Published:Updated:

மனமே நலமா? 18

மனதுக்குள்

மனமே நலமா? 18
##~##

சாஃப்ட்வேர் பொறியாளராகப் பணியாற்றிய பத்மினிக்கு 32 வயது. திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டுவிட்டார். பத்மினியின் கணவர் ராஜேஷ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். வீட்டில் எல்லா வேலைகளையும் செய்வது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, வீட்டுக்கு வந்ததும் பாடங்கள் நடத்துவது, வீட்டைத் தூய்மையாகவைத்திருப்பது என்று எப்போதும் சுறுசுறுப்புடன் சுழல்பவர் பத்மினி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எப்போதும் வாய்க்கு ருசியாகச் சமைக்கும் பத்மினி, அன்று சொதப்பினார். ''எப்போதும் நல்லா செய்வே, இன்னைக்கு உனக்கு என்னாச்சு? நாளைக்காவது சரியா செய்'' என்று கணவர் கடிந்துகொண்டார். மறுநாளும், சமையல் சரியில்லாமல் போனதுடன், மற்ற அன்றாட வீட்டு வேலைகளையும் செய்ய முடியாமல் திண்டாடினார். இந்த நிலையில், ''இந்த வீட்ல இருக்கிற பொண்ணுக்கு சமைக்கத் தெரியாது. உபயோகமில்லாத ஆளு'' என்று வாசலில் இருந்து ஒரு குரல் பத்மினிக்குக் கேட்டது. 'தெருவில் யாரோ நம்மைப் பத்திப் பேசிட்டுப் போறாங்க... நமக்கு சமைக்கத் தெரியலை என்பது ஊர்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு...' என்று சொல்லி அழ ஆரம்பித்தார். 'அப்படியெல்லாம் இல்லைம்மா... நீ நல்லாதான் சமையல் செஞ்சிட்டு இருந்த. இரண்டு நாளாதான் சரியில்லை. கொஞ்சம் கவனமா செய்தா எல்லாம் சரியாகிடும்'' என்று சமாதானம் செய்தார் ராஜேஷ். அடுத்த நாளும் சமையல் சகிக்காமல் போக, வேலைக்குச் சென்ற ராஜேஷ், வீடு திரும்பியதும் மீண்டும் பிரச்னை ஆரம்பித்தது.

'நீங்க திட்டினது இந்த உலகத்துக்கே தெரிஞ்சிடுச்சு. இன்னைக்கு 'பத்மினிக்கு சமையல் தெரியலை’ன்னு டிவி நியூஸ்ல சொல்றாங்க. வேற சேனலைத் திருப்பினா, சிவாஜி படம் போயிட்டு இருந்தது. படத்துக்கு நடுவுல சிவாஜியே என்னைத் திட்ட ஆரம்பிச்சுட்டாரு' என்றார்.

மனமே நலமா? 18

'அது எப்படிமா டி.வி. நியூஸ்ல எல்லாம் இதைச் சொல்லுவாங்க... அந்தப் படம் எடுத்து 40-50 வருஷம் இருக்குமே. சிவாஜி கணேசன் இறந்துபோய் பல வருஷம் ஆகிடுச்சு. பிறகு எப்படி உன்னைத் திட்டுவார்' என்று சமாதானம் செய்தார் ராஜேஷ். ஆனால், பத்மினியோ, 'அவர் என்னைத்தான் திட்டுறார்... அந்தக் காலத்திலேயே எனக்கு சமையல் தெரியாதுன்னு தெரிஞ்சிருக்கு' என்று வாக்குவாதம் செய்தார்.  

ஒருவழியாக, பத்மினியை அமைதிப்படுத்தித் தூங்கவைத்தனர். ஆனால், தூக்கம் வராமல் தவித்த பத்மினி, நள்ளிரவில் எழுந்து, 'இனி நான் வாழ்றதே வீண். செத்திடலாம்' என்று முடிவு செய்து கடிதம் எழுதிவைத்துவிட்டு, சமையல் அறைக்குள் சென்று, காஸ் சிலிண்டரைத் திறந்து, அடுப்பைப் பற்றவைக்கத் தீப்பெட்டியைத் தேடியிருக்கிறார். காஸ் நாற்றம் வீடு முழுக்கப் பரவவே, திடுக்கிட்டு எழுந்த ராஜேஷ், பத்மினியைக் காப்பாற்றி இருக்கிறார். மறுநாளும் பத்மினி, 'என்னை விட்டுடுங்க. நான் எங்காவது போயிடுறேன். இன்னிக்குக் காலையில பேப்பர்ல கூட, 'சமையல் செய்யத் தெரியாததால் பத்மினி தற்கொலைக்கு முயற்சி’ன்னு போட்டிருக்கு. இதுக்கு மேல நான் உயிரோட இருக்கணுமா? நம்ம வீட்டைச் சுத்தி ஆட்கள நிறுத்தி இருக்காங்க. வீட்ல கேமரா வச்சு என்னைப் பார்த்துக்கிட்டே இருக்காங்க' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.

