக் குடித்தால், உடல்சூட்டைக் குறைக்கும்; கடுமையான ஜுரம், வயிற்றுப்போக்கு, வாதம், பித்தம், கபம் பிரச்னைகளைப் போக்கும்.

எட்டில் ஒரு பங்காகும்வரை காய்ச்சிய நீரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் குடித்து வந்தால், உடல் சூட்டைக் குறைக்கும்; நாவறட்சி, அல்சர், பித்தவெடிப்பு பாதிப்புகளை நீக்கும். அதேபோல, சாப்பிடுவதற்கு முன்னர் வெந்நீர் குடித்தால் உடல் இளைக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் பசியை மட்டுப்படுத்தும். சாப்பிட்ட பின்னர் வெந்நீர் குடிப்பது ஜீரண உறுப்புகளைத் தூண்டி, செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.