மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 2

சித்தமருத்துவர் கு.சிவராமன்

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 2
##~##

காலேஜ் முடிந்து வந்த பேத்தி ஷைலஜாவிடம், ''சூடா... தினை அரிசி உப்புமா செஞ்சுருக்கேன் ஷைலு... சாப்பிடுறியாம்மா?'' என்ற லட்சுமி பாட்டியின் விசாரிப்பைக் காதில் வாங்காத ஷைலு,

''தும்மலும் இருமலுமா என் ஃப்ரெண்ட் படுற அவஸ்தையைப் பார்க்க சகிக்கலை. இந்த மாதிரிப் பிரச்னைக்கு மிளகு நல்லதுன்னு சொன்னியே... நிஜமாவா பாட்டி? மிளகுக்கு அவ்வளவு சக்தி இருக்கா?'' என்று கேட்க... மிளகின் மகிமையை ஆரம்பித்தாள் பாட்டி.

''தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் இருந்து 'சில்லி’ வர்ற வரைக்கும் இந்த மிளகுதான் நம் உணவுக்குக் காரத்தைத் தந்தது. மிளகு மாதிரியே, சிலி நாட்டுக் காயும் காரச் சுவையைத் தந்ததால்தான் அதுக்கு மிளகாய் (மிளகு + ஆய்)னு நம்ம தமிழ்ப் பெரியவங்க பெயர் வெச்சாங்க. அந்த மிளகு சைனசைட்டிஸ் நோய்க்கு மூலகாரணமான, நம்ம உடம்பில் இருக்கிற பித்தத்தையும் கபத்தையும் சரியாக்கும் அற்புத மருந்து.

நல்ல மிளகைத் தயிரில் போட்டு தொடர்ந்து மூணு நாள் ஊறினதும், தயிர் வற்றும் வரை வெயில்ல வைச்சு எடுத்துக்கணும். அதுக்கு அப்புறம், தினம் தினம் துளசி, இஞ்சிச் சாறு, வேலிப்பருத்தி, தூதுவளைச் சாறுனு மிளகில் ஊற்றி வெயிலில் காயவைச்சு, நல்லா உலர்த்திக்கணும். இந்த மிளகைப் பொடிச்சு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவைக்கணும். ஒரு கால் ஸ்பூன் இப்படி பாவனம் செஞ்ச மிளகுப் பொடியைத் தேன்ல குழைச்சுக் கொடுக்க ஆரம்பிச்ச ரெண்டு, மூன்று நாள்லேயே சைனசைட்டிஸ் தும்மல் குறைஞ்சிடும். கூடவே சளி இருந்தால், அதுவும் வெளியேறி சுவாசம் சீராகும்.'

''சரி... நீ ஈஸியாச் சொல்லிட்ட... இந்த மூலிகைகளை எங்கே போய் வாங்குறதாம்?'

''இதை உன் ஷாப்பிங் மாலில் வாங்க முடியாது. ஈஸியா வெளியே கிடைக்கக் கூடியதுதான்.'

'சைனஸுக்கு வேற என்ன மூலிகை இருக்கு பாட்டி?'

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 2

'சீந்தில்-னு அருமையான மூலிகை ஒண்ணு இருக்கு. இதனோட தண்டை உலர்த்திப் பொடிச்சு சித்த மருத்துவர்கள் செஞ்சு தரும் சீந்தில் சூரணத்தை இரண்டு மண்டலம் வரை சாப்பிட்டால், மூக்கடைப்பு கட்டுப்படும். நோய் எதிர்ப்பாற்றலும் சீராகும். அதிகபட்சப் பித்தத்தைக் குறைச்சு, கபத்தை வெளியேத்தும்.'

'நான்கூட கேள்விப்பட்டு இருக்கேன். சைனசைட்டிஸுக்கு ஆங்கில மருத்துவம் சொல்லும் காரணம், தேவைக்கு அதிகமான நோய் எதிர்ப்பாற்றல் கட்டுப்பாடு இல்லாததுதான்னு சொல்வாங்க. அதை மட்டுப்படுத்திச் சீராக்கும் மருந்தைத்தான் அவங்களும் கொடுப்பாங்களாம்.'

'சீந்தில் தண்டு, சைனசைட்டிஸ் மட்டுமில்லாமல், பல நோய்களுக்கும் பலனளிக்கும். அந்தக் காலத்திலேயே சீந்தில், நெய், இன்னும் சில மூலிகைகளைச் சேர்த்து, ஒரு 'நேசல் டிராப்ஸ்’ பண்ணுவாங்க; சீந்தில் நெய்னு சொல்ற அந்த மூக்குத்துளி மருந்து, பின்னாளில் சைனசைட்டிஸே வராத அளவுக்குப் பலனளிக்குமாம்.'

''இந்த மூக்கடைப்புக்கு வேற என்ன பாட்டி செய்யலாம்?'

'நொச்சி இலையைப் போட்டு ஆவிபிடிக்கலாம். மஞ்சள், சுக்கு இன்னும் சில மூலிகைகளைப் போட்டுச் சித்த வைத்தியர்கள் செய்துதர்ற 'நீர்க்கோவை’ மாத்திரையை நீரில் குழைச்சு நெற்றி, மூக்குத்தண்டு மேல பத்துப் போடலாம்.''

''என் ஃப்ரெண்டுக்கு, தலைக்குக் குளிச்சாலே மூக்கடைப்பு வருது; தலைவலி, சில சமயம் காய்ச்சல்கூட வருதாமே?'

''ஒண்ணு தெரியுமா... தலைக்குக் குளிக்கிற பழக்கம் குறையுறதுதான் இந்த நோய் தலைவிரிச்சு ஆடுறதுக்கு முக்கியக் காரணம். தினசரி தலைக்குக் குளிச்சிட்டுவந்தால் மூக்கடைப்பு நிரந்தரத் தொல்லையாய் மாறாது. ஆனா, ரொம்பத் தீவிரமா மூக்கடைப்பு, காய்ச்சல், பச்சையாய்ச் சளி இருக்கிறப்ப தலைக்குக் குளிக்கக் கூடாது. வாரம் ரெண்டு நாள் மட்டும், சுக்குத் தைலம், நொச்சித் தைலம், பீனிசத் தைலம்னு சித்த மருத்துவர்கள் சொல்லும் தைலத்தை வாங்கி, முதல்ல சில மாசங்கள் தலைக்குத் தேய்ச்சுக் குளிக்கச் சொல்லு. பீனிச நோயும் சரியாகும். சில மாசத்துக்கு அப்புறம் இந்தத் தைல உதவி இல்லாமல் எப்போதுமே அவள் தலைக்குக் குளிக்கலாம்.'

'சூப்பர் பாட்டி... உனக்கு மிளகைத்தான் சுத்திப்போடணும். என் ஃப்ரெண்ட்கிட்ட முதல்ல போய்ச் சொல்லிட்டு வந்து உன் உப்புமாவை ஒரு கை பார்க்கிறேன்'' என்று விரைந்தாள்.

(மருந்து மணக்கும்...)