பத்மினிக்கு ஏதோ பிரச்னை எனப் புரிந்துகொண்ட அவர், பத்மினியின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்த்திருக்கிறார். பத்மினியின் செயல்பாடுகளைக் கேட்ட மருத்துவர், மனநல மருத்துவரைப் பார்க்கும்படி கூறியிருக்கிறார். பத்மினியின் பெற்றோர், ''அதெல்லாம் வேண்டாம்'' என்று வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

அடுத்தநாள் அம்மா முன்னிலையில் சமையல் செய்தார் பத்மினி. பத்மினி தடுமாறும்போது அவரது அம்மா திருத்தினார். இப்போது சொதப்பவில்லை. ஆனால், பத்மினியின் காதில்,

மனமே நலமா? 18

'அம்மாவை வெச்சு சமையல் செய்து ஊரை ஏமாற்றுகிறாள் இந்தப் பெண்' என்று குரல் கேட்டது. இதனால், தெருவில் இறங்கி ஓட ஆரம்பித்துவிட்டார். ஒரு சாக்கடையின் அருகில் ஒடுங்கி உட்கார்ந் திருந்த பத்மினியை கை- கால் கட்டிய நிலையில் என்னிடம் கொண்டு வந்தனர்.

'நானே தற்கொலை செய்துக்கிறேன்னு சொல்றேன். என்னைத் தூக்கிட்டுவந்து ஏன் கொலை செய்யணும்னு நினைக் குறீங்க' என்று சண்டைபோட்டார். அவரது நிலை புரிந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்தேன். அவரது குடும்பத்தினர் நடந்த விஷயங்களைப் பற்றி என்னிடம் விவரித்தார்கள்.

திடீர் என ஒரு மாயக்குரல் கேட்பது, நம்மைப் பற்றிய தனிப்பட்ட ரகசியங்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தெரிந்ததாக நினைப்பது, எல்லோரும் நம்மைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று கூறுவது போன்ற அறிகுறிகளைவைத்துப் பார்க்கும்போது பத்மினிக்கு, 'அக்யூட் சைக்கோசிஸ் பிரச்னை’ இருப்பது தெரிந்தது. அதன்படி அவருக்கு மாத்திரை மருந்துகள் பரிந்துரைத்தேன்.

ஆனால், மாத்திரை சாப்பிட மறுத்த பத்மினி, 'என்னைப் பைத்தியக்காரியாக்கப் பார்க்குறீங்களா? உங்க ஆராய்ச்சிக்கு நான் என்ன எலியா? என்னை விட்டுடுங்க... நானே செத்துப்போறேன்' என்று சண்டை போட்டார். அதனால், அவருக்கு மாத்திரைகளுக்குப் பதில், ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. இப்படி ஒரு வாரத்துக்கு மருந்து செலுத்தப்பட்டதில் ஓரளவுக்கு அமைதி அடைந்தார் பத்மினி.

மெல்ல மெல்ல அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறைந்து. பத்து நாள் ஆனது... 'தினமும் ஊசி வலிக்குது... மாத்திரையா தர்றீங்களா?' என்று கேட்கும் அளவுக்குத் தெளிவானார். ஒரே மாதத்தில் இயல்பு நிலைக்குத் திரும்ப, மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்க அறிவுறுத்திவிட்டு, அவரை டிஸ்சார்ஜ் செய்தோம்.

இரண்டு மாதத்தில் நல்ல முன்னேற்றம். இனி எதற்கு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து மாத்திரையை நிறுத்திவிட்டனர். ஒரு வாரத்துக்குப்பிறகு திடீரென அவரைக் காணாமல் குடும்பத்தினர் எல்லா இடங்களிலும் தேடினர். ஆனால், பத்மினி, மருத்துவமனை வாசலில் வந்து நின்றிருந்தார். அவரைப் பார்த்து உள்ளே அழைத்து வந்தோம். 'டாக்டர் எனக்குத் திரும்பவும் குரல் கேக்குது. ரொம்பப் பயமா இருக்கு' என்றார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 10 நாளில் குணம் அடைந்தார். ஒரு மாதத்துக்கு மாத்திரை கொடுத்து, 'வாரம் ஒரு முறை செக்-அப்புக்கு வர வேண்டும்’ என்றேன். ஆறு மாதத்தில் மாத்திரை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தேன். தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து வருகிறார். மாதத்துக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்கிறார். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்ப தால், இப்போது எந்தப் பிரச்னையும் இன்றி பத்மினி சந்தோஷமாக இருக்கிறார்.